அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதல்: ஈரானில் 555 பேர் பலி

தெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதல்.

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈரானில் 131 நகரங்களில் 555 பேர் பலியானார்கள்.

ஈரான் மீது தாக்குதல்
அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் தலைமை மதகுரு கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சௌதி அரேபியா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

555 பேர் பலி
இந்நிலையில் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் முழுவதும் இதுவரை 131 நகரங்களில் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே ஈரான் இன்று அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சௌதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான அமெரிக்க விமானங்கள்
ஈரான் தற்போது 40 நாட்கள் அரசு துக்கத்தையும் ஏழு நாள் விடுமுறையையும் கடைப்பிடித்து வருகிறது. இந்தத் தாக்குதல்களில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும், பல கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த நிலையில், குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (மார்ச் 2) காலை பல அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார், ஆனால் விமானிகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுக்கு மத்தியில், சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான நெட் பிளாக்ஸ், ஈரானில் இணைய முடக்கம் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருவதாகக் கூறியது. முன்னதாக, குவைத்தில் ஒரு அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானதாக ஈரான் கூறியது. விமானம் கீழே விழுவதையும், விமானி நடுவானில் இருந்து வெளியேறுவதையும் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *