
‘ஜனநாயகன்’ ஆன்லைன் ரிலீசுக்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தவெக தலைவரான நடிகர் விஜய் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்தார். இப்படம் தான் அவரது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்களாகியும் பல்வேறு பிரச்சினைகளால் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. கூட்டு சதி காரணமாக இந்த படம் வெளியாகவில்லை என்று விஜய் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் திடீரென இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து 3 மணி நேரப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவும், தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சியடைந்தது. இந்த படத்தை பகிர வேண்டாம் என்று படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் வேண்டுகோள் விடுத்தார். இப்படத்தை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் லீக்கானதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான் காரணம் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். மத்திய அமைச்சர் எல்.முருகனும், உதயநிதியும் இணைந்து செயல்பட்டதாகக் குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனா, . புதிய தலைவர்களை ஒடுக்க பாஜக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டுச்சதியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கரூரில் உள்ள 4 தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி வெல்லும். கோவை தெற்த் செந்தில் பாலாஜி படுதோல்வி அடைவார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானதற்கு போஸ்ட் புரடக்ஷன் நிறுவனம்தான் பொறுப்பு. ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியானாலும் திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன். ‘ஜனநாயகன்’ ஆன்லைன் ரிலீசுக்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று மறுத்துள்ளார்.



