
மதுரை கோ.புதூர் பணிமனை அருகில் காங்கிரஸ் கட்சி மன்றம் இருந்தது. பின்பு அது தமாகா மன்றமாக மாறியது. அதன் அருகில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அதன் பெயர் தீன் ஸ்டோர். அது தான் ஒரு காலத்தில் புதூரில் பெரிய பலசரக்கு கடை. அதற்கு அடுத்து தபால் நிலையம் இருந்தது. அதன் அருகில் ஜெயா ஸ்டோர். இந்த கடையின் உரிமையாளர் கருகருவென உயரமாக இருப்பார். என்ன வேண்டும் என்று அதட்டுவார் என்பதால் அந்த கடைக்குச் செல்ல பயமாக இருக்கும். ஆனால், தீன் ஸ்டோர் செல்ல வேண்டும் என்றால், சந்தோஷமாக செல்வேன். அந்தக் கடை உரிமையாளர் வயதான தாத்தா இருந்தார். நான் பொருள் வாங்கப் போனவுடன், ” தம்பி வந்துட்டான், தேங்காய் உடைத்து தண்ணீரைக் கொடுங்க” என்பார். அந்த கடைக்கு எதிரே தான், கம்யூனிஸ்ட் கட்சி மன்றம். என் அப்பா ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்று அங்கு வந்துள்ள நாளிதழ்களை வாசிக்கச் சொல்வார். இதனால் தீன் ஸ்டோர் உரிமையாளருக்கு பழனிசாமி தோழரின் மகன் என்று என்னைத் தெரியும்.
அவரது கடை தேங்காய் பெரிய சைஸாக இருக்கும். உடைத்தால் ஒரு கிளாஸ் அளவை விட கூடுதலாக தேங்காய் தண்ணீர் இருக்கும். உவர்ப்புச் சுவையுடன் இனிப்பு சுவை அறிமுகமான அந்த கடையில் தான், நாகூர் ஹனிபாவின் பாடலை முதல் முதலாக கேட்டேன். ஒவ்வொரு வாரமும் தவறாமல் வரும் பக்கீர்கள், அந்த கடையில் இசைமுரசு இ.எம்.நாகூர் ஹனிபாவின் பாடல்களைப்பாடி பணம் பெற்றுச் செல்வார்கள். பக்கீர்கள் இருவர், போட்டி போட்டுக் கொண்டு பாடல்களைப் பாடுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஐந்து வயதில் நாகூர் ஹனிபாவின் பாடலை ரசிக்க ஆரம்பித்தவன் இன்று வரை அவரது பாடலின் பரம ரசிகனாய் இருந்து வருகிறேன். கோயில் மணி போல கணீர் என ஒலிக்கும் அவரது குரலில் இருந்த ஏற்ற இறக்கம், பாடல் கேட்போரை ஆட்கொண்டு விடும்.
தீன் ஸ்டோர் மட்டுமின்றி அலாவுதீன் பட்டறை என்ற இடத்திற்கும் வந்து பக்கீர்கள் பாடுவார்கள். தற்போது ஆசியாவின் மிகப்பெரிய சைக்கிள் மார்ட்டாக திகழும் குரு சைக்கிள் கடை அப்போது அவ்வளவு பெரிய கடையாக இல்லை. சீனி மாமா தான் அந்த கடையின் உரிமையாளர். அவர் கடை அருகே காளிமுத்து சித்தப்பா வீடு. அந்த சந்தில் தான் எனது வீடு. காளிமுத்து சித்தப்பா கோடாங்கி அடித்து குறி சொல்வார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த தெருவில் வசிக்கும் குழந்தைகள் அவர் வீட்டில் ஆஜராக வேண்டும்.
அனைத்து குழந்தைகளுக்கும் வேப்பிலை சாறு ஊற்றி விட்டு ஐந்து பைசா தருவார். அத்துடன் நெற்றியில் திருநீறு பூசி விடுவார். எந்த குழந்தைகளுக்கும் நோய், நொடி வரக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக அவர் செய்து வந்த வைத்திய முறை அது. அப்போது அவர் கொடுத்த காசுக்கு இருந்த மதிப்பே தனி. அந்த தெருவில் வசித்த யாரும் ஒரே சாதி, மதம் கிடையாது. ஆனால், அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தோம். முறை வைத்து தான் ஒவ்வொருவரையும் அழைப்போம். இரவாகி விட்டால் நிலாச்சோறு தான். ஏனெனில், அப்போது யார் வீட்டிலும் மின்சாரம் கிடையாது. ஆனால், எல்லாருடைய வீட்டிலும் பேட்டரி கட்டைகள் போட்ட ரேடியோ பெட்டி இருந்தது.
காளிமுத்து சித்தப்பா வீட்டிற்கு முன்புறம் அலாவுதீன் இரும்பு பட்டறை இருந்தது. அந்த கடைக்கு அடுத்து மூர்த்தி அண்ணனின் பன்றி கறிக்கடை. தீன் ஸ்டோரில் பாடல்களை முடித்து விட்டு பக்கீர்கள் நேராக அலாவுதீன் கடைக்கு வந்து விடுவார்கள் அங்கு அடுத்த கச்சேரி ஆரம்பித்து விடும். அத்துடன் தெருவும் கூடி விடும். அவர்கள் பாடப்பாட கையில் இருந்த சில்லறை காசுகளை பக்கீர்களிடம் கொடுப்பார்கள். நாகூர் ஹனிபாவின் ஆவி புகுந்தது போல அவர்கள் ஆவேசமாக பாடும் போது, அவர்கள் கைகளில் இருக்கும் தாயிரா இசைக்கருவியின் ஓசை பெரும் அதிர்வை ஏற்படுத்தும்.
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் – அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை…
என்று பக்கீர்கள் பாடும் போதே ரோட்டில் செல்பவர்கள் மட்டுமின்றி எங்கள் வீட்டிற்கு அடுத்த பட்டுப்பூச்சித் தெருவில் வசிப்பவர்களும் வந்து விடுவார்கள்.
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழுங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின்
மீதும் ஆட்சி செய்பவன்
தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து
நிற்கும் மகா வல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள்…
என்று பக்கீர்கள் முதல் பாடலை விடாமல் பாடும் போது கோடாங்கி காளிமுத்து சித்தப்பா வீட்டில் இருந்து அவர்களுக்கு தேநீர் வந்து விடும். மூர்த்தி அண்ணன், தேங்காய் பப்ஸ் வாங்கி வந்து தருவார்.
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள் …
என்று உச்சஸ்தாயில் அவர்கள் பாடும் போது நாகூர் ஹனிபா கண்முன் வந்து போவார். மதுரை கோ.புதூரில் மாதா கோவில் முன்புறம் தான், பொதுக்கூட்டம் நடக்கும். அந்த இடத்தில் நாகூர் ஹனிபாவின் பாட்டுக்கச்சேரியை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒரு மிகப்பெரிய யானையைக் கட்டிப்போட்ட இரும்பு சங்கிலியென அவ்வளவு பெரிய கூட்டத்தையும் தன் குரல் வளத்தால் இந்த மனிதன் எப்படிக் கட்டுப்போடுகிறார்? பத்திரிகையாளனான பின்பு கலைஞர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாகூர் ஹனிபாவின் பாடல்களை ரசிக்க பலமுறை வாய்ப்பு கிட்டியது. திமுக மேடை என்றாலும் இறைவனிடம் கையேந்துகங்கள் பாடலைப் பாட நாகூர் ஹனிபா மறப்பதேயில்லை.
இத்தனை ஆண்டுகள் கழித்தும் கேட்டவர்களின் நெஞ்சங்களில் நங்கூரமாய் அதன் வரிகள் பதிந்து கிடக்கின்றன. இந்த பாடலை எழுதியவர் கவிஞர் கிளியனூர் ஆர். அப்துல் சலாம். நாகூர் ஹனிபா பாடிய பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். சந்தத்திற்குப் பாட்டெழுதி சொந்தமாக மெட்டமைக்கும் திறன் பெற்றவர் சலாம். அவர் எழுதிய அனைத்து பாடல்களும் நாகூர் ஹனிபாவின் ஹிட் பாடல்கள் என்றே சொல்ல வேண்டும்.
இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் போற்றி இசைமுரசு நாகூர் ஹனிபா பாடிய பாடல்களில் நான் விரும்பிக் கேட்பது.
இறைவா உன்னைத் தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன்…
என்ற இந்த அமைதியான பாடலைக் கேட்கும் போது ஏதோ கிடைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்த பாடலையும் அப்துல் சலாம் தான் எழுதினார். அந்த வரிகளை நாகூர் ஹனிபா அனுபவித்து பாடுவார். உதாரணத்திற்கு
மக்கத்து மலரே மாணிக்கச்சுடரே யாரசூலல்லாஹ்
மக்கத்து மலரே மாணிக்கச்சுடரே யாரசூலல்லாஹ்
உயர் மறையாம் குர்ஆன்
வாங்கித்தந்தோரே யாரசூலல்லாஹ்
மனித வாழ்வினில் இனிமை சேர்த்தோரே
யாரசூலல்லாஹ்
மனித வாழ்வினில் இனிமை சேர்த்தோரே
யாரசூலல்லாஹ்
உங்கள் மகிமை சொல்லில்
அடங்குவதில்லை யாரசூலல்லாஹ்
என்ற இந்த பாடலில் அல் அமா..ன் யாரசூலல்லாஹ் அஷ்…ஷஃபாஅத்த யாரசூலல்லாஹ் என்ற வரிகளை மீண்டும் மீண்டும் நாகூர் ஹனிபா பாடும் போது யாராக இருந்தாலும் அந்த வரிகளைப் பாட ஆரம்பித்து விடுவார்கள்.

