அமெரிக்கா ஷாக்… ரேடாரில் சிக்காத எஃப்- 35 போர் விமானம் மீது ஈரான் புரட்சி படைதாக்குதல்

அமெரிக்காவின் எஃப்- 35 போர் விமானம்

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான எஃப்- 35 மீது முதல் முறையாக ரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை முதல் முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் மீது கடந்த 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஈரானின் உச்ச தலைவர் உள்பட ராணுவ அதிகாரிகள், தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் தீப்பிடித்து எரிகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் எஃப்- 35 போர் விமானத்தை தாக்கிய முதல் நாடு என்ற பெருமையை ஈட்டியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க விமானங்களில் ஒன்றாகவும், அந்நாட்டின் ஐந்தாம் தலைமுறைப் போர் திறன்களின் முதுகெலும்பாகவும் திகழும் எஃப்- 35 லைட்டிங் 2 விமானத்தை நேற்று ஈரானின் புரட்சி படை தாக்கியுள்ளது. அமெரிக்க விமானப்படைக்குள்ளும், அதன் நட்பு நாடுகளிடையேயும் மிகுந்த தேவை உள்ள இந்த ரக விமானத்தை, ஏற்கனவே 19-க்கும் மேற்பட்ட நாடுகள் இயக்கி வருகின்றன. இதற்குக் காரணம் ரேடாரில் எளிதில் சிக்காத தொழில்நுட்பத்துடன், எதிரிகளின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவி தாக்கவல்லது.

அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான சிஎன்என் அறிக்கையில், ஈரானின் தரை-வான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் ரக விமானமான அது, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம் ஒன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை உறுதி செய்தது. மேலும், அந்த விமானத்தின் விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும், இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகின் அசைக்க முடியாததாக கருதப்படும் எஃப்- 35 போர் விமானம் தாக்கப்பட்டதால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *