
தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று(ஆக.24) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டிற்கு விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை என்று வாதிட்டனர்.
அதற்கு நீதிபதிகள்,“ காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி கர்நாடகா, நீர் திறந்துள்ளதாக கூறுகிறதே? இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரவுகள் அடிப்படையில் பார்த்தோம் என்றால் தற்போதைய நிலையில் நீர் வருவதில் பிரச்னை இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். அப்படி இருக்கையில் நீர் வரவில்லை என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், “ உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையமானது விகிதாச்சார அடிப்படையில் நீர் திறக்க உத்தரவிடுவதில்லை. அதனால்தான் தங்களுக்கு தற்போது நீர் பற்றாக்குறை பிரச்னை இருந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெற உள்ளது அதில் நாங்கள் இந்த விவகாரத்தை வலியுறுத்துவோம் அதே வேளையில் உச்சநீதிமன்றமானது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீரை கர்நாடகம் திறந்து விடுவதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் கர்நாடக அணைகளில் 78 டிஎம்சி நீருக்கு மேலாக இருந்தும் உரிய நீரை தமிழகத்திற்கு வழங்க மறுத்து வருகிறார்கள்” என்று வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, “ தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை ?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கூடுதலான கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம் என்றும், மேலாண்மை வாரியம் அதனை பரிசீலிக்கவில்லை என்றால் மீண்டும் ஆணையத்தில் முறையிடும் படியும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் திறக்கப்பட்ட நீர் மற்றும் பெறப்பட்ட நீரின் அளவு உள்ளிட்டவற்றை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.