நாகூர் ஹனிபா மற்றும் இசைக்கலைஞர்கள் ஐந்து பேரைக் கொண்டு இயங்கிய அந்த இசைக்குழு வழங்கிய பாடல்கள் உலகம் முழுவதும் இன்றும் எதிரொலிக்கின்றன. பக்கீர்கள் இருவர் மட்டும் நாகூர் ஹனிபாவை நம் கண் முன் கொண்டு விடுகிறார்கள். ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான மெட்டுக் கட்டப்பட்ட நாகூர் ஹனிபாவின் பாடல்கள், இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவும் பல கலைஞர்களால் பாடப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
நாகூர் ஹனிபாவிற்கு பாடல் எழுதுபவர்கள் நபிகள் நாயகத்தின் புகழை மட்டும் எழுதாமல், பண்பு கெட்ட மனிதர்கள் குறித்து நபிகள் என்ன செய்தார் என்றும் எழுதியுள்ளனர். அப்படி அப்துல் சலாம் எழுதிய இந்த பாடல், நாகூர் ஹனிபாவின் குரலில் கேட்க கேட்க அசரடிக்கிறது.
இருளில் நிலவாக பிறந்தார்
இருளில் நிலவாக பிறந்தார்
நபி இகத்தோரின் மனக்கதவைத் திறந்தார்
இருளில் நிலவாக பிறந்தார்…
பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி
பண்பு கெடுத்தோரை பலத்தோடு
எதிர்த்தார் நபி
பழிவாங்கும் மனப்போக்கை வெறுத்தார் நபி
பாவம் செய்தோரை எதிர்த்து நின்று ஜொலித்தார் நபி…
அப்துல் சலாம் போல, நாகூர் ஹனிபாவின் குரல்களில் ஒலித்த பல பாடல்களை எழுதியவர் நாகூர் சாதிக். இவர் எழுதிய ஒரு பாடல் இஸ்லாமியர்கள் மத்தியில் தேசிய கீதம் போல நேசிக்கப்படுகிறது.
அல்லாவை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்…
பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனமில்லையோ
படைத்தவன் நினைவில்லையோ
பள்ளி செல்ல மனமில்லையோ
படைத்தவன் நினைவில்லையோ…
இந்த புகழ்பெற்ற பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் டி.ஏ.கல்யாணம். இவரிடம் தான் ஜி.ஆர்.சுப்பராமன், கே.வி.மகாதேவன் போன்ற இசை மேதைகள் உதவியாளர்களாக பணிபுரிந்தனர். திரைப்படங்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பக்திப் பாடல்களுக்கு டி.ஏ.கல்யாணம் இசையமைத்துள்ளார். அப்படி அவரால் இசையமைக்கப்பட்ட நாகூர் ஹனிபாவின் பாடல்கள் காலம் வழங்கிய கொடை என்றே கூறலாம்.
அருள் வடிவானவர் அண்ணல் மஹ்மூதர்
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபி நாதர்
இருலோகம் போற்றும் இறைத்தூதர்
ஆம் இஸ்லாத்தை தந்த நபிநாதர் ஆம்
அருள் வடிவானவர் அண்ணல் மஹ்மூதர்
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபி நாதர்
என்ற பாடலும் நாகூர் சாதிக் எழுதி டி.ஏ.கல்யாணம் இசையமைத்தது தான். பாடலின் இடையே இன்னும் சொல்லவா என்று நாகூர் ஹனிபா மீண்டும் மீண்டும் கேட்கும் போது ஏதோ ரகசியத்தை அவர் சொல்லாமல் சென்று விட்டாரே என கலங்கடிக்க வைக்கிறது. பெருநாள் காலங்களில் தவறாமல் ஒலிக்கும் நாகூர் ஹனிபாவின் இந்த பாடலை டி.ஏ.கல்யாணம் இசையில் நாகூர் சாதிக் தான் எழுதினார்.
தக்பீர் முழக்கம்
கேட்டால்
உள்ளம்
இனிக்கும்
வித்தியாசமான வகையில் மெட்டமைக்கப்பட்ட இந்த பாடலை நாகூர் ஹனிபாவுடன் இணைந்து குழுவினர் பாடியுள்ளனர்.
அல்லாஹு அக்பர் என்று எங்காவது கேட்டால், நாகூர் ஹனிபாவின் தக்பீர் முழக்கம் தான் நினைவிற்கு வரும்.
– ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)
1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/
2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/
3)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/
4)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/
5)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-4/
6) https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-5/
7) https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-6/



