
ஆசிரியப்பா
வெண்பாவிற்கடுத்துத் தெரிந்துகொள்ள வேண்டியது ஆசிரியப்பா. இது அகவற்பா என்றும் அழைக்கப்படும். மயில் அகவுவது போன்ற ஓசை இதில் அமைந்திருப்பதால் இப்பா அகவற்பா என்றும், ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் போதிப்பது போன்று ஓசை பெற்று வருவதால் இப்பா ஆசிரியப்பா என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பா ஆசிரியப்பாவாகும்.
ஆசிரியப்பாவின் இலக்கணம்:
1) ஆசிரியப்பாவிற்குக் குறைந்தது மூன்று அடிகள் இருக்க வேண்டும். அதற்குமேல் எத்தனை அடிகள் வேண்டினும் வரலாம்.
2) அடிகள் அளவடிகளாக இருக்க வேண்டும். அஃதாவது, ஒவ்வொரு அடியிலும் நான்கு நான்கு சீர்கள் இருக்க வேண்டும்.
3) ஆசிரியப்பாவிற்குரிய சீர் இயர்சீர்- தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் ஆகியன. இருப்பினும் நான்கு காய்ச்சீர்களும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் மற்றும் கருவிளங்காய்) இடையிடையே வரலாம். மேலும் கனிச் சீர்களில் தேமாங்கனியும் புளிமாங்கனியும் அருகி வரலாம். நிரை நடுவாகிய கூவிளங்கனியும் கருவிளங்கனியும் வரவே கூடாது.
4) முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை (பொழிப்பு மோனை) அமைய வேண்டும்.
5) இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை அமைப்பது சிறப்பு. எதுகை இன்றியும் எழுதலாம்.
6) ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும். நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தில் முடிய வேண்டும் என்பது கட்டாயம். மற்ற வகை ஆசிரியப்பாக்களுக்கு அது கட்டாயம் அல்ல.
7) நேரிசை ஆசிரியப்பாவெனில் ஈற்றயலடி (கடைசி அடிக்கு முந்தைய அடி) மூன்று சீர்களைப் பெற்றுவர வேண்டும். நிலைமண்டில ஆசிரியப்பாவில் அனைத்து அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வரவேண்டும்.
8) அகவலோசை அமைய வேண்டும்.
மற்ற பாக்களோடு ஒப்பிடும் போது ஆசிரியப்பா எழுதுவது மிக மிக எளிது. எனவே இதை மென்பா என்றும் சொல்வதுண்டு. நினைத்தவுடன் ஆசிரியப்பாவை இயற்றிவிட முடியும் ஆகையால் இதை அவசரப்பா என்றும் அழைப்பர்.
தளை
ஆசிரியப்பாவிற்குரிய தளைகள் இரண்டு. ஒன்று நேரொன்றிய ஆசிரியத்தளை, மற்றொன்று நிரையொன்றிய ஆசிரியத்தளை.
1) நேரொன்றிய ஆசிரியத்தளை:
மாமுன் நேர் வருவது நேரொன்றிய ஆசிரியத் தளையாகும். அதாவது தேமா, புளிமாச் சீர்களைத் தொடர்ந்து வரும் சீரின் முதல் அசை நேர் அசையாக இருக்க வேண்டும். இது சிறப்புடைய நேரொன்றிய ஆசிரியத் தளை என்றும் சிறப்பில்லா நேரொன்றிய ஆசிரியத்தளை என்றும் இருவகைப்படும்.
சிறப்புடைய நேரொன்றிய ஆசிரியத்தளைக்கு எடுத்துக்காட்டு.
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
(கவிப்பேரரசு வைரமுத்து)
மேற்கண்ட பாட்டில் நின்றசீர் தேமாச் சீராக இருக்க அதனைத் தொடர்ந்து வந்த சீரும் தேமாச் சீராகவே இருக்கிறது. எனவே இது சிறப்புடைய நேரொன்றிய ஆசிரியத்தளை எனப்படுகிறது.
சிறப்பில்லா நேரொன்றிய ஆசிரியத்தளைக்கு எடுத்துக்காட்டு.
நாதம் என்ஜீவனே!
வாவா என்தேவனே!
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே- ஓ
பூவும் ஆளானதே!
(கவிப்பேரரசு வைரமுத்து)
மேற்கண்ட பாட்டில் ‘’நாதம்’ என்பது தேமா அதற்கு அடுத்து தேமாவிற்குப் பதிலாக ‘’என்ஜீவனே” என்ற தேமாங்கனிச் சீர் வந்துள்ளது. அதனை அடுத்துள்ள அடிகளிலும் தேமாவைத் தொடர்ந்து வெவ்வேறு சீர்கள் வந்துள்ளன. எனவே, இது சிறப்பில்லா நேரொன்றிய ஆசிரியத் தளையாகும்.
2) நிரையொன்றிய ஆசிரியத்தளை:
விளமுன் விளம் வருவது நிரையொன்றிய ஆசிரியத்தளை எனப்படும். அதாவது கூவிளம், கருவிளச் சீர்களைத் தொடர்ந்து வரும் சீரின் முதல் அசை நிரை அசையாக இருக்க வேண்டு. இதுவும் சிறப்புடைய, சிறப்பில்லா என இருவகைப்படும்.
சிறப்புடைய நிரையொன்றிய ஆசிரியத்தளைக்கு எடுத்துக்காட்டு:
ஒருகிளி உருகுது உரிமையில் பழகுது
ஓ மைனா மைனா
இருகிளி இணையுது இருகரம் தழுவுது
ஓ மைனா மைனா
(‘ஓமைனா மைனாவை’ நீக்கிவிட்டுப் பார்க்கவும்)
(கவிப்பேரரசு வைரமுத்து)
மேற்கண்ட பாட்டில் அனைத்துச் சீர்களும் கருவிளச் சீர்களாக வந்துள்ளன. விளமுன் நிரையே வந்துள்ளது. எனவே இது சிறப்புடைய நிரையொன்றிய ஆசிரியத்தளையாகும்.
சிறப்பில்லா நிரையொன்றிய ஆசிரியத்தளைக்கு எடுத்துக்காட்டு:
இதுவொரு நிலாக்காலம்
இரவுகள் கனாக்காணும்
(கவிப்பேரரசு வைரமுத்து)
மேற்கண்ட பாட்டின் இரண்டு அடிகளிலும் உள்ள முதற்சீர்கள் கருவிளச் சீர்களாகவும் இரண்டாம் சீர்கள் புளிமாங்காய்ச் சீர்களாகவும் மாறி வந்துள்ளன. எனவே, இது சிறப்பில்லா நிரையொன்றிய ஆசிரியத் தளையாகும்.
ஓசை
ஆசிரியப்பாவிற்குரிய ஓசை அகவலோசை என்பதை முன்னரே பார்த்தோம். இந்த அகவலோசை மூன்று வகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1) ஏந்திசை அகவலோசை- நேரொன்றிய ஆசிரியத் தளையில் மட்டும் வருவது ஏந்திசை அகவலோசை ஆகும்.
2) தூங்கிசை அகவலோசை- நிரையொன்றிய ஆசிரியத் தளையில் மட்டும் வருவது தூங்கிசை அகவலோசை எனப்படும்.
3) ஒழுகிசை அகவலோசை- இருக்கின்ற மொத்த ஏழு தளைகளும் கலந்து வருவது ஒழுகிசை அகவலோசை ஆகும்.
ஆசிரியப்பாவின் வகைகள்
1) நேரிசை ஆசிரியப்பா
2) இணைக்குறள் ஆசிரியப்பா
3) நிலைமண்டில ஆசிரியப்பா
4) அடிமறி மண்டில ஆசிரியப்பா
மேற்கண்ட நான்குவகை ஆசிரியப் பாக்களையும் விரிவாகப் பார்ப்போம்.
நேரிசை ஆசிரியப்பா
இது ஆசிரியப்பாவிற்கான பொது இலக்கணங்கள் அனைத்தையும் பெற்றுவரும். அனைத்து அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று அளவடிகளாக வருகையில், இறுதி அடிக்கு முந்திய அடி மட்டும் மூன்று சீர்களை பெற்று சிந்தடியாக வரும். ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியும். ஆசிரியப் பாக்களுள் இதுவே சிறந்தது.
(எடுத்துக்காட்டு)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
(குறுந்தொகை-3)
இணைக்குறள் ஆசிரியப்பா
இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் (இரண்டு சீர்களைக் கொண்டது) சிந்தடியும் (மூன்று சீர்களைக் கொண்டது) கலந்துவரும். ஆனால் முதலடியும் இறுதியடிம் நான்கு சீர்களைக் கொண்டே வரும்.
(எடுத்துக்காட்டு)
சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே;
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றாறும் நனிபல கலத்தன் மன்னே;
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
என்பொடு தடிபடு வழியெல்லாம்
எமக்குஈயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாழ்
தான்நிற்கும் மன்னே;
நரந்தம நாறும் தன்கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;
அருங்கலை இரும்பாணர் அகல்மண்டைத் துளைஉரீஇ
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன்கண் பார்வை சோர்தர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று;அவன்
திருநிறத்து இயங்கிய வேலே;
ஆசுஆகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனி, பாடுநரும் இல்லை;
பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்கு, பிறர்க்கொன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே”
(புறநானூறு-235235)
மேற்கண்ட பாடலில் முதல் அடியும் ஈற்றடியும் நான்கு சீர்களைப் பெற்று வந்துள்ளன. இடையிடையே ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களும் வந்துள்ளன.
நிலைமண்டில ஆசிரியப்பா
அனைத்து அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று அளவடியாகவே வரும். ஈற்றடியின் ஈற்றுச் சீர் “என்” எனும் அசைச் சொல்லால் முடிவது சிறப்புடையது. ஒற்றெழுத்திலும் இது முடியலாம். நிலைமண்டில ஆசிரியப்பா ஏகாரத்திலும் முடியலாம்.
எடுத்துக்காட்டு
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்
(திருவாசகம்)
மேற்கண்ட பாடலில் அனைத்து அடிகளும் அளவடிகளாக வந்து ‘ம்’ என்ற ஒற்றால் முடிந்திருக்கிறது.
அடிமறி மண்டில ஆசிரியப்பா
பாடலின் எந்த அடியையும் எந்த இடத்திற்கு மாற்றினாலும் பொருள் மாறாமல் வரும் ஆசிரியப்பாவை அடிமறி மண்டில ஆசிரியப்பா என அழைக்கிறோம்.
எடுத்துக்காட்டு
மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்பனி வரலா னாவே
ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே
சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவரல் ஆறே
மேற்கண்ட பாடலில் உள்ள எந்த அடியையும் எந்த இடத்தில் வைத்தாலும் பொருள் மாறாது. ஒவ்வொரு அடியும் தன்னளவில் பொருள் முழுமை பெற்றிருப்பதே அதற்குக் காரணம்.
– மனோந்திரா (தொடரும்)
1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/
2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/
3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/
4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/
5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/
6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/
7)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-7/
8)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-8/
9)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-9/



