
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
டொனால்ட் டிரம்ப் கோரிக்கையை ஏற்று ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீது புதிய தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஈரான் மீது போர்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை கடந்த 28-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் உள்பட ராணுவ அதிகாரிகள், தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் தீப்பிடித்து எரிகின்றன.
எண்ணெய் விலை
இதற்குப் பதிலடியாக ஈரானின் எரிசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளது. இதற்குப பதிலடியாக உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) நிலையங்களில் ஒன்றான கத்தாரின் ராஸ் லஃபானை ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கின. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலால், உலகளவில் பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 120 டாலர்களை தொட்டுள்ளது. இந்த தாக்குதலால், சுமார் 17 சதவீத எரிவாயு உற்பத்தி தடைபட்டுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. சுமார் 90 சதவீத இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
2,000 பேர் உயிரிழப்பு
இந்த போரால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் ரெட் கிராஸ் சொசைட்டி தகவலின்படி, ஈரானில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களால் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் குறைந்தது 1,000 பேரும், இஸ்ரேலில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். 13 அமெரிக்கப் படைவீரர்கள் போர்த் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; மேலும் இருவர் போர் சாராத காரணங்களால் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகு அறிவிப்பு
உலக நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்திய இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பெஞ்சமின் நெதன்யாகுவிடம், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளை ஏற்று கடலோரத்தில் இருக்கும் ஈரானிய முக்கிய எரிவாயு வயல்கள் மீது புதிய தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கிறது. மேலும், யுரேனியத்தை செறிவூட்டும் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் ஈரானிடம் இனி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ராணுவ தளங்கள்
இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று குறைந்து 102.35 டாலராக வர்த்தகமாகிறது. இந்திய கமாடிட்டி சந்தையிலும், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ரூ.8,792 ஆக சுமார் 200 ரூபாய் சரிந்து வர்த்தகமாகிறது. எனினும், ஈரான் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும், மத்திய கிழக்கு நாடுகள் கடுமையான சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இங்கிருந்து செயல்படுவது தான், ஈரானின் இந்த தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
11-வது கடற்படைப யணம்
இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலும் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளை அனுப்புவதை அமெரிக்கா துரிதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. குறைந்தது 2,,200 கடற்படை வீரர்களைக் கொண்ட 11-வது கடற்படைப் பயணப் பிரிவு வரும் நாட்களில் சான் டியாகோவிலிருந்து புறப்பட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை சீராக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் எளிதாக கடக்க வேண்டும். அது, போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே சாத்தியம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



