நூல் விமர்சனம்: தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

தமிழ் மொழி காலத்தால் முற்பட்டது என்றாலும், அதன் இலக்கிய வகைமையுள் சிறுகதையின் வயது சற்றேறக்குறைய 125 ஆண்டுகள் மட்டுமே, மேனாட்டிலிருந்து வருகை தந்தததால், அது தமிழ் மண்ணின் ஈரம் பெற்று எழுதிப் பழக சிறிது காலம் எடுத்துக் கொண்டது. அந்த வகையில் தமிழ்ச் சிறுகதையின் முதல் ஐம்பது ஆண்டு கால வரலாற்றை 1920-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை, நவீன தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு, தீவிர வாசிப்பாளர் 50 புத்தகங்களை எழுதிக் குவித்தவர், இலக்கிய உலகை ஒரு பருத்துப் பார்வை பார்க்கத் தெரிந்தவர், நடுநிலையோடு ஒரு படைப்பை பார்க்கத் தெரிந்தவர் அன்புத் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களைத் தவிர, சிறுகதையின் வரலாற்றை உரசிப் பார்க்க, எடை போட யாரால் முடியும். ஆகவே தகுதியான கரம் கொண்டு எழுதப்பட்ட இப்படைப்பு சாகித்திய அகாதமி விருதையும் வென்றிருக்கிறது என்பது மிகச் சிறப்பானது.

முன்னுரையில் அவரே மிக எளிதாக எட்டு வகைகளாக இக்கதைகளை பிரித்து இருக்கிறார்.

1 கலை கலைக்காகவே என்றொரு கூட்டம்
2 அதற்கு எதிரே கலைகள் யாவும் மக்களுக்கே என்றொரு கூட்டம்
3 திராவிட இயக்க கதைக்காரர்கள்
4 காங்கிரஸ் இயக்க கதைக்காரர்கள்
5 கலைகள் யாவும் வியாபரமே எனும் ஒரு கூட்டம்
6 தலித் இலக்கியம் என்றொரு வகைமை
7பெண்ணியப் படைப்புகள்
8 சிறுபான்மை எழுத்துகள் என்று எழுத்தை வகைப்பாடு செய்து கொள்கிறார்.

சிறுகதை என்றால் என்ன, அதன் இலக்கணம் இலக்கியக் கூறுகள் பற்றியெல்லாம் அவர் பாடம் எடுக்கவில்லை. இருக்கின்ற சிறுகதைகளைத் தரப்படுத்தி வகைப்படுத்துகிறார். அதன் போக்குகள், அதன் வளர்ச்சிகள் தமிழ் இலக்கியச் சூழலில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்ப காலத்தில் எவரெல்லாம் எழுத வந்தனர். முதல் ஐம்பது ஆண்டு காலத்தில் சிறுகதை உலகம் அடைந்த வளர்ச்சி எத்தகையது. புதிதாக எழுத வருகிற ஒருவர், எவற்றை எடுத்துக் கொண்டு எவற்றை விட்டு விட வேண்டும் என்று, எழுத்துலகின் சகபயணி போன்று ஆலோசனையை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார். மொத்தம் 52 கட்டுரைகள் 64 எழுத்தாளர்கள் அவர்களைப் பற்றிய அறிமுகம், அவர்களின் கதை பற்றிய விமர்சனப் பார்வை என்று சுவையான மொழியில் ஒரு வழிகாட்டி போல விளக்குகிறார். உள்வாங்குவோரிடம் இருக்கிறது இப்புத்தகத்தின் பெருவெற்றி.

ஏறத்தாழ நாற்பது எழுத்தாளர்கள் பிராமணர்கள் என்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. கல்வி எவர் வசம் இருந்ததோ அவர்களே எழுதத் துவங்கி இருக்கிறார்கள். கல்வி பரவலாக்கம் செய்யப்படும் பிற் காலத்தில் மற்றோரும் எழுதத் துவங்கி இருக்கிறார்கள். வ.வே சு அய்யரின் குளத்தங்கரை அரச மரம் துவங்கி, கந்தர்வன் வரை ஆராய்ந்திருக்கிறார். விடுபட்டவர்களும் பிற்காலத்திய ஐம்பது வருடமும் அடுத்து எழுதப்படுகையில்,இந்தத் தொகுப்பு இளையோர்க்கு இன்னும் நெருக்கமாக மாறும். வாசிப்பும் எழுத்தும் உள்ள எத்தனை பேர் இந்த தொகுப்பில் உள்ள எழுத்தாளர்களின் கதைகளை வாசித்திருப்பர் என்பது அவரவரது ஆன்ம பரிசோதனைக்கு உட்பட்டது.

சிறுகதையில் உருவகமா, உள்ளடக்கமா எனக் கேட்டால் உள்ளடக்கமே பிரதானம் என்கிறார். அந்த வகையில் நின்றுதான் 64 எழுத்தாளர்களையும் வாசித்து வகைப்படுத்தியிருக்கிறார். அதனால்தான் இராஜாஜியின் சிறுகதைகளை கூட எதிர் கருத்து நிலையில் நின்ற போதும் அவரது சிறுகதைகளையும் பாராட்டியிருக்கிறார்.

ஏறத்தாழ 189 புத்தகங்களை வாசித்து, 6 ஆயிரம் சிறுகதைகளைப் படித்து, 64 எழுத்தாளர்களை கண்டறிந்து இருக்கிறார். அதில் 7 பெண் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஒரு கதை மட்டுமே எழுதிய மூவலூர் ராமாமிருதம் அம்மாள் அவர்களுக்கு 5 பக்கம் ஒதுக்கிய தோழர், எண்ணற்ற கதைகளை எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்களை வெறும் மூன்று பக்கத்திற்குள் சுருக்கி விடுகிறார். திராவிட இயக்க எழுத்தாளர்கள் என்ற பொதுத் தலைப்பில் கலைஞர் கருணாநிதி, இராம அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, டி.கே.சீனிவாசன், எஸ்.எஸ்.தென்னரசு இத்தனை பேருக்கும் சேர்த்தே 18 பக்கம் மட்டுமே ஒதுக்கியிருக்கிறார். எழுத்தாளரை கேட்டால் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்கிறார்.

ஆனால், எழுத்தாளர் லிங்கன் அவர்கள் எழுதிய ஒரே புத்தகமான கருணை மனு குறித்து 14 பக்கங்களில் எழுதியிருக்கிறார். கி. ராஜநாராயணின் கதையுலகம் குறித்து 61 பக்கங்களில் ஆசை தீர எழுதியுள்ளார். சொந்த ஊர் பாசம் போல தி. ஜானகிராமனுக்கு இரண்டு அத்தியாயத்தில் 42 பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறார். இந்த இரண்டு கட்டுரைகள் தான் அதிக பக்கங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது. தோழர் ஒரு மார்க்சிய அளவுகோலை வைத்திருக்கிறார். அதற்குள் இந்த எழுத்தாளர்கள் எவ்வளவு தூரம் உள்ளும், புறமுமாக வந்து போயிருக்கிறார்கள் என்பதை அளவீடாக வைத்து, நிறை குறைகளை அலசி ஐம்பது ஆண்டு கால சிறுகதையுலகின் போக்குகளை ஒரு சித்திரமாகவே வரைந்து பார்த்திருக்கிறார். இதில் ஏராளமான எழுத்தாளர்கள் விடுபட்டிருக்கிறார்கள் நகுலன், சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி, ச. தமிழ்ச்செல்வன் என, அடுத்த ஐம்பது ஆண்டை எழுதித் தொகுக்கும் போது அவர்களும் உள் வருவார்கள் என்று கூறியிருக்கிறார்.

மிகக் கடுமையான உழைப்பில் இந்நூல் விளைந்திருக்கிறது, அவரது நெடிய இலக்கியப் பயணமும் மார்க்சிய வயப்பட்ட வாழ்வும் பெருந்துணை புரிந்திருக்கிறது. சாய்வு மனப்பான்மையற்று நேராகவே நின்றிருக்கிறார் என்பதை முழுமையாக வாசிக்கும் போது உணர முடிகிறது. புதிதாக எழுத வருவோர்க்கு இதொரு ஆவணம். இவர் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பை வாசித்தால் எழுத்தாளராகவோ, ஆய்வாளராகவோ மாறக்கூடும்.

இந்நூலைப் பற்றிய விமர்சனமாக சொல்வதென்றால், ஒரு எழுத்தாளரைப் பற்றிய குறிப்புகள், நூல் குறித்த பார்வை, அவரின் ஒரு சிறந்த சிறுகதையை மட்டும் பதிவிட்டு இருந்தால், இன்னும் 200 பக்கத்தை குறைத்திருக்க முடியும். முன்னோட்டம் மாதிரி கதைகளை பதிவிட்டு இருப்பது, கதையை முழுமையாக புரிந்து கொள்ளாமலும், மதிப்பீடு செய்ய முடியாமலும் போகிறது. ஒரு சிறப்பு தணிக்கை செய்திருக்கலாம். ஏராளமான எழுத்துப் பிழைகள் தமிழ் மனதை உறுத்துகிறது. இவையெலாம் மீச்சிறும் பிழைகள்தான். பெரும் தமிழ் இலக்கிய மலையைத் தூக்கிச் சுமந்திருக்கிறார். ஆகவே அவரை வாழ்த்துவோம். தவறுகளைக் கவனப்படுத்துவோம். எதிர் வரும் பதிப்புகள் செம்மையாகவும் செழுமையாகவும் வர வாழ்த்துகள்.
செ.தமிழ்ராஜ்

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *