
17 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் சிகரெட் வாங்குவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
பிரிட்டனில் 17 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் சிகரெட் வாங்குவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குக்குப் பிறகு பிறந்தவர்கள் யாரும் சிகரெட் வாங்க முடியாது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் கூறுகையில் “பிரிட்டன் சுகாதார வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இது புகைப்பழக்கமற்ற முதல் தலைமுறையை உருவாக்க வழிவகுக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த, 2022-ம் ஆண்டில், புகைப்பிடித்தலுக்கு எதிராக இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடாக நியூசிலாந்து திகழ்ந்தது. இச்சட்டத்தின் மூலம், 2008-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது. ஆனால், இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டுக்கும் குறைவான காலத்திலேயே, நவம்பர் 2023-ல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ரத்து செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2007-ம் ஆண்டு ஜனவரி 1-க்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் விற்பனை செய்வதை மாலத்தீவு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.



