
பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய்.
கொளத்தூர் பகுதியில் நேற்று விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்த நிலையில், வேட்புமனுவை விஜய் நேற்று (மார்ச் 30) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிமனை திறக்க வாகனத்தில் ஊர்வலமாக சென்றார்.
பிரச்சாரம்
அப்போது அவர் பேசுகையில்,”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப்பொருள் அதிகமாக இருக்கின்ற தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டை இப்படியொரு நிலைமைக்கு கொண்டுவந்தது யாரென நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. திமுக ஆட்சிதான் காரணம், ஸ்டாலின் சார் தான் காரணம். கடந்த 5 வருடத்தில் என்ன ஆட்சி நடத்தினார்கள்? ஒரு டீ கடையில் நின்று டீ கூட குடிக்க முடியவில்லை. போதையில் வந்து வெட்டிவிட்டு செல்கிறார்கள். இது என்ன நாடா இல்ல காடா?” என்று கேள்வி எழுப்பினார்.
போக்குவரத்து நெரிசல்
இதன் பின் பிரசார வாகனம் மூலம் பெரம்பூர், மூலக்கடை பகுதியில் அவர் சென்ற போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் முடிந்து அவர் கொளத்தூர் பகுதிக்கு வந்த போது அங்கு ஏராளமானோர் கூடீயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் வாகனம் சிக்கிக் கொண்டது. அங்கிருந்து மெதுவாக விஜய் வாகனம் சென்றது. இதன் பின்னர் அகரம் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். அங்கு அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பரப்புரையை விரைந்து முடிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதனால் வில்லிவாக்கத்தில் நடைபெறவிருந்த தெருமுனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தவெக தலைவர் என்.ஆனந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் நேற்றைய பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், 5 ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி அளித்த நிலையில் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் உள்ள அதிகாரி குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவர் வீடியோ பதிவு ஆதாரங்களுடன் போலீஸில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.



