
செய்யுளியல்
யாப்பிலக்கணத்தில் செய்யுளைப் பா எனச் சொல்லுதல் மரபு. செய்யுளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று பா மற்றொன்று பாவினம். இவற்றைப் பாப்பாவினம் என்றும் அழைப்பர்.
பா: பாவில் நான்கு வகைகள் உள்ளன. அவையாவன:
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
கடைச்சங்க காலம்வரை மேற்கண்ட நான்குவகைப் பாக்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பாக்களிலிருந்து பின்னர் பாவினங்கள் தோன்றியுள்ளன.
பாவினம்: பாவினம் மூன்று வகைப்படும். அவை:
தாழிசை
துறை
விருத்தம்
இந்த மூன்றையும் நான்கு பாக்களுடன் பெருக்கினால்(4×3=12) பாவினங்கள் மொத்தம் பன்னிரண்டு ஆகும். அவையாவன:
வெண்டாழிசை
வெண்டுறை
வெளிவிருத்தம்
ஆசிரியத் தாழிசை
ஆசிரியத்துறை
ஆசிரிய விருத்தம்
கலித்தாழிசை
கலித்துறை
கலிவிருத்தம்
வஞ்சித் தாழிசை
வஞ்சித்துறை
வஞ்சி விருத்தம்
இந்தப் பன்னிரண்டு பாவினங்களும் பிற்காலத்தில் தோன்றியவை.
ஓசை:
நான்கு வகைப் பாக்களுக்கும் நான்கு வகையான ஓசைகள் இருக்கின்றன.
வெண்பா: இது செப்பலோசை கொண்டது. இரண்டு நபர்கள் பேசிக்கொள்வது போன்ற ஓசையையுடையது. செப்புதல் என்றால் பேசுதல் அல்லது சொல்லுதல் எனப் பொருள்படும்.
ஆசிரியப்பா– இதற்குரிய ஓசை அகவலோசையாகும். இப்பா மயில் அகவுவதைப் போன்ற ஓசை கொண்டிருப்பதால் ஆசிரியப்பாவிற்கு அகவற்பா என்ற பெயரும் உண்டு. ஒருவர் சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை இருப்பதாலும் ஒரு ஆசிரியர் தம் மாணவர்களுக்கும் பாடம் நடத்துதற் போன்றிருப்பதாலும், இதை ஆசிரியப்பா என்றும் அழைக்கிறோம்.
கலிப்பா: இதற்குரிய ஓசை துள்ளலோசையாகும். பாட்டிலுள்ள சீர்களின் ஓசை நேர்கோட்டில் செல்லாமல் மேலும் கீழும் தாவித் தாவி ஒரு கன்றினைப்போல் துள்ளித் துள்ளி ஓடும். இவ்வாறு துள்ளிச் செல்வதால் கலிப்பாவின் ஓசை துள்ளலோசை எனப்படுகிறது.
வஞ்சிப்பா: வஞ்சிப்பாவிற்குரியது தூங்கலோசை. எழுச்சியும் விரைவுமின்றி இடையிடையே தாழ்ந்து ஒலிக்கும் ஓசையாகும்.
ஓசைகளின் உட்பிரிவுகளை இனிக் காண்போம்.
செப்பலோசை– வெண்பாவிற்குரிய இவ்வோசை மூன்று உட்பிரிவுகளைக் கொண்டதாகும்.
1)ஏந்திசைச் செப்பலோசை- வெண்சீர் வெண்டளையால் வரும் ஓசை.
2)தூங்கிசைச் செப்பலோசை- இயற்சீர் வெண்டளையால் வருவது.
3)ஒழுகிசைச் செப்பலோசை- இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் கலந்து வருவது.
அகவலோசை– இவ்வோசை ஆசிரியப் பாவிற்குரியது. இதன் மூன்று உட்பிரிவுகள் பின்வருமாறு:
1)ஏந்திசை அகவலோசை- நேரொன்றிய ஆசிரியத் தளையால் வருவது.
2)தூங்கிசை அகவலோசை- நிரையொன்றிய ஆசிரியத் தளையால் வருவது.
3)ஒழுகிசை அகவலோசை-இருவித ஆசிரியத் தளைகளும் கலந்து வருவது.
துள்ளலோசை– கலிப்பாவிற்குரியது.
1)ஏந்திசைத் துள்ளலோசை- கலித்தளையால் வருவது.
2)அகவல் துள்ளலோசை- வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வருவது.
3)பிரிந்திசைத் துள்ளலோசை- கலித்தளையோடு பிற தளைகளும் விரவி வருவது.
தூங்கலோசை– வஞ்சிப்பாவிற்குரியது.
1)ஏந்திசைத் தூங்கலோசை- ஒன்றிய வஞ்சித் தளையால் வருவது.
2)அகவல் தூங்கலோசை- ஒன்றாத வஞ்சித் தளையால் வருவது.
3)பிரிந்திசைத் தூங்கலோசை- இருவித வஞ்சித் தளைகளும் விரவி வருவது.
வெண்பா
பாக்கள் நான்கு வகைப்படும் என்பதை முன்னரே பார்த்தோம். அவை வெண்பா, அகவற்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா என்பனவாகும். இவற்றைத் தவிர வெண்பாவில் தொடங்கி அகவற்பாவில் முடியும் ஒருவகைப் பாவும் உண்டு. அதன் பெயர் மருட்பா. மருட்பாவிற்குப் பாவினங்கள் இல்லை. மேலும் இது சிறப்பில்லாத பா வகை என்பதால் இது வெகு காலத்திற்கு முன்பே கைவிடப்பட்டுவிட்டது. எனவே பாக்கள் நான்கு வகை மட்டுமே!. தற்பொழுது வெண்பாவைப் பற்றிப் பார்ப்போம்.
வெண்பாப் புனைவதைக் கற்றுக்கொண்டால் போதும், பிற பாக்களைப் புரிந்துகொள்வதும் புனைவதும் எளிதாகிவிடும். நளவெண்பா என்ற முழுக் காவியத்தையும் வெண்பாவிலேயே இயற்றி அசத்தியவர் புகழேந்திப் புலவர். நாலடியார், முத்தொள்ளாயிரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்ற நூற்கள் வெண்பாவில் அமைந்தவை. திருக்குறலும் குறள் வெண்பாவில் அமைந்த இலக்கியமே! பாக்கள் நான்கிலும் சிறந்ததாகக் கருதப்படுவது வெண்பாவே! எனவே வெண்பாவிற்குரிய இலக்கணத்தைச் சற்று நுணுகிக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வெண்பாவின் பொது இலக்கணம்
1)வெண்பாவானது இரண்டடிகளுக்குக் குறையாமல் வரும்.
2)கடைசி அடி மூன்று சீர்களில் அமையும்
3)மற்ற அடிகள் அளவடிகளாக, அதாவது நான்கு சீர்களைக் கொண்டவையாக இருக்கும்.
4)இப்பாவில் தேமா, புளிமா, கூவிளம் மற்றும் கருவிளம் என்ற நான்கு ஈரசைச் சீர்களும் தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் மற்றும் கருவிளங்காய் என்ற நான்கு காய்ச் சீர்களும் கலந்து வரும்.
5)இதில் கனிச் சீர்கள் வரமாட்டா
6) ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள்-மலர்-காசு-பிறப்பு என்ற வாய்பாட்டுச் சீர்களில் ஏதாவது ஒன்றைக் கொண்டு முடியும்.
7)வெண்டளை பிறழலாகாது. அதாவது தேமா, புளிமா இவற்றுல் ஒன்று முந்திய சீராக இருந்தால் அடுத்து வரும் சீரின் முதல் அசை நிரையசையாக இருத்தல் வேண்டும். அதேபோல் முதற்சீர் கூவிளச் சீராகவோ அல்லது கருவிளச் சீராகவோ இருந்தால் அடுத்துவரும் சீரின் முதல் அசை நேரசையாக இருத்தல் வேண்டும். நான்கு காய்ச் சீர்களாகிய தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் மற்றும் கருவிளங்காய் ஆகியவற்றை அடுத்து வரும் சீர்களின் முதல் அசைகளும் நேரசைகளாக வரவேண்டும்.
மாமுன் நிரை- விளம் முன் நேர் என்பவை இயற்சீர் வெண்டளை எனப்படும். காய் முன் நேர் என்பது வெண்சீர் வெண்டளை எனப்படும்.
8)செப்பலோசை குறையக்கூடாது
9)ஒவ்வோர் அடியின் இறுதிச் சீருக்கும் அடுத்த அடியின் முமுதற்சீருக்கும் வெண்டளை பொருந்தி வரவேண்டும்.
வெண்பாவின் வகைககள்
ஏழுவகை வெண்பாக்கள் இருக்கின்றன. அவையாவன:
1)குறள் வெண்பா – 2 அடிகளையுடையது.
2)இன்னிசைச் சிந்தியல் வெண்பா- 3 அடிகளையுடையது.
3)நேரிசைச் சிந்தியல் வெண்பா- 3 அடிகளையுடையது.
4)இன்னிசை வெண்பா- 4 அடிகளையுடையது
5)நேரிசை வெண்பா- 4
அடிகளையுடையது
6)பஃறொடை வெண்பா- 5 அடி முதல் 12 அடிவரை கொண்டது
7)கலி வெண்பா- 12 அடிகளுக்கு மேல் பல அடிகளைப் பெற்று வருவது.
1)குறள் வெண்பா
இதில் இரண்டு அடிகள் இருக்கும். முதல் அடியில் நான்கு சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும் பெற்று வரும். முதல் அடிக்கும் இரண்டாம் அடிக்கும் எதுகை அமைய வேண்டிம். முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு. ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள்-மலர்-காசு-பிறப்பு என்ற வாய்பாட்டுச் சீர்களில் ஏதாவது ஒன்றைப் பெற்று முடிய வேண்டும். வெண்டளை பிறழக் கூடாது. செப்பலோசை குன்றக் கூடாது.
குறளன் என்றால் குள்ளமானவன் என்று பொருள். வெறும் ஏழு சீர்களை மட்டும் பெற்றுக் குள்ளமாக இப்பாடல் வருவதால் இது குறள் வெண்பா என்று பெயர் பெற்றது.
(உ-ம்)
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மேற்கண்ட குறளின் முதல் அடியில் பொழிப்பு (முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும்) மோனை வந்துள்ளது. இரண்டாம் அடியில் இணை (முதற் சீரிலும் இரண்டாம் சீரிலும்) மோனை வந்துள்ளது. முதல் அடியின் முற்சீரின் இரண்டாம் எழுத்தும் இரண்டாவது அடியின் முதற் சீரின் இரண்டாம் எழுத்தும் ஒன்றி வந்து அடி எதுகை அமைந்துள்ளது.
முதற்சீர் ‘’மலர்மிசை’ என்பது (நிரை+நிரை=) கருவிளம் ஆகும். விளம் முன் நேர் அசை வரவேண்டும் அல்லவா? ஏகினான் என்பது (நேர்+நிரை=) கூவிளச் சீர். அதன் முதல் அசை நேர் என்பதைப் பார்த்து உணரலாம். ஏகினான் என்பது கூவிளச் சீராக இருப்பதனால் அடுத்து வரும் மாணடி(கூவிளம்) என்று நேர் அசையில் தொடங்கியுள்ளது. மாணடி என்பதும் கூவிளச் சீர் ஆகையால் அடுத்த சீர் “சேர்ந்தார்” (நேர்+நேர்=தேமா) நேரசையில் தொடங்கியுள்ளது. தேமா சீரை அடுத்து வரும் சீர் நிரை அசையில் தொடங்க வேண்டும்ல்லவா? அவ்வாறே நிலமிசை(நிரை+நிரை=கருவிளம்) என நிரை அசையில் தொடங்கியுள்ளது. நின்ற சீர் (நிலமிசை) விளச் சீர் என்பதால் அடுத்த சீர் நீடுவாழ்(நேர்+நிரை=கூவிளம்) என நேரசையில் தொடங்கியுள்ளது. அடுத்து நின்ற சீராக இருக்கும் “நீடுவாழ்” கூவிளச் சீர் ஆகையால் அதைத் தொடர்ந்து “வார்” என்ற நேரசை, நாள்/மலர்/காசு/பிறப்பு என்ற வாய்பாட்டிலுள்ள நாள் என்ற அசைக்கு இணையாக வந்து பாட்டை முடித்து வைத்துள்ளது.
இவ்வாறு வெண்டளை பிறழாமலும் செப்பலோசை குன்றாமலும் இக்குறள் அமைந்திருக்கிறது. வெண்பாவின் பிற வகைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.
– மனோந்திரா (தொடரும்)
1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/
2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/
3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/
4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/
5) https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/5)
6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/
7)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-7/



