மீண்டும் வந்தே மாதரம் சர்ச்சை…விஜய் தலைமையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழ்நாட்டில் புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 10-ம் தேதி தவெகவின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ், அர்ஜுன், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிலையில் புதிதாக 23 அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை இன்று (மே 21) வெளியிட்டது. இந்த பட்டியலில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்களின் பெயர்கள் இடம் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கும் விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு வந்தே மாதரம் பாடலுடன் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா தொடங்கியது.

ஏற்கெனவே முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியிலேயே வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், மீண்டும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் அதே நடைமுறை பின்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அப்போது தமிழ்த்தாய்க்கு முன்னுரிமை தரப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், 23 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ ஸ்ரீநாத் அமைச்சராக முதலில் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் வரிசையாக பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அதிமுக ஆட்சியின் முன்னாள் சபாநாயகராக இருந்த தனபாலின் மகன் லோகேஷ், தவெக அமைச்சரவையில் தற்போது அமைச்சராகியுள்ளார். திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, நெல்லை, திருப்பத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. ஆனால், சென்னைக்கு 7 அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் 7 பேர் பட்டியலினத்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். அதே போல 33 பேர் கொண்ட அமைச்சரவையில் 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். செங்கோட்டையன் ஆதரவாளரான சத்யபாமாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *