ஒரு கதை 12: கு.அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்

தமிழ்ச்சிறுகதைகள் குறித்த உரையாடலை ஒவ்வொருவரும் அவரவர்க்கான புள்ளியிலிருந்து துவங்கி பேசத் தலைப்படுகின்றனர். எவரும் தமிழ்ச்சிறுகதைகளின் தலைக்கதையான குளத்தங்கரை அரசமரத்தை எழுதிய வ.வே.சு. அய்யரிலிருந்து துவங்குவதில்லை. ஏணியேற்ற நிலையம் எழுதிய அ.மாதவையாவில் இருந்தும்கூட துவங்குவதில்லை. ஏன் பாரதியிலிருந்தும் துவக்கிப் பேசுவதில்லை. எது தமிழின் முதல்கதை எனும் குழப்பம் இன்றுவரையிலும் தீரவேயில்லை. ஆனால் எல்லோரும் பொதுவில் புதுமைப்பித்தனில் இருந்தே துவங்குகின்றனர்.

இது அறுபது எழுபதுகளில் கதைகள் வாசிக்க வந்தவர்களைப்பற்றிய அனுமானம். என்பதுகளில் வாசிக்க வந்தவர்கள் பிரபஞ்சன், அசோகமித்திரன் எனத்துவங்கி ஜெயகாந்தனுக்குள் கொஞ்சம் நுழைந்து பிறகே புதுமைப்பித்தனுக்குள் வந்து சேர்கின்றனர். தமிழ்ச்சிறுகதைகளின் வாசிப்பு ஒற்றைத் தன்மையிலானதில்லை. சுந்தராமசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன். சிலருக்கு கோணங்கி என துவக்கப்புள்ளிகள் எப்போதும் தமிழ் வாசகனுக்கு ஒருவரில்லை. தமிழ்ச்சிறுகதைகளைப் போல இத்தனை ஆரம்பபுள்ளிகளும், இவ்வளவு சிறுகதை மாஸ்டர்களும் வேறு எந்த மொழிக்கும் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும். அத்தனை மாஸ்டர்கள் தமிழில் இருக்கிறார்கள். இப்பிடி அசாத்தியமான மாஸ்டர்களில் தனித்தவர் கு.அழகிரிசாமி.

கரிசல் இலக்கியம்
கரிசல் இலக்கியம் என்கிற தனித்த வகைமையை நெறிப்படுத்தியவர் முறைப்படுத்தியவர் என கி.ராஜநாராயணனையே எல்லோரும் சொல்கிறார்கள். இது உண்மைதான். இதையும் தாண்டிய மற்றொரு உண்மையும் இருக்கிறது. அது வேறு ஒன்றும் இல்லை. கரிசல் இலக்கியத்தின் தலைமகன் கு.அழகிரிசாமி. இடைச்செவல் கரிசலின் தலைநகரம். அவருடைய கதைகள் எங்கும் பொங்கிப் பெருகுவது கரிசலின் வெக்கையும், அந்த வெக்கை மனிதர்களின் அசல் வாழ்க்கையும்தான்..

எழுத்துக்களின் மொழியையும், கதைகளின் கட்டமைப்பையும் கதைகள் நிகழும் நிலத்தின் தன்மைகளே ஒரளவிற்கு முடிவு செய்கின்றன. வெம்மையை உறிஞ்சிக் கிடக்கும் கரிசல்காட்டு மனிதர்களின் கதைகளை ரசமான வசந்தம் கொப்பளிக்கும் சொற்களால் எழுதிட முடியுமா?. குளிர்ச்சியையும், சௌந்தர்யம் பொங்கும் வாழ்க்கையும் வசப்படுமா எனத் தேடி காடோ, பரதேசமோ என அலைந்து கொண்டிருக்கும் வாழ்வின் கதைகளை நின்னு நிதானிக்கும் மொழியால் எழுதிட இயலுமா?. கரிசல் மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளையும் வாழ்வு நகர்ந்து செல்லும் பாதைகளில் எதிர்ப்படும் சிக்கல்களையும் அந்த கணத்திற்கே உரிய தொனியில் கதைகளை கச்சிதமாக எழுதியிருக்கிறார் கு.அழகிரிசாமி.

தன் கதைகளை வெறும் கதைகளாக மட்டும் பார்ப்பவரல்ல கு.அழகிரிசாமி. தன் வாழ்வின் பிரிக்கவே முடியாத பகுதியாகாவே அவர் கலையையும், கதைகளையும் வரித்துக்கொண்டவர். தன்னுடைய மகன்களுக்கு சாரங்கன், ராமச்சந்திரன் எனப் பெயர் சூட்டியிருக்கிறார். அதற்கு கு.அழகிரிசாமி சொல்லும் காரணங்கள் பொருட்படுத்தி கவனிக்க வேண்டியவை. சாரங்கன் எனும் அவருடைய மகனின் பெயர் அவர் எழுதிய அன்பளிப்புக் கதைக்குள் குழந்தைகளின் முன் கையறுநிலையில் வெட்கி தலைகவிழ்ந்து நிற்கும் ஒரு பத்திரிகையாளனின் பெயர். தன்னுடைய கடுமையான செயல்களின் விளைவிற்காக மனம் வருந்துகிற மனிதர்களால்தான் இந்த உலகம் அன்பொழுக இயங்குகிறது என்பதில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர் கு.அழகிரிசாமி. அதனால்தான் சாரங்கன் என அவரே உருவாக்கிய கதாபாத்திரத்தின் பெயரை மகனுக்கு வைத்திருக்கிறார். அவரே பலமுறை சொன்னதைப் போல அவருக்கு மிக மன நெருக்கமான கதாபாத்திரமான ராமபிரானின் பெயரையே அவர் தன்னுடைய மற்றொரு பிள்ளைக்கு சூட்டியிருக்கிறார். எழுத்து வேறு வாழ்க்கை வேறு என்று எப்போதும் பிரித்துப் பார்த்திட பழகாதவர் கு.அழகிரிசாமி என்பதற்கான சாட்சியங்களே இவை. ஒரு விதத்தில் அவருடைய எழுத்துக்கள் மனித வாழ்வின் துயரங்களை, கலையாக்கிடும் வித்தைதான்.

எங்கும் குழந்தைகள்
தமிழ்ச்சிறுகதைகளின் மூலஊற்று மனித வாழ்க்கைதான். அது ஒன்றும் தனித்ததல்ல. சூன்யத்தில் முகிழ்த்திட சாத்தியம் கொண்டவையுமல்ல. வாழ்க்கைப்பாடுகள் யாவும் வெளிப்படைத் தன்மையோடுதானே இருக்கின்றன. பிறகு எதற்காக கதைகளை மட்டும் பூடகமான மொழியில் எழுதவேண்டும். எந்தவிதமான மொழிப்பாசாங்கோ தப்பித்தலும் இன்றியோ கதைகளை மிக மிக எளிய மொழியில் எழுதியிருக்கிறார் கு.அழகிரிசாமி.

இத்தனை வெளிப்படையாக சொல்லப்படுகிற கதைகள் யாவும் பூரணமும் அமரத்துவமும் பெற்ற கதைகளாகவே வெளிப்பட்டுள்ளன. வறுமை பிடுங்கித் தின்னும் வாழ்க்கையை விதியென ஏற்று தடுமாறுகிற வாழ்க்கையையும் அதன் துயருற்ற பகுதிகளையும் அழுத்தமாக கதையாக்கியவர் கு.அழகிரிசாமி. திரிபுரம் கதை தமிழின் தேர்ந்த செவ்வியல்கதை. பசி மான அவமானம் பார்ப்பதில்லை. கொதித்துக்கிடக்கும் வயிற்றின் தீச்சுவாலையை குளிர்விக்க மனிதர்கள் படுகிற அலைக்கைகழிப்பும் துக்கமுமே வாழ்கை. திரிபுரம் கதை நிகழும் நிலமான சாத்தூரின் வெள்ளை வெயிலும் பறந்து தெறிக்கும் தூசிகளும் கதை வாசிக்கும் வாசகனை மூச்சுமுட்டச் செய்கின்றன. அந்த சுடுமணலில் ஒரம் கரும்பிக்கிடந்த வெள்ளரிக்காயில் இருந்து சிதறித் தெறித்தவெள்ளரி விதைகளே கு.அழகிரிசாமிக்குப் பிறகு கதை எழுத வந்த கரிசல் எழுத்தாளர்களின் கதைச் சொற்கள் ஆகின..

தமிழ்ச் சிறுகதையாளர்கள் எப்போதுமே பெண்களின் மீதும் குழந்தைகளிடமும் கரிசனம் மிக்கவர்கள். அதிலும் குறிப்பாக ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் பொருட்படுத்தி வாசிக்கப்படுவது அவருடைய கதைகளுக்குள் குழந்தைகள் என்னவாகிறார்கள்.குழந்தைகளின் மனஉலகின் பாய்ச்சல் வேக மன மாற்றங்களை எழுத்தாளன் சரியாக பிடித்து எழுதி விடுகிறாரா இந்த எழுத்தாளர் என்று அறிந்து கொள்வதில்தான் எழுத்தாளனின் மேதமை வெளிப்படும். கு.அழகிரிசாமி மகா மேதை. அவருடைய கதைகள் எங்கும் குழந்தைகள் அவரவர் இயல்பில் நடமாடுகிறார்கள்.

ராஜா வந்திருக்கிறார்

கு.அழகிரிசாமியின் மகத்தான கதைகளில் ஒன்று ராஜா வந்திருக்கிறார். குழந்தைகளின் மன உலகம் மகா விசித்திரமானது. ஒரு நொடியில் அன்புமிகுதியில் நண்பர்களை கட்டித் தழுவும் அவர்கள்தான் மிக மூர்க்கமாக தன்னையொத்த சிறுவர்களை புறக்கணிக்வும் செய்கிறார்கள். ஏன் குழந்தைகளையும் அவர்களின் மன உலகத்தையும் இப்போது பேச வேண்டியிருக்கிறது என்றால் அவர்களால் புதிய விளைவுகளை உருவாக்க முடியும் என்பதை காலம் நமக்கு காட்டித் தந்திருக்கிறது.

முழுக்க முழுக்க குழந்தைகளே நடத்திச் செல்லும் கதை ராஜா வந்திருக்கிறார். பள்ளிக்கூடத்தில் நடக்கும் படப்போட்டியில் துவங்குகிறது கதை. இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொண்டு குழந்தைகள் அந்த போட்டி விளையாட்டை விளையாடுகிறார்கள். இரண்டு குழுக்களில் ஒரு குழுவின் தலைவன் அந்த ஊரின் பெரும் நிலக்கிழாரின் பையன். மற்ற குழுவைச் சேர்ந்தவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி வீட்டுப்பிள்ளைகள்.

போட்டி உக்கிரமாக நடக்கிறது.போட்டியில் பணக்கார வீட்டுப் பையன் தோற்றுப் போகிறான். வெற்றி பெற்ற குழந்தைகள் வழக்கம் போல வக்கனம் காட்டுகிறார்கள். தோ. தோ..நாய்க்குட்டி தோத்தாங்கோலி நாய்க்குட்டி என ஊளையிடுகிறார்கள். தோல்வியை ஏற்கும் மனமில்லாத அந்த பணக்காரச்சிறுவன் பள்ளிக்கூடம் விட்ட பிறகும் விளையாட்டைத் தொடர்கிறான்.

எங்க வீட்ல ஆடு இருக்கு உங்க வீட்ல ஆடு இருக்கா? என மூர்க்கமாகிறது விளையாட்டு.. பதிலுக்கு பதிலு போட்டி நிற்காமல் தொடர்கிறது. வீடு வந்து விட்டதால் விளையாட்டைத் தெருவோடு விட்டுவிட்டு வீடு நுழைந்தார்கள். வீட்டிற்கு வந்தபிறகுதான் மறுநாள் தீபாவளி என்பதே குழந்தைகளுக்கு தெரிகிறது. மனம் தீபாவளியை நோக்கி நகர்கிறது. இப்படித்தான் குழந்தைகள் சட்டென எல்லாவற்றையும் மறந்துவிட்டு வேறு புதிதான ஒன்றிற்குள் புகுந்து விடுவார்கள். குழந்தைகளின் மனஉலகம் பிடிபடாமல் நழுவிச்செல்லும் விசித்திர நூதனம். தீபாவளிக்கு புதுத்துணி போடனும். பட்டாசு வெடிக்கனும். பலகாரம் சாப்பிடனும் என சந்தோசத்தில் திளைக்கிறார்கள்.

வறுமை பிடுங்கித்தின்னும் வீடு அது. தந்தை பணம்தேடி தொலைதூரம் போயிருக்கிறான். சீக்கிரம் வரவேண்டும் என குலதெய்வத்தை கும்பிடுகிறாள் தாயம்மா. குழந்தைகளின் தாயவள். மழை வெளுத்துக் கொட்டுகிறது. மழையை வேடிக்கை பார்க்க வெளிவந்த குழந்தைகள் உற்று கவனிக்கிறார்கள். ஒரு சிறுவன் மழைக்கு ஒதுங்கி மரத்தடியில் நிற்கிறான். உடம்பெல்லாம் சிரங்கு பொத்துக்கிடக்கிறது. சீ..பூச்சாண்டி, பிச்சைக்காரன் எனக் கத்தியபடி தட தடவென வீட்டிற்குள் ஓடிப்போகிறார்கள். அம்மா பாரு பூச்சாண்டி, உடம்பெல்லாம் புண்ணு என்று அம்மாவை தர தரவென இழுத்துக்கொண்டு வருகிறார்கள். தாயம்மா பார்க்கிறாள். யாருடா நீ இங்க எப்பிடி வந்த என பாந்தமாக கேட்கிறாள். அம்மா நான் கிழக்க இருந்து வாறேன். அம்மா, அப்பா இல்ல. செத்துப் போனாங்க பாட்டிவீட்டுக்கு நடந்தே போய்க்கிட்டு இருக்கேன். மழை பேஞ்சதா, அதான் மரத்துப்பக்கமா ஒதுங்கிட்டேன் என்கிறான். கண்ணீர் கொப்பளிக்கிறது தாயம்மாவிற்கு. கடவுளே இது என்ன சோதனை என அந்த வீட்டிற்குள் அழைத்து வருகிறாள் தாயம்மா. அவளுடைய பிள்ளைகள் அய்யோ புண்ணு, சிரங்கு என ஓங்களிக்கிறார்கள். பாவம்டா. இதுவும் ஒருபிள்ளைதான என அந்தச்சிறுவனுக்கும் தலைக்கு எண்ணெய் வைத்து குளியல் செய்கிறாள். யாரு பெத்த பிள்ளையோ என அரப்பு தேய்த்து புண்ணு பொடுகு எல்லாவற்றையும் சுத்தம் செய்கிறாள்.

தீபாவளி விடிந்துவிட்டது. இன்னும் கணவனைக் காணும். எப்போதே எடுத்து வைத்திருந்த புதுத்துணிகளைத் தருகிறாள். வந்த சிறுவனுக்கு கொடுக்க எதுவும் இல்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது அவளுக்கு. அப்போது அந்த பெண்குழந்தை சொல்கிறாள். யம்மா அப்பாவுக்கு எடுத்து வைச்சிருக்கிற புதுத்துண்ட குடுமா பாவம் இந்த பையன் என்கிறாள். குழந்தைகளின் மன அரங்கில் எப்போது என்ன மாற்றம் நடக்கும் என்பதை இங்கே எவராலும் கண்டுபிடிக்க முடியாது. சில நொடிக்கு முன்புவரையிலும் சீ அசிங்கம் என சொல்லிக் கொண்டிருந்த குழந்தைகள்தான். இப்போது தன்னுடைய புதுச்சட்டையை தரும் அளவிற்கு மனம் மாறிப்போகிறார்கள். இந்த உளவியல் மாற்றம் எங்கே எந்தப்புள்ளியில் முகிழ்த்தது என்பது கதைகளாலும்கூட கண்டறி முடியாத விசித்திரம். இன்னும் கூட கதை முடியவில்லை. ஒருவிதத்தில் பார்த்தால் கதையே இனிமேல்தான். அன்று இரவு முழுவதும் பணக்கார வீட்டில் இருந்து வாண வேடிக்கை தூள் பறக்கீறது. கல்யாணம் முடித்து அந்த வீட்டிற்கு மருமகனாக வந்திருப்பவருக்கு தலைத் தீபாவளி. ஊரையே அமர்க்களப்படுத்துகிறார்கள்.

அந்த வீட்டுச்சிறுவன் வெளியே வருகிறான். நேற்றைய போட்டியில் தான் தோற்றதை ஒப்ப மறுக்கிறது அவன் மனம். குடியானவன் வீட்டுப்பிள்ளைகளைப் பார்த்துச் சொல்கிறான். எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார். உங்க வீட்டுக்கு யார் வநந்திருக்கிறாகள் என்கிறான். குழந்தைகள் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. ஏன் எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறார். அவருக்கு நாங்க புதுத்துணியெல்லாம் குடுத்திருக்கோம். வேனும்னா வந்து பாக்கிருயா…என்கிறாள். குழந்தைகள் மன உலகம் மாயம் கொண்டது. எந்த நொடியிலும் விலகி வெகுதூரம் செல்லுமம் வல்லமை மிக்கது.கு.அழகிரிசாமி முற்போக்கு இலக்கியத்தின் மூத்த தலைமகன். அவருடைய ராஜா வந்திருக்கிறார் தலைமுறை கடந்தும் சாகா வரம் பெற்ற அமரத்துவமான கதை.
ம.மணிமாறன் (தொடரும்)

1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/

2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/

3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/

4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/

5)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/

6)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-6/

7)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-7/

8)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-8/

9)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-9/

10)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-10/

11)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-11/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *