எளிதாக இலக்கணம் கற்கலாம்: அலுப்பின்றி யாப்பு – 9

2) சிந்தியல் வெண்பா

1)சிந்தியல் வெண்பா மூன்று அடிகளைப் பெற்றுவரும்
2)முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் நான்கு சீர்களைப் பெற்றுவரும்
3)மூன்றாம் அடி மூன்று சீர்களைமட்டும் பெற்றுவரும்
4)மூன்றாம் அடியின் ஈற்றுச் சீர் நாள்-மலர்-காசு-பிறப்பு என்பனவற்றுள் ஏதாவது ஒரு சொல்லைப் பெற்று முடிய வேண்டும்.
5) மோனையும் எதுகையும் உரிய இடங்களில் அமைய வேண்டும்
6)முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைதல் சிறப்பு.
7)வெண்டளை பிறழாதிருத்தல் வேண்டும்

இஃது இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்றும் நேரிசைச் சிந்தியல் வெண்பா என்றும் இருவகைப்படும்.

(2)(1) இன்னிசைச் சிந்தியல் வெண்பா

இது ஒரு விகற்பமாகவும் பல விகற்பங்களாகவும் வரும். அதாவது மூன்று அடிகளிலும் ஒரே எதுகை பெற்றும் வரும் பல எதுகைகள் பெற்றும் வரும்.

(உ-ம்)

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப
கானக நாடன் சுனை
-பழமொழி நானூறு 125

இப்பாடலில் மூன்று அடிகளிலும் ஒரே எதுகை அமையப் பெறவில்லை. எனவே இது பல விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பாவாகும்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்
-சிலப்பதிகாரம்-1

மூன்று அடிகளும் இப்பாடலில் ஒரே எதுகை பெற்று வந்துள்ளன.

(2)(2) நேரிசைச் சிந்தியல் வெண்பா

இவ்வகை சிந்தியல் வெண்பாவில் இரண்டாம் அடியின் ஈற்றுச் சீர் தனிச் சொல்லாக அமையும்.நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியில் தனிச்சொல் வர, ஒரு விகற்பத்தாலோ இரண்டு விகற்பத் தாலோ வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா.

(உ-ம்)

நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே- பொற்றேரான்
பாலைநல் வாயில் மகள்
-யாப்பருங்கலம்

மேற்கண்ட பாடல், நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்குரிய பொது இலக்கணங்களுடன் மூன்று அடிகள் கொண்டு, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்துள்ளது. நற், சுற், பொற் என்று ஒரு வகையான எதுகையும், பாலை என்று மற்றொரு வகையான எதுகையும் அமைந்து இரண்டு வித விகற்பங்கள் வந்துள்ளது. எனவே இது இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா என்பதாகும்

அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் – சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
-யாப்பருங்கலக் காரிகை

மேற்கண்ட பாடல், நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்குரிய பொது இலக்கணங்களுடன், மூன்று அடிகள் கொண்டு, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்துள்ளது. அறிந்த, செறிந்த, சிறந்த, சிறந்த என ஒரே எதுகையைப் பெற்றுள்ளது. எனவே இது ஒருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாவாகும்.

(3)(1)இன்னிசை வெண்பா

1) இன்னிசை வெண்பா நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கு அடிகளும் ஓரெதுகை பெற்றுவரும்.
2) முதல் மூன்று அடிகளிலும் தலா நான்கு சீர்கள் இருக்கும். ஈற்றடியில் மூன்று சீர்கள் மட்டும் இருக்கும்.
3) அடிதோறும் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.
4) வெண்பாவிற்குரிய தளைகளைப் பெற்றுவரும். செப்பலோசை குறையாதிருக்கும்.
5) ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள்-மலர்-காசு-பிறப்பு என்ற வாய்பாட்டுச் சீர்களில் ஏதாவதொன்றைப் பெற்று முடியும்.

நான்கு அடிகளிலும் ஒரே எதுகை பெற்று வரும் இன்னிசை வெண்பாவைப் பற்றி மட்டும் தற்போதைக்குத் தெரிந்துகொண்டால் போதும். இரு விகற்ப மற்றும் பல விகற்ப இன்னிசை வெண்பாக்களைச் சற்று வளர்ந்த நிலையில் அறிந்துகொள்ளலாம்.

