
மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறுகிறது. ,இவ்விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவின் போது தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக சரிந்துள்ளது. போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தால், மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என்ற அச்சம் நிலவி வந்தது. இந்த நிலையில், தண்ணீரைக் கொண்டு மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என்று பொதுப்பணித் துறையினர் தீவிர ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தனர். வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியே தண்ணீர் திறக்கப்பட்டால் வறண்டுபோன நிலம் மற்றும் வெயில் காரணமாக தண்ணீர் ஆழ்வார்புரத்திற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மொத்தமாக 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 24) முதல் வருகிற ஏப்ரல் 29-ம் தேதி வரையில் தண்ணீர் திறக்க முடிவு செய்து, வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக மதுரை கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதற்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாயில் தண்ணீரை தேக்கி வைத்து அங்கிருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.



