
தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி மேல் கடன் உள்ளது என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சராகக சி.ஜோசப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் பேசுகையில், “ சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும். மன்னர் பரம்பரையில் இருந்து வந்து விடவில்லை. உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் மாதிரி தான் நானும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்கள்.
இந்த பயணத்தில் எனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்தாலும், எனக்காக உடனிருந்த உங்களுக்கும் அதே கஷ்டங்கள், அதே அவமானங்கள். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடன் இருந்தீர்கள்.என்னை முதலமைச்சராக்கியிருக்கிறீர்கள். நான் தேவதூதன் கிடையாது. அது செய்வேன், இது செய்வேன் எனச் சொல்லி ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியம் என்பதை மட்டுமே செய்வேன். இன்றைக்கு தமிழ்நாடு அரசு இருக்கும் நிலைமையை நான் உங்களிடம் சொல்ல வேண்டும். முன்னர் இருந்தவர்கள் 10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டுச் சென்றுள்ளார்கள். தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக வழித்து வைத்து விட்டுச் சென்றுள்ளனர். தூக்க முடியாத சுமையை ஏத்தி வைட்டுச் சென்றுள்ளனர். அப்படி ஒரு நிலையில் தான் இந்த பொதுற்பை நாம் கையில் எடுத்துள்ளோம். அதனால் எல்லாவற்றையும் பார்த்து விட்டு அரசிடம் என்ன இருக்கிறது எது இல்லை என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன். அதை தான் முதலில் செய்ய இருக்கிறேன்.
எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு, மறைவு இல்லாமல் செய்வேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்பை ஸ்ட்ரிக்டாக வைத்திருப்பேன். போதைப்பொருள் தடுப்புக்கு உரிய முயற்சி எடுப்பேன். சட்டம் ஒழுங்கு மூலம் எல்லாருக்குமான பாதுகாப்பை உறுதி செய்வேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான். கல்வி, மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன்.
இந்த விஜய் தவறு செய்ய மாட்டான். அது யாராக இருந்தாலும் சரி, தவறு செய்ய விடமாட்டேன். என் தலைமையில் தான் முழு அதிகாரமும் இருக்கும்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இந்த தவெக அரசில் நன்றாக இருப்போம். சிறுபான்மை சகோதரர்களுக்காக இந்த அரசு உடன் நிற்கும். அதில் சந்தேகம் வேண்டாம் ” என்றார். இதன் பின் தமிழ்நாடு முதலமைச்சராக தலைமைச் செயலகத்தில் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.



