
விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வென்றது. ஆனால் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் லீக் கட்சிகளின் 13 சட்டமன்ற உறுபபினர்கள் தவெகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர்.
இதைடுத்து தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைத்தார். இதன் தொடர்ச்சியாக மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். மே 11-ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதன் பின் புதிய சபாநாயாகராக ஜேசிடி பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இன்று (மே 13) சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. விஜய் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்போம் என்று அதிமுக நேற்று அறிவித்தது. அதிமுக கொறாடா அக்ரி கிருஷ்ணமூரத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய உள்ளனர். இது தொடர்பாக திமுக சட்டமன்ற கொறாடா எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” விஜய் அரசு, ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள தொடக்கம் முதலே குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது; ஆட்சியைக் காப்பாற்ற அதிமுகவை இரண்டாக உடைத்து ஆதரவு தரும் அதிமுக சட்டமன் உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் குதிரை பேரம் நடத்துகிறது விஜய் அரசு. அதனால் இந்த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்கிறோம்” என்று அறிவித்துள்ளார்.



