பெங்களூருவில் 3 கொலைகளை செய்த இளம்பெண்: புதுச்சேரியில் தட்டித் தூக்கிய போலீஸ்

கொலை செய்யப்பட்ட சோமசுந்தர், முத்துலட்சுமி, சுப்ரியா

பெங்களூருவில் காதலனுடன் சேர்ந்து தாய், தந்தை, தங்கையை கொலை இளம்பெண் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீகஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சோமசுந்தர்(52), அவரது மனைவி முத்துலட்சுமி(48) மற்றும் அவர்களது இளைய மகள் சுப்ரியா(19) ஆகியோரின் உடல்கள் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டனர். ஜூன் 22-ம் தேதி இரவு இந்த மூவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகளாக ஒயிட்ஃபீல்ட் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக கே.ஆர்.புரம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்திய போது, சோமசுந்தரின் மூத்த மகள் ஸ்வேதா தான், தனது காதலன் கென்னத் உதவியுடன் சேர்ந்து மூன்று கொலைகளையும் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலைகள் நடந்த சிறிது நேரத்திலேயே ஸ்வேதா பெங்களூருவில் இருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இருவரையும் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் ஸ்வேதா,புதுச்சேரியில் அவர் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.

தலைமறைவான கென்னத், கைது செய்யப்பட்ட ஸ்வேதா.

பெங்களூருவை பதற வைத்த கொலைகள் தொடர்பாக போலீஸார் கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் ஸ்வேதா தன்னுடன் கல்லூரியில் படித்த கென்னத் (26) என்பவரை காதலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்வேதா, கென்னத்துடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அத்துடன் பெற்றோரின் பெயரில் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கடன் கொடுத்த தனியார் வங்கி சோமசுந்தரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் கோபமடைந்த சோமசுந்தரம், கடன் விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தனது மனைவி முத்துலட்சுமி, இளைய மகள் சுப்ரியா ஆகியோருடன் கடந்த 22-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மூத்த மகள் ஸ்வேதாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சோமசுந்தரம் அங்கிருந்து வெளியேறிய‌ நிலையில், ஸ்வேதா தனது தாய் முத்துலட்சுமி, தங்கை சுப்ரியா ஆகிய இருவரையும் கூர்மையான கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் கென்னத்தின் உதவியால் இருவரின் உடலையும் அங்கிருந்த வேறு அறைக்கு மாற்றியுள்ளார். பின்னர் மனைவி மற்றும் இளய மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த தந்தை சோமசுந்தரத்தை ஸ்வேதாவும், கென்னத்தும் இணைந்து கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சோமசுந்தரம் அங்கிருந்து வெளியேறி, தப்பிக்க முயற்சிக்கும் போது படிக்கட்டில் சரிந்து விழுந்துள்ளார். மூவ‌ரும் அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அங்கேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்வேதா பஸ் மூலமாகவும் காதலன் கென்னத் இருசக்கர வாகனம் மூலமாகவும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலர், மூன்று பேரின் உடல்களையும் அருகெ உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். அங்கு அவர்கள் மூவரும் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக மூவரின் உடல்களும் பவுரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புதுச்சேரியில் பதுங்கியிருந்த ஸ்வேதா கைது செய்யப்பட்டார்..தலைமறைவாகியுள்ள கென்னத்தை தேடி வருகிறோம்” என்றனர். பெற்றோர், தங்கையை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *