ஹோர்முஸ் நீரிணை அருகே பரிதாபம்: இந்திய கப்பல் கேப்டன் மாரடைப்பால் மரணம்

ஹோர்முஸ் நீரிணை அருகே எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள்.

ஹோர்முஸ் நீரிணை அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற வணிகக் கப்பலில் கேப்டன் ராகேஷ் ரஞ்சன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியைச் சேர்ந்தவர் ராகேஷ் ரஞ்சன்(43). இவர் வணிக தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலில் கேப்டனாக பிப்ரவரி 2-ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதல் காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து சுமார் 14 கடல் மைல் தொலைவில் ராகேஷ் ரஞ்சன் சென்ற கப்பல் சிக்கிக் கொண்டது.

இந்த நிலையில் மார்ச் 18-ம் தேதி ராகேஷ் ரஞ்சன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனது சகோதரர் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசும், ஜார்க்கண்ட் மாநில அரசும் உதவிட வேண்டும் என்று ராகேஷ் ரஞ்சனின் மூத்த சகோதரர் உமேஷ் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் ” ராகேஷ் ரஞ்சனுக்கு சேர வேண்டிய நிதிப் பலன்கள் மற்றும் இதர சலுகைகளை வழங்குவதில் அந்தக் கப்பல் நிறுவனம் எவ்விதத் தடைகளையும் ஏற்படுத்தக் கூடாது; இது தொடர்பாக அரசாங்கம் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். எனது சகோதரரின் உடலை மிக விரைவாக எங்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு, துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் ஆகியவற்றை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ரஞ்சனின் உடலைத் திரும்பக் கொண்டுவருவதற்குத் தேவையான உதவிகளை செய்யக் கோரி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் சோரன் மற்றும் ராஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சேத் ஆகியோருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

எனது தம்பி அந்தக் கப்பலின் கேப்டனாகப் பணியாற்றி வந்தார். மார்ச் 18-ம் தேதி, அவர் மயக்கமடைந்து தனது இருக்கையிலிருந்து கீழே விழுந்ததாகவும், அவருக்கு மருத்துவ உதவி அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கப்பல் நிறுவனம் எங்களுக்குத் தகவல் அளித்தது. எனினும், அவரை விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல அனுமதி கிடைக்கவில்லை. பின்னர், படகு மூலம் அவர் துபாயில் உள்ள ‘போர்ட் ரஷீத்’ துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சனின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம். ரஞ்சனின் உடல், காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் ‘போர்ட் ரஷீத் பகுதியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது,

நாங்கள் பூர்வீகமாக பிஹார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள பிஹார் ஷெரீப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ரஞ்சன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ராஞ்சியில் வசித்து வந்தார். ரஞ்சன் பணியாற்றிய நிறுவனத்தின் சில பிரதிநிதிகள் அவரது உடலை ஒப்படைப்பதற்கான சட்டரீதியான நடைமுறைகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் , ரமலான் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நாள் விடுமுறையின் காரணமாக அந்த நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து ரஞ்சன் உடலைப் பெற்றுத் தர வேண்டும்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *