
வகுப்பறைகளைச் சிறைக்கூடங்களைப் போல உருமாற்றிவிடுகிற பள்ளிக்கூடங்கள் நிறைந்த நிலமாகிவிட்டது தமிழ்நிலம். அதிலும் வகுப்பறைகளின் கெடுபிடிகளுக்குள் பொருந்திப் போக முடியாத மாணவ, மாணவியர் தெறித்து ஓடுகிறார்கள். திரும்பி ஒருபோதும் வந்து சேரக்கூடாத இடம் பள்ளிக்கூடம் என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுடைய இந்த மனநிலையை வடிவமைத்ததில் ஆசிரியர்களுக்கும் பங்குண்டு. அதிலும் குறிப்பாக தொன்னூறுகளுக்குப் பிறகு கல்விக்கூடங்கள் கிட்டத்தட்ட தனியாரின் கைகளுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்துவிட்டது. மாணவர்கள் மீதான அழுத்தம் மட்டுமல்ல, உதிரிப்பாட்டாளிகளுக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட மிகவும் குறைவான ஊதியம் பெறுகிற ஆசிரியர்களின் உளவியல் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அவர்களுடைய தினசரியைக் கடத்துவதே பெரும் போராட்டமாகிப் போனதால் ஏற்படுகிற மன அழுத்தத்தை அவர்கள் எழுதிக் கடத்திடும் காகிதமாக மாணவர்களை வரித்துக் கொள்கின்றனர். இதன் உபவிளைவுகள் மிகவும் சிக்கலாகிவிடுகிறது. கல்விச் சாலைகளை சித்ரவதைக்கூடம் என மாணவர்கள் நினைக்கவே செய்கிறார்கள். அப்படியான மாணவியின் கதையே மரி எனும் ஆட்டுக்குட்டி. எழுத்தாளர் பிரபஞ்சனின் மிகச்சிறந்த கதை ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’.

எழுத்தாளர் பிரபஞ்சன் என்பதுகளில் தமிழ் இலக்கியத்தின் தனித்த வகைமாதிரி. அவருடைய ‘ அப்பாவின் வேஷ்டி’ எனும் கதை மனித உணர்வுகளைக் கதையாக உருமாற்றும்போது ஏற்படும் ரசவாதத்திற்கான சாட்சி. நவீன இலக்கியம் என்றாலே அது சிற்றிதழ்சார் எழுத்துதான் என்றிருந்த சூழலைக் கலைத்து எழுதுதல் எனும் இலக்கியப்பணியை நேர்த்தியாக செய்தவர் பிரபஞ்சன். புதுச்சேரியில் பிறந்திருந்தாலும் அவருடைய கதைகளின் நிலம் தமிழ்நாடுதான். அவருடைய பல கதைகள் விகடனில் மட்டுமல்ல, குங்குமம், குமுதம் போன்ற வெகுஜன வர்த்தக இதழ்களில் வெளிவந்தது. எந்தப் பத்திரிகையில் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி எழுத வேண்டும். எழுதுகிற கதைகள் யாரின் மனநிலைச் சொற்களை பேசுகின்றன என்பதே முக்கியம். இந்தக் கருத்தில் மிகவும் உறுதியாக இருந்தவர் பிரபஞ்சன் என்பதையே அவருடைய எல்லாக் கதைகளும் வாசகர்களுக்கு உணர்த்துகின்றன. அவருடைய ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ எனும் சிறுகதை அவருடைய கிளாஸிக்கல் சிறுகதைகளில் ஒன்று.
‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ எனும் கதை ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரின் அறையில் துவங்குகிறது. தலைமை ஆசிரியர், தமிழ் ஆசிரியரை அழைத்து அற்புத மரிக்கு டி.சி..கொடுக்கப் போறோம் என்கிறார். அந்த சொற்றொடர் வழியாக தலைமை ஆசிரியர் மன ஓட்டத்தில் யார் அந்த அற்புத மரி என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறார் பிரபஞ்சன். பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் அவள். அவள் அரசுத்தேர்வு எழுத வேண்டும். ஆனால், அது பற்றிய அக்கறையோ,கவனமோ அவளுக்கு இல்லை. நினைத்தால் பள்ளிக்கூடம் வருவாள். அடிக்கடி லீவு எடுக்கிறவள். அதனைக் குறித்து அவளுடைய முகவரிக்கு எத்தனையோ கடிதம் எழுதினாலும் அதையெல்லாம் துளியும் சட்டை செய்வதில்லை. அவளைப் போலத்தான் அவளுடைய பெற்றோரும். அவர்கள் ஒருமுறைகூட பள்ளிக்கு வந்ததில்லை. இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் அவளைத் தேர்வு எழுத வைத்தால் பள்ளிக்கூடத்தின் ஒட்டுமொத்த ரிசல்ட்டும் குறைந்துவிடும் என்பதால் மரிக்கு டி.சி.கொடுப்பதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்பதை தலைமை ஆசிரியர் அந்தப் பள்ளிக்கூடத்தின் தமிழ் ஆசிரியரை அழைத்துச் செல்கிறார்.
சமீப நாட்களில் மாணவர்கள் பள்ளியை விட்டு விலகி ஓடுகிறார்கள். நிஜத்தில் அவர்களை இடையில் நின்ற மாணவர்கள் எனும் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள். பள்ளி நிர்வாகத்தால் கண்டறியப்படுகிற இப்படியான மாணவர்களின் பின்புலம் பற்றி துளிக்கவலையும் அவர்களுக்கு இல்லை பள்ளி நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒன்பதாம் வகுப்பில் எப்படியாவது மரி போன்ற குழந்தைகளை வடிகட்டிவிட வேண்டும். இல்லையென்றால் பள்ளிக்கூடத்தின் தேர்வு சதவீதம் குறைந்துவிடும். பள்ளிக்கூடத்தின் பெயரும் கெட்டுப்போகும். இதனை எதிர்கொள்ள பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்து வைத்திருக்கும் ஒரேவழி டி.சி..அது மட்டுமே தீர்வு என்பதில் எல்லாப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களைப் போலவே அற்புத மரியின் தலைமை ஆசிரியரும் முடிவு செய்கிறார்.
சமூகத்தின் நடவடிக்கைகளை வடிவமைக்கும் கலாச்சார கருவிகள் பள்ளிக்கூடங்களில்தான் நடைமுறைக்கு வருகிறது. அதனால்தான் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளிடம். நீ எப்பிடி படிச்சாலும் பரவாயில்லை. எங்களுக்கு ஒழுக்கம்தான் முக்கியம் என்பதை திரும்ப திரும்ப ஆசிரியர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். குருகுலக்கல்வி காலத்தின் எச்சங்கள் இவை. இன்றுவரையிலும் இது தொடர்கிறது. பள்ளிக்கூட மணியைப்போல ஒழுக்கம்,ஒழுக்கம் என்பதை உரத்து சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். இதனை ஒருபோதும் விட்டுத்தரத் தயாரில்லை பள்ளி நிர்வாகங்கள். கதையிலும்கூட மரியின் டிரெஸ்கோட் தலைமையாசிரை எரிச்சல் அடையச் செய்கிறது. இப்படி டைட் பேன்ட் சட்டையப் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் வருதே இந்தப் பொம்பளைப்பிள்ளை. ஆம்பளை பயலுக மட்டுமல்ல, இளவட்ட வாத்தியார்களும் அவளை துரு துருன்னு பாக்குறாங்களேன்னு ஏதாவது கூச்சம் இருக்குதா? அதுவும் கிடையாது. இப்படி அவளைப் பற்றிய ஏதாவது ஒரு புகாரை மரியின் சொல்வது தலைமையாசிரியரின் வழக்கம்.

ஒழுக்கம் என்றாலே அது பெண்களின் உடல்களின் மீதுதான் எழுதப்படுகிறது. ஒழுக்க மேனேஜர்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது பள்ளிக்கூடங்கள். மரி என்கிற அற்புத மரிக்கு உண்மையிலேயே என்ன சிக்கல் என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வமோ முயற்சியோ அற்றவராக இருக்கிறார் தலைமையாசிரியர். அவருடைய கடைசி அஸ்திரமான டி.சி. கொடுப்பது எனும் குயுக்தியை கையில் எடுக்கிறார். அதற்கான பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்.
ஆசிரியர்களிடம் மரியாதைக் குறைவாக நடக்கிறாள். பள்ளிக்கூட வாசலில் நாலு தடிப் பையன்களோடு பேசிக்கொண்டேயிருக்கிறாள். என்ன ஏதுன்னு விசாரிக்கப் போன ஆசிரியரிடம்,” சார் இவுங்க எல்லாம் பிரென்ட்ஸ். சும்மாதான் பேசிக்கிட்டு இருக்கேன். அப்புறம் பள்ளிக்கூடத்திற்கு வெளியே நடக்கிற விஷயத்தில நீங்க தலையிடக்கூடாது. தலையிட முடியாது” என்று எடுத்து எரிஞ்சு பேசியிருக்கிறாள். அந்த ஆளு நாளு நாளா புலம்பி தவிச்சுட்டாப்புள. இதைக்கூட ஒ.கேன்னு விட்டுறுவோம். ஆனா நேத்து பள்ளிக்கூட மைதானத்தில நடந்தது பெரிய அக்கிரமம். நேற்று பி.இ.டி பீரியட்ல உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பயிற்சி தந்திருக்கிறார். அப்போது அவருடடைய கை தெரியாமல் மரி மீது பட்டுவிட்டது. அதுக்கு எல்லா மாணவிகள் முன்னாடியும் மரி பி.இ.டி யை மானங்கெட்ட வசவு வஞ்சிருக்கா. என்ன சார் உங்க வீட்டம்மா ஊருல்ல இல்லியா?இப்பிடி அலையிறீங்க.. அப்பிடின்னு கேலி பேசியிருக்கிறாள்.அந்த ஆளு ஒரே அழுகை. அந்த பொண்ணுக்கு டி.சி. கொடுங்க. இல்லேன்னா நான் மெடிக்கல் லீவுல போறேன்னு புலம்புறான்யா அந்த ஆளு என தமிழ் ஆசிரியரிடம் வரிசையாக ஒப்புவிக்கிறார் அந்த ஹெச் எம். ஆனால் தமிழ். ஆசிரியர் வழக்கமான ஆசிரியர் இல்லை. இப்படித்தான் எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் ஒரு ஆசிரியர் நிச்சயம் இருப்பார் .எதன் பொருட்டும் மரியை பள்ளிக்கூடத்தில் இருந்து அனுப்பிட அவர் மனம் இடந்தரவில்லை. அவர் அற்புத மரியைத் தேடிப் போகிறார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் அற்புத மரியயைப் போன்ற மாணவிகள் தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு வந்து போவதற்கான சூழல்கள் இப்போதைய பள்ளிக்கூடங்களில் இல்லை. அவர்கள் விட்டு விலகி ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். மந்தையை விட்டு விலகிப் போகிற இந்த ஆட்டுக்குட்டிகளை பட்டியை நோக்கித் திருப்புகிற ஆற்றல் வெகு சிலருக்கே இருக்கிறது. அப்படியான தனித்த அன்பும்,கருணையும் கொண்டவரே தமிழ் ஆசிரியர். அவர் அற்புத மரியின் வீட்டிற்குப் போகிறார். அவர் மட்டும் போகவில்லை. அவருடன் தன்னுடைய மனைவியைவும் அழைத்துச் செல்கிறார். இதனை அந்தக் குழந்தை எதிர்பார்க்கவில்லை. தடுமாறுகிறது. இருவரும் அவளையும் அவளுடைய குடும்பச்சூழலையும் அவளிடமிருந்தே கேட்டுப் பெறுகின்றனர்.
“அப்பா இல்லை சார். இல்லையென்றால் அவர் இறந்துவிட்டார் என்று அர்த்தமில்லை. அவர் இப்போது என்னுடன் இல்லை. வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்துகிறார். என்னுடைய அம்மா எப்போதாவது வீட்டுக்கு வருவார். நிறைய பணம் தருவார். பிறகு போய்விடுவார். சில நாட்களுக்குப் பிறகு வேறு ஒருவருடன் நெருக்கமாக அம்மாவைப் பார்த்தேன். எனக்கு அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. இருக்கிறார்கள். ஆனால் இல்லை. உடைந்த குடும்பங்களில் வளரும் குழந்தைகளின் மனநிலை ஒற்றைத் தன்மையிலானது இல்லை. அவ்வளவுதான் உடைந்து போகிறார் தமிழ் ஆசிரியர். என்னப்பா உங்க பள்ளிக்கூட நடைமுறை. இப்படியான குழந்தைகள்தான் படித்து மேல வர வேண்டும். அதற்காக நான் முயற்சிப்பேன் என்று மனதிற்குள் வைராக்கியமாகிறார்.
ஒரு வாரம் அந்தக் குழந்தையின் வீட்டிற்கு தமிழ் ஆசிரியரும்,அவருடைய மனைவியும் போகிறார்கள். நித்தமும் காலை உணவு மரிக்கு வாத்தியார் வீட்டில்தான் சாப்பாடு. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வெளியிடத்துக்கு அழைத்துப் போகிறார்கள். பார்க்,பீச்,ஹோட்டல் என்று அழைத்துப்போவதும்,பிறகு அவளை வீட்டில் வந்து விடுவதையும் ஒரு தவம் போல செய்கின்றனர். அந்தக் குழந்தைக்கு எது தேவையாக இருக்கிறது என்பதை மிகுந்த கனிவுடன் கண்டறிந்தவர்கள் அந்த தமிழ் ஆசிரியரும் அவருடைய மனைவியும்.. அன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் அவளை வழக்கம் போல விட்டுத்திரும்பும்போது அற்புத மரி தடுமாறுகிறாள்.” சார் இந்த ஏழுநாள்ல ஒருநாள்கூட ஏன்டா நீ பள்ளிக்கூடத்திற்கு வரலன்னு கேட்கவேயில்லை. என்னைய பளார்னு கன்னத்தில அறைஞ்சி பள்ளிக்கூடத்துக்கு வான்னு சொல்லியிருக்கலாம்ல. ஏன் சார் இவ்வளவு கருணையா என்ட்ட நடக்கிறீங்க. அடிச்சி திருத்த ஆளு இல்லாமத்தான சார் நான் இப்பிடி மந்தையில இருந்து தப்பிப்போன ஆடா சுத்திக்கிட்டிருக்கேன்.” என்கிறாள். அவ்வளவுதான் தமிழ் ஆசிரியருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. கட்டாயம் நீ நாளையில இருந்து பள்ளிக்கூடத்திற்கு வந்துருவே என அங்கு நிற்க முடியாமல் சட்டென வெளியேறுகிறார். நான் எத்தனையோ முறை மரி என்கிற ஆட்டுக்குட்டி எனும் கதையை வாசித்திருக்கிறேன். ஆனாலும் கொப்பளிக்கும் குற்ற உணர்ச்சியையும்,கண்ணீர்த்துளிகளையும் என்னால் கடக்கவே முடிந்ததில்லை.
அற்புத மரியைப் போலவே தமிழ்நாடு முழுக்க மாணவ, மாணவியர் நிறைந்து இருக்கின்றனர். தமிழ் ஆசிரியரைப் போலானவர்களுக்குத்தான் இந்த கார்ப்ரேட் யுகத்தில் பெரும் பஞ்சமாகிவிட்டது.
– மணிமாறன் (தொடரும்)
1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/
2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/
3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/
4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/
5)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/
6)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-6/
7)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-7/



