மதுரை வடக்குத் தொகுதியில் குறைந்த வாக்குகள் பதிவு… காரணம் திமுக செயலாளர்களா?

மதுரை வடக்குத் தொகுதியில் திமுக வட்டச் செயலாளர்கள் சிலர் பணத்தை பதுக்கியதால் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 23) நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் : 67.15 சதவீதமாகும். இதன்படி தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:

1.மதுரை மத்திய தொகுதி : 61.46%

2.மதுரை கிழக்கு : 66.46%

3.மதுரை வடக்கு : 60.83%

4.மதுரை தெற்கு : 65.52%

5.மதுரை மேற்கு : 65.80%

6.மேலூர் : 68.76%

7.சோழவந்தான்: 72.19%

8.திருமங்கலம் : 73.35%

9.திருப்பரங்குன்றம் : 68.06%

10.உசிலம்பட்டி : 68.42%

பிற்பகல் 3மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருமங்கலத்தில் 73.35 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மதுரை வடக்கு தொகுதியில் 60.83 சதவீத வாக்குகளும் பதிவாகின.

வடக்கில் குறைந்த வாக்குகள்
மதுரை வடக்கு தொகுதியில் வாக்குகள் குறைந்ததற்கு சில திமுக வட்டச் செயலாளர்கள் தான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் 1500 ரூபாய் ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதில் பீபீ குளம், சொக்கிகுளம், ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய தரப்பட்ட பணத்தை பெருமளவு சுருட்டி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக சொக்கிகுளம் அரசினர் குடியிருப்பில் இருந்தவர்கள் வீடுகள் இடிந்ததால் மதுரையில் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து போய் விட்டனர். எஸ்ஐஆர் காரணமாக வடக்குத் தொகுதியில் இருந்த அவர்கள் வாக்குகளை வடக்குத் தொகுதியில் இருந்து மாற்றவில்லை. அவர்களுக்கு பட்டுவாடா செய்ய கொடுத்த பணத்தை வட்டச் செயலாளர் ஸ்வாகா செய்து விட்டார் என்று கூறப்படுகிறது. அடுத்த கவுன்சிலர் நான் தான் என அந்தப் பகுதி முழுவதும் சொல்லி வரும் அந்த வட்டச் செயலாளர், சட்டமன்றத் தேர்தலிலே இப்படி செய்தால், மாநகராட்சி தேர்தலில் எப்படி செய்வார் என்ற அச்சம் திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதே போல ரேஸ்கோர்ஸ் காலனி பகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் மொத்தமாக சுருட்டப்பட்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த பகுதியில் திமுகவினர் வாக்கு சேகரிக்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதே மதுரை வடக்குத் தொகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் காலனி, புதூர், டிஆர்ஓ காலனி பகுதியில் சிலருக்கு கிடைத்த 1500 ரூபாய் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் பெருமளவு வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது , ” பணம் கிடைக்காத பொதுமக்கள் நேரடியாக வந்து கேட்டபோது ‘ஓட்டு போடுங்க. அன்னைக்குத் தாறோம் ‘ என்று சொன்ன வட்டச் செயலாளர்கள் பூத் பக்கமே வரவில்லை. போன் அடித்தாலும் எடுக்கவில்லை. இதனால் சொக்கிகுளம் காக்கை பாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இன்று வெறிச்சோடி காணப்பட்டது . பணம் கிடைக்காவிட்டாலும் திமுக மீது உள்ள மரியாதை காரணமாக சிலர் வாக்களிக்க வந்தனர். அருகில் இருக்கும் கிழக்குத் தொகுதியில் திருப்பூர் சென்ற தங்களது வேட்பாளர்களை தனி கார்களில் அழைத்து வந்து வாக்களிக்கச் செய்துள்ளனர். ஆனால், வடக்குத் தொகுதியில் திமுகவிற்கு வாக்களிப்பவர்களையே கண்டுகொள்ளாதது வேதனையாக உள்ளது. ரிசல்ட் வந்த பிறகு வாக்குகள் குறைவான பகுதி வட்டச் செயலாளர்கள் மீது திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரான வடக்குத் தொகுதி வேட்பாளர் தளபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.

மதுரையில் அதிமுகவின் ‘சீக்ரெட் எஸ்’ பிளான்: மாறும் தேர்தல் ரிசல்ட் என்ற தலைப்பில் ஏற்கெனவே மதுரை செய்தி இணையத்தில் செய்தி (https://maduraiseithi.in/aiadmks-secret-s-plan-in-madurai/)வெளியாகியிருந்தது. அதில் வடக்குத் தொகுதியும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *