
நான் நடைப்பயிற்சி செல்லும் பூங்கா ஒரு முதியோர் கூடாரம். ஆனால், அப்படிச் சொன்னால் பெரியவர்கள் சண்டைக்கு வருவார்கள். வயது வெறும் எண்தான்.. ஐ எம் திஸ் மச் ஓல்ட் இல்லை.. திச் மச் யெங்… என்றெல்லாம் கிழவர்கள் ரகளை செய்து கொண்டிருக்கும் இடம். சங்கம் எல்லாம் வைத்து விட்டார்கள். சங்கத்தில் உள்ளதிலேயே இளம் கிழவனான நானும் ஐக்கியம்.
என்னதான் சங்கம் எல்லாம் வைத்தாலும் கூட, ஒரே துறை சார்ந்து பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் தான் ஒண்ணுமண்ணாகத் திரிவார்கள். ஏதேனும் நிகழ்ச்சி என்றால் அனைவரும் சேர்ந்து கொள்வோம். இப்படித் தான் ஒரு அரசுத் துறையில் பெரிய பதவியில் இருந்த பெரியவர் ஒருவரின் பேத்திக்குத் திருமணம். எங்கள் நடைப் பயிற்சி சங்கத்திலிருந்து பெரும் கூட்டமாக எல்லோரும் மாலை வரவேற்பிற்குக் கிளம்பிச் சென்றோம். ஊருக்கு வெகு தொலைவில் விவசாய நிலத்தை அழித்துக் கட்டப்பட்ட வெள்ளை மாளிகையின் ஜாடையிலான திருமண மண்டபம்.
அந்தத் துறை சார்ந்த நண்பர்கள் கூட்டத்தின் தலைவர் போல் இருக்கும் பெரியவர் ஒரு ஜாடையில் நடிகர் செந்தாமரை போல் இருப்பார். நம் வசதிக்காக அவரை செந்தாமரை என்றே அழைப்போம். அவர் தனது அந்தக் கால அதிகாரி தோரணை சஃபாரியில் வந்திருந்தார். தலைக்கு கருகரு டை என்றாலும், மீசை முழு வெள்ளையாக செந்தாமரை ஜாடையை இன்னும் துல்லியமாக எடுத்துக் காட்டியது. வழக்கம் போலவே அவர் பேச்சை ரசிக்கும் ரசிகர் குழாமாக நாங்கள் எல்லோரும். வெளியே நாதஸ்வரம், செண்டை மேளம். உள்ளே ஏதோ இசைக்குழுவின் வாத்திய இசைக் கச்சேரி. இத்தனைக்கும் மீறி செந்தாமரை அண்ணனின் நக்கலும், நையாண்டியுமான பேச்சுக்களை கேட்டு நாங்கள் சிரிக்கும் சத்தம் !
நிச்சயதார்த்தம் முடிந்து, மணமக்கள் ரிசப்ஷனுக்காக மேடைக்கு வந்துவிட்டார்கள். பரிசு தந்து படம் எடுத்துக் கொள்ள உறவினரும், நண்பர்களும் வரிசையில் நிற்க, செந்தாமரை அண்ணன் நாற்பத்தியாறாவது ஆளாக நிற்க, அவரைப் பின்தொடர்ந்து நாங்கள். மணமேடைக்குச் செல்லும் மூன்று படிகளில் நடுப்படியில் சாய்ந்து பதினான்கு அல்லது பதினைந்தாவது ஆளாக வரிசையில் நின்றிருந்த ஒரு தாய்க்குலத்தைக் காட்டி, செந்தாமரை அண்ணனின் பிரதம சீடர், “அண்ணே, செல்வி மேடம் வந்திருக்காங்க… பாத்தீங்களா?“ என்றார். செந்தாமரை, மீசையை நிஜ செந்தாமரை போல ஒரு முறை ஒதுக்கி விட்டுக் கொண்டு, “வந்ததுமே பாத்துட்டேன்,“ என்கிறார் சிரிப்போடு. பிரதம சீடர், “அந்தக் காலத்துல நமக்கு அண்ணியா வந்திருக்க வேண்டியவங்க… என்னவோ, மிஸ்ஸாகிப் போச்சு… அண்ணன் கொஞ்ச நா தேவதாஸா திரிஞ்சாரு… அதெல்லாம் ஒரு காலம்…“ என்றார் சற்று வருத்தமாக. நான் அந்த செல்வி மேடத்தைப் பார்த்தேன். ஒரு காலத்தில் செந்தாமரையைக் காதலித்த அல்லது காதலித்ததாக அவர் நம்பிய அந்த செல்வி மேடம் நடிகர் ஆசீஷ் வித்யார்த்திக்கு பட்டுப்புடவை கட்டி, நகைகள் போட்டு, மேக்கப் போட்டு விட்டது போல் கம்பீரமாக கம்பியில் சாய்ந்து நின்றிருந்தார். அதனாலென்ன, பொன்னம்பலம் – வடிவுக்கரசி காம்பினேஷன் எல்லாம் கடவுள் சித்தமல்லவா? நான் பார்த்த கணத்தில் அவரும் எங்கள் பக்கம் பார்த்தது போல் இருந்தது.
மற்றொரு நண்பர், “ஏண்ணே, அண்ணியா வரவேண்டியவங்கன்னு சொல்றீங்க.. அவங்க சார் பக்கம் திரும்பிக் கூட பாக்கல்லயே !“ என்று செந்தாமரையின் வாயைக் கிண்டினார். எங்கள் வாலிப வயோதிக அன்பர்கள் இப்படித் தான் தூண்டில் போடுவார்கள். செந்தாமரை, “அதெல்லாம் வந்ததுமே பாத்துட்டாப்ல. சஃபாரில இன்னும் அந்த பழைய சூப்பிரண்டு கம்பீரத்துல தா இருக்கீங்கன்னு கண்ணுலயே சொல்லீருச்சு,“ என்றார். “அது எப்ப? நாங்க பக்கத்துலயே தான இருக்கோம் !“ என்ற வியந்தார் அவரது இரண்டாவது சீடர். “எல்லாம் கண்ணுலயே சொல்லீரும். நீங்க மட்டும் தான் வந்தீங்களா? அக்கா வரல்லயா? மீசைக்கு டை அடிச்சாத்தா என்ன? அதுக்கு எவ்வளவு செலவாகிறப்போகுது? ஏன் ப்ளூ பேண்டுக்கு பிரவுன் சட்டை போட்ருக்கீங்கன்னு, பல விஷயத்த கண்ணுலயே சொல்லீருவாப்ல… அதெல்லாம் உங்களுக்கு தெரியாது தம்பி… யாரும் அறியா பொழுதினிலே … இருவிழியாலே மாலையிட்டாள் னு கண்ணதாசன் எழுதியிருக்கான்ல… வந்ததும் மாலைய போட்டுருச்சு…” என்றார் செந்தாமரை.

இந்த வரியை அவர் தண்டபாணி தேசிகர் குரலில் பாடியது போல் இருந்தது. பாட்டு அப்படியா வரும்? நான் மனதில் பாட்டை அசை போட்டேன். இது நாள் வரை சுசீலாம்மாவின் காந்தக் குரலில் மயங்கி பாடல் வரிகளை நினைத்துப் பார்த்ததே இல்லை. வரிகளை மறக்கச் செய்யும் வசீகரக்குரலல்லவா எங்கள் சுசீலாம்மாவிற்கு !
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும்
தாயின் மொழி கேட்டேன்
இளகும் மாலைப் பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையிள் இல்லம் இதுவென்றான்
இருவிழியாலே மாலையிட்டான்
இருவிழியாலே மாலையிட்டான்
காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே…
ஆஹா…. தலைவர் தன் வசதிக்கு வரிகளை மாற்றியிருக்கிறார் ! “சார், பாட்டுல நீங்க சொல்ற மாதிரி வராதே…” என்றேன். செந்தாமரை அண்ணன் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. ”தம்பி, கண்ணதாசன் மிக்ஸிங் போட்டுட்டு அவர் பாட்டுக்கு எழுதிக்கிட்டே போவாரும்பாங்க. அத நா எனக்கு பிடிச்சது மாதிரி மிக்சிங் போட்டுக்கக் கூடாதா?“ என்றார். அவர் சொன்னதும் சரிதான். இலக்கிய வரிகளை நம் வசதிக்கு மாற்றிக் கொண்டால் அவை இன்னும் சற்று மனதுக்கு நெருக்கமாக ஆகிவிடுகின்றன தானே..

மனதுக்குள் இருவிழியாலே மாலை இட்டான்… இட்டாள் என்ற வரியை மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டே இருந்தேன். மணமக்களுக்கு பரிசு தந்தோம். வாழ்த்தினோம். படம் எடுத்துக் கொண்டோம். நண்பர்கள் தத்தமது கைபேசிகளை புகைப்பட நிபுணரிடம் கொடுத்து சொந்தமாக அந்த நினைவுகளை சேகரித்துக் கொண்டார்கள். சாப்பிட்டோம். வெளியே வந்தோம்.
பார்க்கிங்கில் விளக்குச் சரங்கள் தொங்கும், விளக்குச் சரங்களைச் சுற்றிக் கொண்ட மரங்களுக்கு நடுவில் ஆசீஷ் மேடம் நின்று கொண்டிருந்தார். ஒரு கணம் அண்ணன் செந்தாமரையை நிமிர்ந்து பார்த்தார். செந்தாமரை அண்ணன் சொன்னது நிஜம்தான். “போய்ட்டு வரேன்.. சார் கார எடுக்க போயிருக்காங்க…” என்று அவர் கண்களால் சொன்னது எனக்கே புரிந்தது.
– ச.சுப்பாராவ் ( தொடரும்)
1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/
4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/
5)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/
6)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-6/




கிளைமாக்ஸ்ல fullstop வைச்சுட்டுட்டீங்களே….. சரி தொடருங்கள்….
மீண்டும் தொடரும்..
Feelings forever age not the fact.
ஆமாம்..
அந்த ஆஷிஷ் வித்யார்த்தி பட்டுப்புடவை… கொஞ்சம் மெரண்டுதாம் போனேன். செந்தாமரை பிராண்ட் தோள் குலுக்கல் உண்டா அவரிடம்?
கம்பீரமான காதல், காலத்தின் எதிரொலி.
நன்றி.
‘இன்னோரு ஜென்மம் இருந்தா
அப்போது பொறப்போம், ஒன்னோடு ஒன்னா
கலந்து அன்போட இருப்போம்…
அது கூடாம போச்சுதுன்னா
என் ராசாவே…
நான் வெண்மேகமாக, விடிவெள்ளியாக
வானத்தில் பொறந்திருப்பேன்.
என்னை அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்…’
எங்க ஊர் ராசாத்தி படத்தில் ஷைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன் விசும்பலில் காதல் தோல்வியின் வலி மட்டுமே தெரியும்…🎶
‘இருவிழியாலே மாலையிட்ட’ இந்தக் காதல் தோல்வி பாடலை சுகமாக அனுபவிப்பதற்காக வேண்டி ஒரு முறை காதலித்து தோற்கவேண்டும் போலிருக்கிறது… ❤️