
நான்சி கிரேவால்,
பஞ்சாபைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கனடாவில் 18 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்தவர் நான்சி கிரேவால் (45). இவர் கனடாவில் வசித்து வந்தார். மதம், அரசியல் குறித்து இவர் யூடியூப்பில் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பஞ்சாபிகள் மத்தியில் மிகவும் பிரபலமான யூடியூபரானார். இந்த நிலையில், மார்ச் 3 இரவு 9.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் நான்சியை கத்தியால் சரமாரியாக குத்தினர்.
இதனால் ரத்த வெள்ளத்தில் நான்சி கிரேவால் சரிந்தார். தகவல் அறிந்து வந்த அவசர சிகிச்சை பிரிவினர் நான்சியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 18 முறை கத்தியால் குத்தப்பட்டதால் தனது மகள் உயிரிழந்ததாக நான்சி கிரேவாலின் தாய் கூறியுள்ளார்.
நான்சி கிரேவால், காலிஸ்தான் பிரிவினைவாதத்தை மிக தீவிரமாக எதிர்த்து வந்துள்ளார்.. அத்துடன் தடை செய்யப்பட்ட எஸ்எஃப்ஜே அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னூன் மற்றும் அவரது பிரிவினைவாத கருத்துகளை தொடர்ந்து விமர்சித்து நான்சி வீடியோ வெளியிட்டு வந்தார். அத்துடன் “உங்களுக்கு பிரச்னைகள் இருந்தால் அதை இந்தியாவில் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வெறுப்பைப் பரப்பக் கூடாது” என்று காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதன் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இவ்வழக்கு தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நான்சி கிரேவால் கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவில் இந்தியாவை சேர்ந்த யூடியூபர் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



