
பாவேந்தர் பாரதிதாசன்
பிரபலங்களின் பள்ளிநாட்கள் பற்றிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பான பள்ளிப் பிராயம் என்றொரு தொகுப்பை சமீபத்தில் படித்தேன். அதில் அசோகமித்திரன் முதல் மனுஷ்யபுத்திரன் வரை பல பிரபல எழுத்தாளர்கள் தம் பள்ளி அனுபவங்களைச் சொல்லி இருந்தார்கள். ஐம்பது – அறுபது ஆண்டுகளுக்கு முன் பள்ளி செல்வது என்பது குழந்தைகளுக்கு மிக் கொடூரமான அனுபவமாகவே இருந்தது என்பது என் வயதையொத்தவர்களுக்குத் தெரியும். சொர்ணக்கா ஜாடை டீச்சர்கள். காரணமே இல்லாமல் அடிக்கும் சிடுமூஞ்சி சார்கள்… என் அனுபவமும் அதே தான் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. அதிலும் எனது சிறுவயதுக் காலம் மிக வித்தியாசமானது.
நான் பிறக்கும் போது எனது தந்தையார் டெல்லியில் பட்டயக் கணக்காளராக இருந்தார். நானும், அக்காவும் டெல்லியில் படித்துக் கொண்டிருந்தோம். எங்கள் மூத்த அண்ணன் மட்டும் தாத்தா பாட்டிக்குத் துணையாக மதுரையில் இருந்து படித்து வந்தார். குடும்பச் சூழல் காரணமாக நாங்கள் டெ ல்லியிலிருந்து மதுரைக்கே வர நேர்ந்தது.
டெ ல்லியில் மூன்றாவது படித்து வந்த நான் அந்தப் பாடப்புத்தகங்களின் தரத்தின் அடிப்படையில் இங்கு நான்காவதில் சேர்த்துக் கொள்ளப் பட்டேன். கல்வியாண்டின் நடுவில் அரைப்பரிட்சை சமயத்தில் இப்படியான மாற்றம். டெ ல்லியில் என் தாயார் வீட்டில் கற்றுத் தந்த தமிழை வைத்து நான் கோகுலம், விகடன், கல்கி எல்லாம் படித்தாலும் எனக்கு எழுதத் தெரியாது. பிரித்து எழுது, சேர்த்து எழுது, வாக்கியத்தில் அமை என்றால் நான் என்ன செய்வேன்? தமிழில் கடிதமும், கட்டுரையும் எழுதுவதோடு, வரலாறு, புவியியல், அறிவியல் என்று பல அவியல்கள் வேறு ! அதைவிடப் பெரிய கொடுமை நான் இந்தியில் வாய்ப்பாடு படித்தவன். இங்கு காலை எட்டு மணிக்கு வாய்ப்பாடு வகுப்பில் அடிவயிற்றிலிருந்து கோரஸாக வாய்ப்பாடு வேறு சொல்ல வேண்டும்.
எட்டு வயதில் வாழ்க்கையை வெறுத்த குழந்தையை நீங்கள் அறிவீர்களா? அது நான்தான். தினமும் காலையில் அத்தனை அழுகையோடு பள்ளி செல்லும் கொடுமை. என் அண்ணன் என்னை விட 11 வயது மூத்தவர். அப்போது அவர் கல்லூரியில் படித்து வந்தார். அவர்தான் என்னை தினந்தோறும் விதம் விதமாக ஏதேனும் ஒன்றைச் சொல்லி சமாதானம் செய்து பள்ளிக்குக் கொண்டு விடுவார். வழக்கம் போலவே நான் அழுத ஒரு காலை வேளையில் அண்ணன்,
தலைவாரிப் பூச்சுடி உன்னை பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலை போல ஏனங்கு நின்றாய் ? – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்?
என்று வித்தியாசமான உரத்த குரலில் பாடியபடி “அழாதடா.. அண்ணன் உன்ன சைக்கிள்ள கொண்டு போய் விடறேன்,“ என்று என் கண்ணைத் துடைத்து விட்டார். புதிய பள்ளி, தெரியாத மொழி என்று நான் திண்டாடுவதால் என் தாயார் என்னிடம் எது தெரியவில்லை என்றாலும் உடனே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், தயங்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். எனவே நான் என் மனதில் தோன்றிய சந்தேகங்களை அழுது கொண்டே கேட்டேன்.

சீர்காழி கோவிந்தராஜன்.
வழக்கமாக என் அண்ணன் உற்சாகமான நேரங்களில் ”இது நீரோடு செல்கின்ற ஓடம்“, “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ”,“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்” என்று சீர்காழி குரலில் பாடுவார். இன்று வேறொரு உரத்த குரல் என்பதால் “இது யார் பாடினது?“ என்றேன். “நாகூர் ஹனிபான்னு ஒரு பெரிய பாடகர்” என்றார் அண்ணன். பாட்டின் மெட்டு எங்கள் தாயார் நவராத்திரி கொலுவின் போது பாடும் தீராத விளையாட்டுப் பிள்ளை போல் இருந்தது. “இது தீராத விளையாட்டுப் பிள்ளை ராகமா?“என்றேன். “இருக்கலாம்” என்றார்
அண்ணன். “இது உன்ன மாதிரி சின்ன பிள்ளைங்க ஸ்கூல் போக அழக் கூடாது. நல்லா ஜாலியா போய் நல்லா படிச்சு முன்னேறணும்னு பாரதிதாசன் எழுதினது,“ என்றார் கூடுதல் தகவலாக. எனக்கு பாரதியாரைத் தெரியும். “பாரதி தாசன்னா யாரு?“ என்றேன். “அவரு பாரதியாரோட சிஷ்யர்”, என்றார் அண்ணன். ”என்ன படம்?” என்றேன். “தெரியல்ல, ஏதோ பழைய படமா இருக்கும்.” என்றார் அவர். இப்படி பேச்சுக் கொடுத்து எப்படியோ எனது அழுகையை நிறுத்தி சைக்கிளில் கேரியரில் உட்கார்த்தி பள்ளிக்குக் கொண்டு போய் விட்டார்.

நாகூர் ஹனிபா
அதன் பிறகு தினமுமே நான் அழுவதும், அண்ணன் ஹனிபா குரலில் தலைவாரி பூச்சூட்டி பாடி என்னை பள்ளிக்கு அழைத்து அல்லது மனோகரா பாணியில் இழுத்துச் செல்வதுமாக நாட்கள் கடந்தன. அழுகையினூடாக அறிமுகமான பாவேந்தர் பாடல்கள் போல் எத்தனை எத்தனையோ பாடல்கள், கவிஞர்கள்… இன்று நானே ஒரு எழுத்தாளன்… வீட்டில் இசையும், தமிழும் சொல்லித் தர பெரியவர்கள் இருந்த நல்ல சூழல் அமையப் பெற்ற பாக்கியவான் நான் என்று இப்போது புரிகிறது.
வளர்ந்த பிறகு, இதே பாடலை வானொலியில் பானுமதி வேறொரு ராகத்தில் பாடியது என்னை ஈர்க்கவில்லை. அது ரங்கோன் ராதா படத்தில் டி,ஆர்.பாப்பா இசையில் அவர் பாடியது என்று தெரிந்தது. அதன் பிறகு சீர்காழி கோவிந்தராஜனின் ஒரு கச்சேரியில் அவர் திடீரென்று இந்தப் பாடலை பாட ஆரம்பித்த போது புல்லரித்தது. சீர்காழி பாடல்களுக்கே உரிய மோர்சிங்கின் டொய்ங்க்… டொய்ங்க்… நாதத்துடன். அன்று புதுக்கோட்டை மஹாதேவன் என்ற மிகப் பெரிய வித்வான் மோர்சிங் வாசித்தார் என்று நினைவு. பாடலை விட நான் மோர்சிங்கைத் தான் அன்று அதிகம் ரசித்தேன். ஏனெனில், என் மனதில் நிறைந்திருந்தது ஹனிபாவின் ஓங்கிய வெண்கலக் குரல். ஹனிபாவின் நூற்றுக்கணக்கான அருமையான பாடல்கள் மிக மிக அற்புதமானவை என்றாலும் கூட, அவரை நினைக்கும் போதெல்லாம், ஏனோ என் மனதில் தலைவாரி பூச்சூட்டி உன்னை தான் கிண்ணென்று எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தக் கட்டுரைக்காக ஹனிபாவின் அந்தப் பாடலை யூடிப்பில் கேட்டேன். ஹனிபாவின் வயதையொத்த கிழவர்கள் ஹார்மோனியத்திலும். தபேலாவிலும், கிளாரினெட்டிலும் பின்னணி இசை வழங்க, நடுநாயகமாக கம்பீரமாக உட்கார்ந்து ஹனிபா தலைவாரி பூச்சூட்டி உன்னை… என்கிறார். சக கிழவர்கள் அதே வரியை அப்படியே வாங்கி வாசிக்கிறார்கள். நான் 50 ஆண்டுகள் பின்னோக்கிய காலப்பயணத்தில் எங்கள் சிம்மக்கல் பத்தாம் நம்பர் வீட்டின் இரவா, பகலா என்று தெரியாத அரைஇருட்டு வராந்தாவில் கன்னத்தை இறுக்கப் பிடித்து, தலைவாரி, அம்மா கன்னத்தில் அப்பிவிட்ட சிந்தால் பௌடருடன் அழுதபடி நிற்கிறேன். பக்கத்தில் ஹனிபாவாக அண்ணன் தலைவாரி பூச்சூடி பாடிக் கொண்டிருக்கிறார்./
- ச.சுப்பாராவ் ( தொடரும்)
1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/
4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/
5)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/




அண்ணாவுக்கும் உங்களுக்கும் 11 வயது இடைவெளி என்றால் பாசத்திற்கும் அன்பிற்கும் அளவே இல்லை. பெற்றோரை தவிர அண்ணாவும் கொஞ்சி போற்றி வளர்த்திருப்பார் என எண்ணுகிறேன். எனது பள்ளி நாட்களில் RC ஸ்கூல்ல Prayer assemblikku முன் தலைவாரி பூச்சூட்டி உன்னை பாடல் தான் தினமும் கேட்போம். 50 வருடத்திற்கு முன் சிறந்த அறிவொளி பாடல். ஆனால் அணிபா குரலில் நான் கேட்டதில்லை. அண்ணாவுக்கு நல்ல குரல்வளமா?எனக்கு ஒரு சந்தேகம், நீங்கள் டெல்லியில் படிக்கவில்லை என்றால் இவ்வளவு தமிழ் தாகம் வந்திருக்காதோ? நினைவே சங்கீதம் தொடரினை தொடருங்கள்…..
நன்றி… ஹனிபா பாடியது அற்புதமாக இருக்கும் யூட்யூபில் இருக்கிறது. கேட்டுப் பாருங்கள்.