
பிஎன்பி கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான்.
வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 212 இடங்களைக் கைப்பற்றி வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) முன்னிலை வகிக்கிறது.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக 2024-ம் ஆண்டு மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதனால் நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்த நிலையில், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டடது. இந்த நிலையில், 18 மாதங்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் நேற்று(பிப்ரவரி 12) தேர்தல் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது.முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மானின் பிஎன்பி தலைமையிலான கூட்டணி அனேக இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இதன்படி பிஎன்பி 212 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிற கட்சிகளும் கூட்டாக சுமார் ஆறு இடங்களை வென்றுள்ளன.
தனது தாயார் கலீதா ஜியாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தேர்தலுக்கு முன்பு இந்த வெற்றி கொண்டாட்டத்தை ஒத்திவைக்குமாறு பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, வெள்ளிக்கிழமை கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு கலீதா ஜியாவுக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளனர்.



