
என் இசை வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பல குருநாதர்களில் முக்கியமானவர் ரமணன். ரமணனிடம் நான் முறையாக மாணவனாகச் சேர்ந்து இசை கற்கவில்லை. உண்மையில் அவர் என்னோடு பணிபுரிந்தவர். பின்னர் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று பல ஊர்களிலும் பணியாற்றி, பணி ஓய்வை நெருங்கும் காலத்தில் உதவிக் கோட்ட மேலாளராக மீண்டும் என்னோடு இணைந்து கொண்டவர். குடும்பமே இசைக் குடும்பம். அரசு உயரதிகாரியான அவரது தகப்பனார் அற்புதமான ஹார்மோனியக் கலைஞர். அருமையாக தபேலாவும் வாசிப்பவர். ரமணனின் மகனும் அவ்வாறே.
ரமணன் எந்த ஆசிரியரிடமும் இசை பயிலவில்லை. அப்பாவைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டு ஹார்மோனியமும், தபேலாவும் பிரமாதமாக வாசிப்பார். 1980, 90களில் மதுரையில் இயங்கி வந்த அத்தனை மெல்லிசைக் குழுக்களிலும் அவர் கீபோர்ட் அல்லது தபேலா வாசித்திருக்கிறார். எங்கள் ஊழியர் சங்கத்தில் சுடர் கலைக்குழு என்று இசைக்குழு ஒன்றை ஆரம்பித்த போது, அவர் தான் கீபோர்ட் வாசிப்பார். அப்போது பள்ளியில் படித்து வந்த அவரது மகன் தபேலா வாசிப்பார். சமயங்களில் அவரது தந்தையாரும் எங்கள் குழுவில் வாசித்ததுண்டு.
மிக அபூர்வமாக நான் மேடையில் வயலின் வாசித்த ஒரு சில நிகழ்ச்சிகளில் அவரது குடும்பத்தின் மூன்று தலைமுறையினரும் என்னோடு இணைந்து வாசித்ததும் உண்டு. எனக்கு அவரது கீபோர்டை விட தபேலா தான் பிடிக்கும். என்போன்ற கத்துக் குட்டிகளுக்கு அனுசரித்து வாசிப்பார். தில்லானா மோகனாம்பாளில் தங்கவேலு, சிவாஜியின் குழுவைப் பற்றிச் சொல்லும் போது, கோடையிடி சக்திவேலண்ணன் ஒரு தவில்… கலியுக நந்தி முத்துராக்கு அண்ணன் ஒரு தவில் என்பார். ரமணன் அப்படியான ஒரு கலியுக நந்தி.
அவர் எனக்கு நேரடியாக இசையின் நுட்பங்களைச் சொல்லித் தந்து வகுப்பு எடுத்ததில்லை. இசைக்குழுவின் பயிற்சிகளின் போது, டீ சாப்பிடப் போகும் போது, மதிய உணவின் போது அவர் பேசுவதெல்லாமே எனக்கு இசைப் பாடங்கள்தான். ஏதேனும் ஒரு பாடல் பற்றி ஆரம்பிக்கும் பேச்சு ஒன்றைத் தொட்டு, ஒன்றைத் தொட்டு பெரிய கச்சேரி போல் ஆகிவிடுவதும் உண்டு.

அப்போது கண்கள் இரண்டால்… பாடல் மிகவும் புகழ் பெற்றிருந்த நேரம். ரீதிகௌளை என்னும் அழகான ராகத்தில் அதற்கு முன்னால் இளையராஜா சின்னக் கண்ணன் அழைக்கிறான்… என்று போட்டிருந்தார். அதற்கு வெகு காலம் கழித்து தலையைக் குனியும் தாமரையே.. என்று அவரே போட்டிருந்தார். சுமலதாவிற்கு ரகுவரன் ஜோடி என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் ரீதிகௌளைக்காக மன்னித்தேன். மீண்டும் பல வருட இடைவெளியில் ஜேம்ஸ் வசந்தனின் ரீதிகௌளையாக கண்கள் இரண்டால் வந்தது.

சம்பவத்தன்று
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?
என்ற தாமரையின் மென்மையான வரிகளை, அடியேன்
பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி
பதிக்கும் பண்பாட்டுக் கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
என்ற மதன மாளிகை பாடலின் சரணத்தின் மெட்டில் டிஎம் எஸ் குரலில் பாடியதைக் கேட்டு நண்பர் ரமணன் பயங்கர உற்சாகமாகி விட்டார்.
“ஜீ ! இந்த ரெண்டையும் எப்படி லிங்க் பண்ணினீங்க… சூப்பர்.. சூப்பர்…“ என்று துள்ளிக் கொண்டே இருந்தார். எப்போதுமே நான் இப்படி ஏதாவது தூண்டில் போட்டால், அதில் அவர் சிக்கிக் கொள்வார். அந்தத் தூண்டிலில் எனக்கு ஏதேனும் ஒரு ரத்தினம் கிடைக்கும். அன்றும் அப்படித்தான். “ஜீ… மதன மாளிகையில் … தொகையறாவோட கேட்டுருக்கீங்களா?“ என்றார்.
பொதுவாக அந்தக் காலத்தில் ரேடியோவில் மதன மாளிகையில் பாட்டுக்கு தொகையறா இல்லாத வெர்ஷன் தான் போடுவார்கள். ஆனால் மைக் செட் காரர்களிடம் இருக்கும் எல்.பி தகட்டில் எந்த ப்ரீலூடும் இல்லாமல் அந்தக் கால நாடக பாணியில் டிஎம்எஸ் மதன மாளிகையில்…. என்று பல்லவி முழுவதையும் தொகையறாவாகப் பாடுவதும், அதைத் தொடர்ந்து சின்னதாக ஒரு ஆலாபனை செய்து அவர் முடிக்கும் தருவாயில் எங்கோ தொலைவிலிருந்து சுசீலாம்மா அன்பே.. அன்பே… அன்பே…. என்று மிக மிக மென்மையாக இழுப்பதுமாக ஒரு வெர்ஷன் இருக்கும்.

பொதுவாக விரிவான ப்ரீலூட் போடும் எம். எஸ். விஸ்வநாதன் இந்த ஒரு பாட்டிற்கு மட்டும் எஸ்.ஏ.ராஜ்குமார் போடுவது போல சரணத்தின் முதலிரண்டு வரிகளை அப்படியே ப்ரீலூடாக வாசித்து முடித்து விட, பாட்டு ஆரம்பமாகும். அந்தத் தொகையறாவைத் தான் ரமணன் நினைவு படுத்தினார். “அப்படியே அத பாடுங்க ஜீ !“ என்றேன். ரமணன் அந்தத் தொகையறாவைப் பாடிய போது, டீக்கடையில் உடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த இந்தியன் பாங்க் நண்பர்கள், இரண்டு ஆட்டோக் காரர்கள் எல்லோரும் கை தட்டினார்கள். ரமணனுக்கு வெட்கமாகி விட்டது.
போன ஆண்டு, நான் பணி ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக அவர் பணி ஓய்வு பெற்றார். அவரது மனைவி, குழந்தைகள், பேரன் பேத்திகள், சகோதரிகள், அவர்களது குடும்பம் என்று பணிஓய்வுப் பாராட்டு விழா குடும்ப விழாவாக நடந்தது. ரமணன் கோட் போட்டு அதிகாரி வேடத்தில் இருந்ததும் அழகாகத் தான் இருந்தது. எல்லோரும் பாராட்டிப் பேசியபின் அவரது ஏற்புரை. அதற்கு முன்பாக மதன மாளிகையில் பாட்டின் அந்தத் தொகையறாவை மட்டும் பாடும்படி நான் நேயர் விருப்பம் வைத்தேன்.
மேடையில் ரமணன் மதன மாளிகையில்… என்று டி.எம்.எஸ் குரலில் அந்தத் தொகையறாவை கம்பீரமாக ஆரம்பித்தார். அலுவலக விழா மேடை ஒரு கணத்தில் நாடக மேடையாக மாறியது. கோட் போட்ட உதவிக் கோட்ட மேலாளர் ரமணன் சார் மறைந்து போய், சிவாஜியே ராஜபார்ட் ரங்கதுரையாக நிற்பதாகத் தெரிகிறது. விஷயம் அதுவல்ல. தொகையறா பாடி முடித்து சின்னதாக வரும் அந்த ஆலாபனையைப் பாடும் போது, ரமணன் ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்களுக்கே உரிய கையசைப்பில், எதிரில் என்னருகில் சேரில் உட்கார்ந்திருக்கும் தன் தங்கைக்கு நுட்பமாக சைகை காட்டுகிறார். ஆலாபனைக்காக கையை அசைப்பது போல்தான் அது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவரது தங்கை சுசீலாம்மாவாக மாறி… உட்கார்ந்த இடத்தில் இருந்து அதே மென்மையோடு அன்பே.. அன்பே.. அன்பே… என்று பாடி அந்த கடைசி அன்பே வரியை எல் பி ரெக்கார்டில் உள்ளதைப் போலவே fade செய்து நிறுத்தினார்.
அசையும் பொருள் நிற்கவும், நிற்கும் பொருள் அசையவுமான ஒரு பாட்டை பாண்டிய நாட்டில் அன்று தான் நான் கேட்டேன்.
இப்போதெல்லாம் மதன மாளிகையில் பாட்டைக் கேட்கும் போது, ரமணனின் முகம் மறைந்து, அவருடைய அன்புத் தங்கையின் முகம் தான் தெரிகிறது!
– ச.சுப்பாராவ் ( தொடரும்)
1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/
4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/
5)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/
6)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-6/
7) https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-7/




தங்களது நண்பர் ரமணனையும் அவரது குடும்பத்தாரையும் தங்களது மதுரை செய்திகள் தொடரில் பெருமைபடுத்தியத்திற்கு சிரம் தாழ்ந்த நன்றியினை நான் தெரிவித்து கொள்கின்றேன். நானும் ரமணனை தற்சயலாக சந்தித்த போது அதற்குள் இருவருக்கும் வயது 60 ஆகிவிட்டதே என்று மிக வருத்தம் அடைந்தார். மேலும் மதுரை செய்திகள் ஆசிரியரை போன்றவர்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி அறியா கலைஞர்களை பிறர் அறிய வைக்கவும் ஆர்வப்படுத்தவும் ஒரு எண்ணம் வரும் என்றும் ஆசிரியரின் ஒரு பெரிய மனதினையும் எண்ணி மகிழ்ந்தார். நன்றி 🙏🙏🙏 தொடரை தொடருங்கள்….
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்