இன்னும் 4 மாதம் தான் தவெக ஆட்சி இருக்கும்… அனிதா ராதாகிருஷ்ணன் கணிப்பு

இன்னும் நான்கு மாதம்தான் தவெக ஆட்சி இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ” 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டேன் அப்போது, இவர் மதுரையில் இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மதுரைக்கு சென்று விடுவார் என்று கூறினார்கள். ஆனால், இன்றைக்கோ, சட்டமன்றத் தேர்தலில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளார் இதனை எப்போது விட போகிறார் என்று கூறுகின்றனர். இம்முறை நான் வெற்றி பெற வாக்களித்த இஸ்லாமிய சகோதரர்கள், தலித் சகோதரர்கள் மற்றும் ஏனைய பெரியவர்கள் அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் யார் யாரோ ஆட்சிக்கு வந்துள்ளனர். எதை எதையோ பேசி வருகின்றனர். இன்னும் நான்கு மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும். தற்போது நடக்கும் ஆட்சியை சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தவெகவில் உள்ள சட்டமன்ற தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு வரட்டும். நானும் ராஜினாமா செய்துவிட்டு வருகிறேன் திருச்செந்தூரில் போட்டியிடலாம் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்கலாமா?

திமுக ஆட்சியில் ரூ.1,000 உதவித்தொகை வழங்கினோம். தவெக ஆட்சிக்கு வந்தால் ரூ. 2,500 தருகிறோம் என்று இல்லாததை வாக்குறுதிகளாக அளித்துள்ளார்கள். அத்துடன் ஆறு சிலிண்டர்களை இலவசமாக தருகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இதை எப்படி தரப்போகிறீர்கள்? மோடியிடம் கேட்டு நைசாக வாங்கி தரப் போகிறார்களா? சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக கட்சி எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவிற்கு அடித்து விரட்டுவோம். அதற்கு திமுகவினர் தயாராக வேண்டும்” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *