
சூடானில் திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
சூடானின் வடக்கு டர்பரில் நேற்று திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த மக்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பொதுமக்களுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் உடைமைகளுக்கு எதிராக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி, பொதுமக்களும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அரசின் ராணுவப் படைகளே காரணம் என்று உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன, ஆனால், இதுவரை ராணுவத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.



