ஒரு கதை 11: காக்காய் பார்லிமெண்ட்

நிலவுகிற சூழலைக் குறித்து கருத்திடுவது எழுத்தாளரின் வேலையா? எழுத்தாளர் தன்னுள் இயங்குபவர். தனக்குள் விதவிதமாய் தான் எழுத நினைக்கும் கதைகளை கலையாக உருமாற்றி எளிய வாசகனுக்கு தன்னுடைய உயர்ந்த பங்களிப்பென முன்வைப்பவதில் பெருமை கொள்பவர். இந்தக்குரல் எழுத்துலகின் இன்றைய குரல் மட்டுமல்ல. இது எந்நாளும் இருந்து வரும் குரல்தான்.. இந்த குரலை முன் வைப்பவர்கள், தங்களை அதிநவீன இலக்கியர்கள் நாங்கள் என தங்களுக்கு பெயரிட்டும் கொள்கிறார்கள். சமகாலத்தை எழுதுவது எழுத்தாளரின் வேலையல்ல. அதிலும் குறிப்பாக சமகால அரசியலின்மீது கருத்திடுவது ஒரு படைப்பிலக்கியக்காரனின் வேலையில்லை. அவன் காலங்கடந்து நிற்கும் கதைகளை எழுத வேண்டியிருக்கிறது. இப்படி நியாயம் போலத் தோன்றும் கருத்துகளை ஆளும் கருத்தியலுக்கு அணுக்கமாக இருக்க விரும்பும் இலக்கியக்காரர்கள் காலந்தோறும் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பதுங்கிக் கிடந்த இந்தக்குரல் இப்போது பெரியதாக வெளிப்படத்துவங்கியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக வலதுசாரி கருத்தியல்காரன் என தங்களைச் சொல்லிக்கொள்வதில் தயக்கத்துடன் இருந்த பலரும் இப்போது மிகவும் வெளிப்படையாக தான் யார் என்பதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.தேர்தல் அரசியல் குறித்து வாய் திறந்து முணுமுணுக்கக்கூட சக்தியற்று இருந்த அல்லது இது நம் வேலையில்லை என்று பதுங்கியிருந்த எழுத்தாளர்கள் பலரும் ஒரு முடிவிற்கு கொண்டு வாங்கப்பா என அதிகார அரசியல் போட்டிகளின் காட்சிகள் பொது வெளியில் நிகழும் போது மட்டும் சொல்லத் துவங்கியிருக்கின்றனர். திடீர் புரட்சியாளர்கள் அவ்வப்போது உருவாகி வருவதும் நிகழவே செய்கிறது. ஆனாலும் இந்தப் பழங்குரலுக்கு நடுவிலும் சமகால அரசியலை படைப்பிலக்கியத்தின் கச்சாவாக முன்வைப்பதை தமிழ்சிறுகதைகள் அதன் துவக்கப்புள்ளியிலேயே கண்டடைந்திருக்கிறது.

தமிழ்ச்சிறுகதையின் மூலவர்கள் மூவர். வ.வேசு. அய்யர், அ.மாதவையா, சுப்பிரமணிய பாரதி. இவர்களில் வ.வே.சு அய்யர் ஒரு சனாதனி. அவருடைய குளத்தங்கரை அரசமரத்தை முதல் சிறுகதையாக இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு தந்திரம் இருக்கிறது. இன்னும் கவனமாக கவனித்து வாசித்தால் அது தாகூரின் கதையொன்றின் தழுவல் கதை என்று சொல்லிவிட முடியும். பிறகு எப்படி அதனை முதல் சிறுகதை என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள் என்பதே ஒரு அரசியல் கதையாடல்தான். அய்யர் நடத்தி வந்த சேரன்மகாதேவி குருகுலத்தில் நிகழ்ந்த சாதி துவேஷ சம்பவத்தை உள்ளீடாக வைத்தே ஏணியேற்ற நிலையம் என்றொரு சிறுகதையை எழுதியிருந்தார் அ.மாதவையா. ஏணியேற்ற நிலையமும்,பாரதியின் ஆறில் ஒரு பங்கும் குளத்தங்கரை அரசமரத்திற்கு முந்தையவை. பாரதியும்,
அ.மாதவையாவும் . தொடர்ந்து சமகால அரசியல் நகர்வுகளை கதைகளாக எழுதிக்கொண்டிருந்தவர்கள் பாரதியும், மாதவையாவும். ஒருவிதத்தில் முற்போக்கு தமிழ்ச்சிறுகதை இலக்கியத்தின் மூத்த முன்னோடிகள் .

அதிலும் பாரதியார் சகல இலக்கிய வகைமைகளையும் பரிசோதனை செய்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். மரபுக்கவிதைகளை சந்தக்கவிதை எனும் உளி கொண்டு லகுவாக தட்டி எடுத்து புதுக்கவிதைகளுக்கான சாலையைத் திறந்தவர் அவரே. இரண்டாயிரத்திற்குப் பிறகு உலகெங்கும் கவனம் பெற்றுக் கொண்டிருக்கும் குறுங்கதைகள் எனும் இலக்கிய வடிவத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவருடைய மழை,காற்று போலான வசனக் கவிதைகள் குறுங்கதைகளின் மாதிரிகள்தான். எல்லாவற்றையும் பரிசோதித்த பாரதியே அரசியல் கதைகளையும் பரிசோதனை செய்த மூத்த முன்னோடி. அவருடைய காக்காய் பார்லிமெண்ட் எனும் சிறுகதை அரசியல் நகர்வுகளை கதைகளாக எப்படி உருமாற்ற சாத்தியங்கள் இருக்கிறது என கதை எழுத வருபவர்களுக்கு கற்றுக்கொடுத்த கதை.

முதல் வரியில் மொழி அரசியல் குறித்த தர்க்கத்தை நடத்துகிறார் பாரதி. வடக்கேயிருந்து வந்த சாமியார் காக்கை ஒன்றுக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்றுக் கொடுக்க வருகிறார். காக்கையிடம் இந்த பாஷை ரொம்ப சுலபம். காக்கை கூட்டம் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்றும் நிர்ப்பந்தம் செய்கிறார்.சரியென ஒரு காக்கை கற்றுக்கொள்ள முன் வருகிறது. நன்றாக கவனியுங்கள் சரி என்று சொன்னது மொத்த காக்கைகள் கூட்டமல்ல ஒரு காக்கைதான் என்பது ஒரு மொழி அரசியலின் சூட்சுமப்புள்ளி.

“ கா என்றால் சோறு வேண்டும் என்று அர்த்தம். கக்கா என்றால் என் சோற்றில் பங்கு கேட்காதே என்று அர்த்தம்.காக்கா என்றால் எனக்கு ஒரு முத்தம் தா என்று அர்த்தம் என்கிறார் சாமியார். க, கா,ஹா க் எனும் நான்கைந்து குறியீடுகளை வைத்துக் கொண்டு மொத்த ஜந்துக்களின் பாஷையையும் கற்றுக் கொள்ளலாம் என்கிறார் வடக்கத்தி சாமியார். காக்கை தனக்குள் நினைத்துக் கொள்கிறதாம் நல்லவேளை இந்த பரமஹம்சர் எனும் வடக்கத்தியருக்கு தமிழ் தெரியாது என்று ஒரு வரியையும் கதைக்குள் எழுதுகிறார். ஒற்றைப்பத்திக்குள் தமிழ்நாட்டின் அந்நாளைய மொழி அரசியல் குறித்த தர்க்கத்தை கதையாக்கி கடத்த முடிகிறது பாரதியால்.

ஆனாலும், இது மட்டுமல்ல கதை. கதையின் மையப்புள்ளியே இனிமேல்தான் துவங்குகிறது. தான் கற்ற ஜந்து பாஷையை பரிசோதனை செய்திட ஆசைப்பட்ட ஒற்றைக்காகம் மொட்டை மாடிக்குப் போகிறது. அங்கு போய் அமர்ந்து வாயைத் திறந்தால் எதிர்வீட்டு மாடியில் நாற்பது காக்கைககள் தங்களுக்குள் தீவிரமாக பேசிக்கொண்டு இருக்கின்றன. இதுதான் காக்காய் பார்லிமெண்ட் . காலத்தை எழுதுவதே கதைகளின் பணி. பாரதி வடிவமைத்த இந்தக் கதையின் நடுவில் காக்காய் பார்லிமெண்ட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் கிழட்டுக் காக்கை பேச ஆரம்பிக்கிறது. அதுதான் ராஜா காக்கையாம். அது சொல்கிறது “உலகெங்கும் ராஜாக்களுக்கு சொத்திருக்கிறது. இந்த சொத்தின் மதிப்பு கோடி ஏழைகளின் ஆஸ்தி பாஸ்தி என எல்லாவற்றையும் சேர்த்தாலும்கூட அதைவிட அதிகமமாக இருக்கிறது. இது எப்படி எனக்குத் தெரியும் என்கிறீர்களா? நான் நடைபயணம் போனபோது தொலைதூரத்தில் இருந்து அதாவது ருஷ்யாவில் இருந்து ஒரு காக்கை வந்திருந்தது. ஏன் இங்கு வந்திருக்கிறது தெரியுமா? ருஷ்யாவில் ஒரே சண்டையாம் ஜார் அரசனை எதிர்த்து பல கூட்டம் சண்டை போடுகிறார்களாம். ஒன்றல்ல ரெண்டல்ல 120 குழுக்கள் சண்டை போடுகிறதாம். ஒரு குழு மற்ற எல்லாக்குழுவையும் ஜார் மன்னனை எதிர்த்து அழிக்கப் பார்க்கிறார்களாம். ஆனால் ஒன்று ஜாருக்கு கோடி கோடியாக சொத்தாம்…இந்நேரம் ஜார் அழிந்தும் போயிருப்பான் என்றதாம் அந்த ருஷ்ய காக்கை.

“நம்முடைய நாட்டிலும் மன்னர்களுக்கு சொத்துகள் கோடிக்கணக்கில் இருப்பது உங்களுக்கே தெரியும்.அவையெல்லாம் எப்படி வந்தது பொதுமக்கள் கொடுத்த வரிப்பணம். ராஜாக்கள் படோடபமாக வாழ்வதற்கு மக்கள் இங்கு அல்லும் பகலும் அயராது உழைக்கிறார்கள்.உங்களுக்காக ஆட்சி செய்யும் என்னை வளமாக வைத்துக்கொள்ளச் செய்வது உங்களுடைய கடமை” என்கிறது அந்த ராஜா காக்கை.

“நீங்கள் சேகரிக்கிற உணவிலிருந்து ஆறில் ஒரு பகுதியை நீங்கள் எனக்கு தந்துவிட வேண்டும். அவற்றிலிருந்து நான்,என் மனைவிமார்கள், பிள்ளை குட்டிகள், பெரியப்பா,சித்தப்பா, பேரன் பேத்திகள் எல்லோரும் வயிராற சாப்பிட்டுக்கொள்வோம். இதனை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்” என்று சொல்கிறது ராஜகாக்கை. இதனைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு கிழட்டுக்காக்கை. ” ராஜா நீங்கள் இதற்கு முன்பாக இல்லாத புதிய நடைமுறையை சொல்கிறீர்கள். மன்னருக்காக செய்யத்தான் வேண்டும். ஆனால் அதில் ஒரு சின்ன திருத்தம் ராஜாவிற்குப் போலவே மந்திரிக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பனிரெண்டில் ஒரு பங்கு தர வேண்டும் என சட்டம் போட வேண்டும்” என்கிறது அந்த கிழட்டு மந்திரிக்காக்கை. இதையெல்லாம் கவனித்த அண்டங்காக்கை ” ராஜாவும், மந்திரிகளும் உலக மகா திருடர்கள் இவர்கள் உழைக்காமல் உட்கார்ந்து திங்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டத்தை ஒருபோதும் ஏற்கக்கூடாது” என்று முழங்குகிறது..பார்லிமெண்ட் எந்த முடிவிற்கும் போக முடியாமல் ஒரே சத்தமாகக்கிடக்கிறது. இதைப்பார்க்க மனிதக்கூட்டம் வந்துவிடுகிறது. காக்கைககள் சத்தத்தைக் குறைத்துக்கொண்டன.
கதையை முடிக்கும்போது இந்த காக்காய் பார்லிமெண்ட் ஒரு கற்பனைக்கதைதான் வாசகர்களே நம்புங்கள் என்று முடிக்கிறார் பாரதியார்.

உலக அரசியல், உள்ளூர் அரசியல் மன்னராட்சி ஒழிப்பின் விளிம்பில் இந்தியா முழுமையும் வந்நது சேர்வதை இனி தள்ளிப்போடவே முடியாது என்கிற முன்தீர்மாணம் என பாரதி தன்னுடைய காக்காய் பார்லிமெ;ண்ட் கதையை ஒரு தேர்ந்த அரசியல் கதையாக வடித்திருக்கிறார்.
ம.மணிமாறன் (தொடரும்)

1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/

2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/

3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/

4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/

5)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/

6)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-6/

7)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-7/

8)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-8/

9)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-9/

10)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-10/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *