
144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வென்றது. ஆனால் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் லீக் கட்சிகளின் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர்.
இதைடுத்து தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைத்தார். இதன் தொடர்ச்சியாக மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். மே 11-ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதன் பின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இன்று (மே 13) சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. இதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக. மதிமுக, தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக எம்எல்ஏக்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக ஆட்சி அமைய ஆதரவளித்தனர். தவெக 105, காங்கிரஸ் 5, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2 , ஐயூஎம்எல் 2, அமமுக 1 என 144 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் தவெக தலைவர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இதில் பாமக, பாஜக உறுப்பினர்கள் 5 பேர் நடுநிலை வகித்தனர்.