(உ-ம்)

வண்ணத்தைத் தேடி மலியத் தொகுத்துவைத்துக்
கிண்ணத்தி லூற்றிக் கிழியெடுத்துத் தூரிகையை
நண்ணவைத்துத் தீட்டும் நயமில்லா ஓவியனே
எண்ணமெங்கே வைத்தாய் இசை.
-கி.வா. ஜகந்நாதன்

மேலே சொல்லப்பட இலக்கணத்தின் அத்தனை அம்சங்களும் இப்பாட்டிற்குப் பொருந்தி வருகின்றன. வண்ண, கிண்ண, நண்ண, எண்ண என்று அடிதோறும் எதுகை அமைந்துள்ளது. நான்கு அடிகளிலும் பொழிப்பு மோனை சிறப்பாக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் இறுதிவரை வெண்டளை பிறழாமல் வந்துள்ளது. ஈற்றடியின் ஈற்றுச்சீர் மலர்(இசை) என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது.

(3)(2) நேரிசை வெண்பா

வெண்பாக்களுல் சிறந்ததாகக் கருதப்படுவது நேரிசை வெண்பாவாகும்

1) நேரிசை வெண்பாவில் நான்கு அடிகள் இருக்கும்
2)முதல் மூன்று சீர்களில் நான்கு சீர்களும் நான்காவது அடியில் மூன்று சீர்களும் இருக்கும்.
3)முதல் இரண்டடிகளுக்கு ஓரெதுகையும் மற்ற இரண்டடிகளுக்கு வேறொரு எதுகையும் வரும். நான்கு அடிகளுக்கும் ஒரே வகையான எதுகையும் வரலாம்.
4) இரண்டாவது அடியின் நான்காவது சீர் தனிச் சீராக வரும். முதல் இரண்டு அடிகளுக்கும் வரும் எதுகை இத்தனிச் சீருக்கும் வர வேண்டும். அவ்வாறு பார்த்தால் மொத்தம் ஐந்து எதுகைகள் ஒரு பாட்டில் அமையும்.
5) செப்பலோசை வரவேண்டும்
6) வெண்டளை அமைய வேண்டும்
7) நாள்-மலர்-காசு-பிறப்பு என்பனவற்றுல் ஏதாவது ஒன்றைப் பெற்று ஈற்றடியின் இறுதிச் சீர் முடிய வேண்டும்.

ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.

மேற்கண்ட பாடலில் நெல், புல், நல், எல் என நான்கடிகளிலும் ஒரே வகை எதுகை அமைத்துள்ளது. தனிச் சொல்லிலும் தொல் என்று எதுகை அமைந்துள்ளது. எனவே இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா எனப்படும்.

இரு விகற்ப நேரிசை வெண்பா
அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட தெவனாம் – பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்.

அறிவினால், பிறிதினால், என முதல் இரண்டு அடிகளிலும் ஒரே வகை எதுகை வந்துள்ளது. இரண்டாம் அடியின் இருதியில் உள்ள தனிச் சீரும் ‘’பொறியின்’ என்று எதுகையாகவே வந்துள்ளது. இறுதியில் உள்ள இரண்டு அடிகளும் ‘மணி, அணி’ என்ற வேறு வகை எதுகைகளைக் கொண்டிருப்பதால் இது இரு விகற்ப நேரிசை வெண்பா எனப்படும்.

4)பஃறொடை வெண்பா
பல தொடைகளைக் கொண்ட வெண்பா ஆகையால் இது (பல்+தொடை+வெண்பா) பஃறொடை வெண்பாவாயிற்று.

1) பஃறொடை வெண்பாவின் சிற்றெல்லை 5 அடிகள்; பேரெல்லை 12 அடிகள்.
2) ஈற்றடியைத் தவிர மற்ற அனைத்து அடிகளும் நான்கு நான்கு சீர்களைப் பெற்று வரும்.
3) ஈற்றடி மூன்று சீர்கள் பெற்றிருக்கும்
4) அனைத்து அடிகளிலும் ஒரே எதுகை வருதல் சிறப்பு.
5) ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள்-மலர்-காசு-பிறப்பு எனும் வாய்பாட்டில் ஏதேனும் ஒன்றைப் பெற்று முடிய வேண்டும்.
6) முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவதே சிறப்பு
7) வெண்டளை பிறழக் கூடாது
8) செப்பலோசை அமைய வேண்டும்

பஃறொடை வெண்பா ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா, பல விகற்பப் பஃறொடை வெண்பா என இரண்டு வகைப்படும்.

ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா
சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல்
கூற்றுறழ் மொய்ம்பின் பகழி பொருகயல்
தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம்
வேற்றுமை இன்றியே ஒத்தன மாவேடர்
ஆற்றுக்கால் ஆட்டியர் கண்
-யாப்பருங்கலக் காரிகை

ஐந்தடியால் அமைந்த இப்பஃறொடை வெண்பாவில், சேற், கூற், தோற், வேற், ஆற் என ஒரே விகற்பம் அமைந்துள்ளதால் இது ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா.

பல விகற்பப் பஃறொடை வெண்பா
பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக்
கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை
எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்
திருத்தார்நன் றென்றேன் தீயேன்
-முத்தொள்ளாயிரம் 116

ஆறடியால் அமைந்த இப்பாடலில் பன், என், பொன்; கியா; எருத்த, திருத்தார்- என இரண்டுக்கு மேற்பட்டப் பல விகற்பங்கள் அமைந்துள்ளதால் இது பல விகற்பப் பஃறொடை வெண்பா.

5) கலிவெண்பா

1) கலிவெண்பா பன்னிரெண்டு அடிகளுக்கு மேல் எத்தனை அடிகள் வேண்டுமாயினும் வரும்.
2) இரண்டு இரண்டு அடிகளுக்கு ஓர் எதுகை அமைய வேண்டும்
3) ஈற்றடி மூன்று சீர்களைப் பெற்று வர வேண்டும்.
4) ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள்-மலர்-காசு-பிறப்பு என்பனவற்றுள் ஏதாவது ஒன்றைப் பெற்று முடியவேண்டும்
5) செப்பலோசை இருக்க வேண்டும்
7) வெண்டளை பிறழக் கூடாது
8) நேரிசைக் கலிவெண்பாவில் தனிச் சொல் வரவேண்டும். இன்னிசைக் கலிவெண்பாவில் அது வர வேண்டியதில்லை.

(உ-ம்)

சுடர்த்தொடீஇ! கேளாய்;தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா
அடைச்சியகோதை பரிந்து வரிப்பந்து
கொண்டு ஓடி நோதக்க செய்யும் சிறுபட்டி
மேலோர் நாள்அன்னையும் யானும் இருந்தேமா.. இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு அன்னை
அடர்பொற் சிரகத்தால் வாக்கி சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னைவளை
முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு, அன்னாய்!
இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தானக் கள்வன் மகன்.
-கலித்தொகை

மேற்கண்ட பாடல் ஒரு பொருள் பற்றி, பனிரண்டு அடிகளுக்கு மேல் பெற்று, வெண்டளை கொண்டதாய், ஈற்றடியில் மூன்று சீர்கள் கொண்டு முடிந்ததால் இது கலிவெண்பா.

கலிவெண்பா, இன்னிசைக் கலிவெண்பா என்றும் நேரிசைக் கலிவெண்பா என்றும் இரண்டு வகைப்படும். மாணிக்கவாசகர் இயற்றிய சிவபுராணம், புரட்சிக் கவி பாரதிதாசன் இயற்றிய சஞ்சீவி பர்வதத்தின் சாரல் போன்றவை இன்னிசைக் கலிவெண்பாவிற்கு நல்ல உதாரணங்கள். அதுபோல், கந்தர் கலிவெண்பா, தமிழ்விடு தூது, விறலிவிடு தூது, குலோத்துங்கச் சோழன் உலா, வருணகுலாதித்தன் மடல் போன்றவை நேரிசைக் கலிவெண்பாவிற்கு நல்ல உதாரணங்கள்.
மனோந்திரா (தொடரும்)

1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/

2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/

3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/

4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/

5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/

6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/

7)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-7/

8)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-8/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *