ஆபத்து காத்திருக்கும் மந்திகுளம் பாலம்…விபத்தில் சிக்கிய ஐ.டி பொறியாளர் குடும்பம்!

விபத்தில் சிக்கிய கார்.

மந்திகுளம் பாலம் கீழ் பகுதியில் ஐ.டி பொறியாளர் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அவுட்டர் ரிங் ரோடு திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் ரோட்டில் , வாடிப்பட்டியில் துவங்கி மதுரை- சென்னை நான்கு வழிச்சாலையில் மேலூர் சிட்டம்பட்டி வரை 30 கிலோ மீட்டருக்கு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக வாடிப்பட்டி, மந்திகுளம், சுந்தராஜன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், பணிகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளதால் பாலம் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளன.

காத்திருக்கும் ஆபத்து
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மந்திகுளம் அருகே கட்டப்படும் பாலப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் கீழே மந்திகுளம் கிராமத்திற்கு செல்லும் பகுதியில் உயர்மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தின் மறுபகுதியில் ஒரு மின் விளக்கு கூட கிடையாது. இதன் காரணமாக இருள் சூழ்ந்த இந்த சாலையில் அன்றாடம் விபத்து தொடர்கதையாகியுள்ளது. ஊமச்சிகுளத்தில் இருந்த வாகனங்கள் இந்த பாலத்தை கடக்கும் போது விபத்தில் சிக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலைக்கு நடுவே பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு வசதியில்லாததால் அன்றாடம் இவ்வழியாக வரும் வாகனங்கள் இந்த பிளாட்பாரங்களில் மோதி விபத்தில் சிக்கி வருகின்றன. மேலும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பிளாட்பாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவில் இவ்வழியாக வாகனங்களில் வருபவர்களுக்கு எது சாலை, எது பிளாட்பாரம் என்று தெரியாது. அப்படியான குழப்பத்தில் கார் ஒன்று விபத்தில் சிக்கியது.

விபத்தில் சிக்கிய கார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்தவர் முரளி. இவர் பெங்களூருரில் ஐ.டி.பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி, 2 குழந்தைகள், மாமனார், மாமியாருடன் காரில் மதுரையில் இருந்து ஸ்ரீராமபுரத்திற்கு நேற்று இரவு 7.20 மணியளவில் சென்றார். அப்போது மந்திகுளம் அருகே பாலப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், இவர் வந்த கார், சாலையில் நடுவே இருந்த தடுப்பை தாண்டி உள்ளே பாய்ந்தது. இதனால் காரில் இருந்த அவரது குடும்பத்தினர் அலறி துடித்தனர். இதைப் பார்த்த அவ்வழியே சென்றவர்களும், மந்திகுளம் கிராமத்தினரும் உடனடியாக காரில் இருந்த முரளி குடும்பத்தினரை காப்பாற்றினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி தப்பினார். ஆனால், கார் சேதமடைந்தது.

மீட்கப்பட்ட கார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,” மந்திகுளம் பாலம் ஒரு பகுதியில் மின் விளக்குகளே கிடையாது. இதனால் அன்றாடம் விபத்து நடந்து வருகிறது. மேலும் பாலத்திற்கு கீழே பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் பயணிகள் இருளில் தான் அப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது. மூன்று நாளைக்கு முன் ஒரு கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது போல அன்றாடம் இந்த பகுதியில் விபத்து நடந்து வருகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாலத்தில் வேலை செய்வதே அதன் கீழ் பகுதியில் எதையும் கவனிப்பதில்லை. உயிர்ச்சேதம் ஏற்படும் முன் பாலம் கீழ் பகுதி முழுவதும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். அத்துடன் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்” என்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *