ஒரு கதை 16: கலையெனும் விசித்திரம்

வாழ்வின் நித்தியங்களைக் கடப்பதற்கு ஒவ்வொரு மனிதனும், மனுஷியும் அவரவர்களுக்கான எளிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அன்றாடம் தரும் அச்சத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, பொருள் தேடி அலையும் சராசரிக்கும் கீழான வாழ்க்கையைத்தான் சரிபாதிக்கும் மேலானவர்கள் வேறு வழியின்றி தேர்வுசெய்கிறார்கள். விரும்பியோ,விரும்பாமலோ தனக்கென அமைத்துக்கொண்ட குடும்பம் எனும் கூட்டைச் சுமக்கத் திராணியற்றுப் போகிறபோது தடுமாறுகிறார்கள் மனிதர்கள். எத்தனை வேலைகள்,அது என்ன மாதிரியான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என உழைக்கத் தயாராகிறார்கள். பொழுது விடியும் முன்பே விழித்தெழுந்து காடுகரைகளுக்குப் போகும் பெண்கள் என்றாலும் அல்லது கூலி வேலைக்காக குறுநகரங்களுக்குப் போகிற சம்சாரிகள் என்றாலும் அவர்களுடைய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். எப்படியாயினும் இந்த குடும்பத்தேரை அசைத்து அசைத்தாவது நிலைகொண்டு போய் சேர்த்துவிட வேண்டும் அவ்வளவு தான். இப்படியான எல்லோருக்குள்ளும் கனவுகள் மிதந்து கொண்டுதான் இருக்கும். குடும்ப நலனுக்காக சொந்தக் கனவுகளை விட்டொழித்தவர்களின் பெரும்படை மிக மிக நீளமானது.

நீங்கள் அலுமினியக் குண்டானில் மீன் விற்றிட உங்கள் வீடருகே வந்து போகிற பெண்களிடம் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா?. அவர்கள் கனவுகளை காது கொடுத்து கேட்டதுண்டா? நடக்க வலுவற்ற கால்களால் பலமைல் தூரம் சைக்கிளை மிதித்து காய்கறியோ,கீரையோ தெருத் தெருவாக விற்றுத் திரும்புகிற இதேபோலான முதியவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மனம் பதறும். அதிலும் தங்களுக்கேயான தனித்த ராகத்தினை சுருதி கூட்டி தெருவினைத் திறக்கிற அந்த வியாபாரிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குப் புரியத் துவங்கி விடும். .இவர் அன்றாடத்திற்காக தன்னைத் தொலைத்துவிட்ட அசல் கலைஞன் எனும் மெய்மை. .அதன்பிறகு அவர்களோடு பேசியிருக்கிறேன். வேறுபாடில்லாமல் அனைவருக்குள்ளும் ஒரு கதை நிழலென படிந்து கிடக்கவே செய்கிறது.

கலையின் மீது தனித்த வேட்கையும், தீராத பற்றும் கொண்டவர்களாக அவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள். அது உனக்குச் சோறு போடாது விட்டுத்தொலை என அவர்களின் குடும்பத்தால் தான் வஞ்சிக்கப்பட்டதையும் கண்ணீரோடு கதையாக்கி கடந்து போயிருக்கிறார்கள் அவர்கள். பிறகான நாட்களில் நண்பர்களாக, தோழர்களாக உருமாறியிருக்கிறார்கள். சொல்லி வைத்தாற் போல அவர்கள் யாவரையும் பெருங்கனவு காண வைத்து வதைத்தது சினிமாவாகத்தான் இருக்கிறது. . “அன்றைக்கு உங்க தாத்தா மட்டும் என்னைய எம் போக்கில் விட்டிருந்தா நான் சினிமாவில பெரிய ஆளாயிருப்பேன்டா” என்று என்னிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த என் தந்தையின் முகம் இப்போது எனக்குள் நிறைந்து நிறைந்து என்னை நிலைகுலையச் செய்கிறது. . மரணத்தின் கடைசிப்புள்ளியில் அவருடைய நேசத்திற்குரிய பாடகர் கண்டசாலாவின் பாட்டான “கனவிதுதான்,நிஜமிதுதான். உலகினிலே இதை யார் வெல்லுவார்,விதி யார் சொல்லுவார்” என்ற பாடலை பாடச் சொல்லிக் கேட்டார். தினசரி வாழ்க்கை எனும் ராட்சசன் கேட்ட குரூரத்திற்கு தன்னுடைய கலை மனதை பலியெனத் தந்தவர்களின் துக்க சரித்திரம் தனித்து எழுதப்பட வேண்டியது. அப்படியான அசல் கலைஞன் ஒருவனின் கதைதான் எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதியிருக்கும் புலிக்கலைஞன் எனும் சிறுகதை.

அசோகமித்திரன் ஐம்பதுகளின் கடைசியில் கதை எழுத வந்தவர். அவருடைய சிறுகதைகள் கச்சிதமானவை. துள்ளலும் எள்ளலும் நிறைந்த சொற்சேர்க்கை அவருடைய கதைகளை தனித்துக் காட்டின. மத்தியதர வர்க்கத்து வாழ்க்கைதான் அவருடைய கதைகளின் கருவாக இருந்திருக்கிறது. சட்டென வாசகனை வசப்படுத்தித் தன்னோடே அலைத்துச் செல்லும் அசோகமித்திரனின் கதைமொழியையும் அதன் வீச்சையும் அவருடைய அழிவற்றது,1945-ல் இப்படியெல்லாம் இருந்தது ஆகிய கதைத் தொகுப்புகளின் வழியே உணர முடியும். அசோகமித்திரனின் மொத்த சிறுகதைகளும்கூட தொகுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய கதைகளை வாசிப்பதே எப்போதும் வாசகர்களுக்கு தனித்த அனுபவமாகவே இருக்கும். அசோகமித்திரனின் அச்சு அசல் அடையாளமான கதை புலிக்கலைஞன். பொதுவாக அசோகமித்திரனைப்பற்றி இலக்கிய உலகினில் சொல்லப்படும் முக்கியமான விஷயம் அவர் தன் அனுபவங்களின் தொகுப்பினையே கதைகளாக உருமாற்றுவார் என்பதே.. அவருடைய கதைகளின் ஏதோ ஒரு புள்ளியில் அசோகமித்திரன் தென்படுவதை கதைகளை வாசிக்கும்போது யாவராலும் உணர முடியும்.. அதிலும் அவருடைய ஆகச்சிறந்த கதையான புலிக் கலைஞன் கதைக்குள் டைகர் பைட் காதர் பாய் தன்னை உக்கிரமாக ஆக்கிக்காட்டிய அந்த சினிமா அலுவலகத்தில் நிச்சயம் அசோகமித்திரன் இருந்திருப்பார். கொஞ்ச காலம் சினிமாக் கம்பெனியில் வேலை பார்த்தவர்தானே அசோகமித்திரன்.

புலிக்கலைஞன் கதையின் முதல்வரியையே பகடியாகத்தான் துவங்கியிருக்கிறார் அவர். “பகல் ஒரு மணியிலிருந்து இரண்டுவரை எங்களுக்கு டிபன் இடைவெளி.” இந்த வரிகளை படித்தவுடனே நமக்கு குழப்பம் துவங்கிவிடுகிறது. ஒரு மணிக்கு மதிய உணவுதானே எல்லோரும் சாப்பிடுவார்கள். இது என்னடா அந்த நேரத்தில் டிபன் இடைவெளி .அப்படியானால் நிச்சயமாக வழக்கமான அலுவலகம் இல்லை போலயே என வாசகன் கதையை பின் தொடர்ந்து போனால் அது ஒரு சினிமா கம்பெனி அலுவலகம் என்பதை கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் காஸ்டிங் டைரக்டர் என்பவர் சொல்கிறார். ஒருவேளை அந்த காஸ்டிங் டைரக்டர் அசோகமித்திரனாகவும் இருக்கலாம். காஸ்டிங் டைரக்டரின் முக்கியமான பணிகளில் பிரதானமானது கூட்டமாக காட்சியின் பின்புலத்தில் நிறுத்தி வைக்க நடிகர்களை கொண்டு வந்து சேர்ப்பது. இன்றுவரையிலும் தமிழ்சினிமாவின் துயரங்களில் ஒன்றாக நீடித்திருக்கிற துணை நடிகர்களின் கலையுலகம் குறித்த கதைதான் போல என்ற புரிதல் ஏற்படுகிறது.

அந்த சினிமா அலுவலகத்தில் வாசகனுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் காஸ்ட்டிங் டைரக்டருடன் வேட்டி கட்டி நாக்கு சிவக்க சிவக்க வெத்திலை போட்டு துப்பிக் கொண்டிருக்கும் சர்மா என்றொரு நபர் இருக்கிறார். அடுத்த வரியில் சர்மாவை யாரென்று விளக்குகிறார் அசோகமித்திரன். சர்மா இங்கு வந்து சேர்வதற்கு முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவ்வப்போது வேலையில் இருந்த நாட்களில் நாடகங்கள் எழுதி மேடையேற்றி இருக்கிறார். சினிமா கிறுக்கில் வேலையை விட்டுவிட்டு இந்த சினிமா கம்பெனியில் கதை இலாக்காவில் வேலை பார்க்கிறார். இது காஸ்டிங் டைரக்டர் சொல்கிற சர்மாவைப் பற்றிய சித்திரம். ஒரு தேர்ந்த கதை எப்போதும் வாசிக்கிறவனின் மனதின் பக்கங்களைத் திறக்கக்கூடியதாக நிச்சயம் இருக்கும். புலிக்கலைஞன் கதைக்குள் வருகிற சர்மாவிற்குள் நிச்சயமாக ஐம்பதுகளில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவிற்குள் வந்து சேர்ந்த இயக்குநர்கள்,நடிகர்களின் பலமுகங்கள் என் மனத்திரையில் நகர்ந்தது. புலிக்கலைஞன் கதையை முதன் முதலில் வாசித்த போது இப்போது அசோகமித்திரன் சர்மாவின் கதையைத்தான் நமக்குச் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால், கதை அவரைப் பற்றியதல்ல. கதை, வாழ்வின் ஓட்டத்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்க முடியாமல் தடுமாறி தத்தளிக்கிற மற்றொரு கலைஞனைப் பற்றியது.

சர்மாவைச் சந்திப்பதற்காக ஒரு இளைஞன் அன்று அலுவலகம் வருகிறான். சர்மாவைச் சந்திப்பதற்காக வந்த இளைஞன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அவருடைய வீடுவரை அடிக்கடி தான் வந்து போனதை நினைவூட்டுகிறான். சர்மாவிற்கு அவனை ஞாபகமில்லை. நித்தமும் தமிழகத்தின் நாலாதிசைகளில் இருந்தும் சினிமா வாய்ப்புத்தேடி மெட்ராஸ் வந்து சேர்ந்தவர்கள் இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காட்சியிலாவது தோன்றிட நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா என ஏன்ட வேலை, எடுத்த வேலைகளை செய்து கொண்டு கோடம்பாக்கமே கதியென அப்போது சுற்றிக் கொண்டிருக்கும் பலரில் ஒருவன்தான் அந்த இளைஞன். இப்போது ஒன்னும் வாய்ப்பில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது உன்னை அழைக்கிறேன் என்று சொல்கிறார் சர்மா. “சார் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க நான் டகர் பாய்ட் நல்லா செய்வேன் என்கிறான். புரியலையேப்பா என திகைத்த மறுநொடியில் சார் நான் புலிவேஷக் கலைஞன். டகர் பாட் காதர் எம்பெயரு. அசல் புலியவிட உக்கிரமா இருக்கும் சார் என்னோட நடிப்பு என்கிற அவனை இருவரும் அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான் அடுத்த நொடியில் விஸ்வரூபம் எடுக்கிறது கதை.

தன்னுடைய கைப்பையில் வைத்திருந்த புலித்தலையை எடுத்து தலையில் மாட்டுகிறான். மாட்டிய மறுநொடியில் முகமூடிக்குள் பதுங்கியிருக்கும் அவனுடைய கண்கள் புலியின் கண்களைப் போலவே உருள்கின்றன. நாலுகால் பாய்ச்சலில் அங்கிருந்த மேசை மீது தாவி ஏறுகிறான் காதர். அங்கிருந்து இரண்டு ஆள் உயரத்திற்கு தாவிக்குதித்து தலைகீழாகத் தொங்குகிறான். அந்த அறையில் வேகமாக வீசிக்கொண்டிருக்கும் காற்றாடி ரெக்கைக்கும் இவனுக்கும் ஒரு அங்குல இடைவெளிதான் இருக்கிறது. பதறிவிட்டார் சர்மா. அவனுடைய அந்த உடலெங்கும் மெல்லிய புலிக்கோடுகள் அசைவதைப் போல இருக்கிறது. இறங்கப்பா என்கிறார் சர்மா. அப்போது அவன் எழுப்பிய குரல் ஒலி ஒரு கானகப்புலியின் உறுமலைப் போலவே மிரட்டலாக இருந்தது. அந்த அலுவலகமே ஒரு காட்டைப் போல உருமாற்றம் பெற்றது.கீழே குதித்து இறங்கி புலித்தலை போலான முகமூடியைக் கழற்றினார் டைகர் பைட் காதர்பாய் என்கிற அந்த புலிக்கலைஞன். சர்மா தடுமாறிப் போனார்.

“காதர் சாப்பிட்டியா நீ என்கிற குரலுக்கு எந்த சலனமுமில்லை காதரின் முகத்தில். அவருக்குப் புரிந்துவிட்டது சாப்பிட்டே ரெண்டு மூனுநாளு ஆகியிருக்கும் போல, முதல்ல போயி சாப்பிடு என இரண்டு ரூபாயை காதரின் கையில் திணித்தார் சர்மா. “ சார் பணமெல்லாம் வேண்டாம் சார், ஏதாவது வேஷம் இருந்தா கொடுங்க, எந்த வேஷம் கொடுத்தாலும் நான் நல்லா செய்வேன் சார்” என்கிற காதரை குறுகுறுவென பார்க்கிறார் சர்மா. கொஞ்ச நேரத்திற்கு முன்பு பெருங்காட்டை இந்த நிலத்தில் வரித்திட்ட புலிக்கலைஞனா இவன் என தடுமாறினார். சாப்ப்பிடுவதற்காக புலிக்கலைஞனான டைகர் பைட் காதர் பாய் கேண்டின் நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்.

சர்மாவினால் துடியான அந்த நிமிடங்களில் இருந்து மீளவே முடியவில்லை. கதையின் நாயகன் புலி வேஷம் கட்டிக் கொண்டு அரண்மனைக்குள் நுழைவதைப் போல கதையை காதருக்காக மாற்றுகிறார். கதாநாயகனால வேஷத்தை செய்ய முடியாது. காதர் பாய டூப்பு போட வைப்போம். பாவம்யா,டைகர் பைட் காதர் பாய் அவனுக்கு இதுல ஒரு இருநூறு ரூபாய் கிடைக்கும் என நமக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் காஸ்டிங் டைரக்டரிடம் சொல்கிறார் சர்மா. அவரும் காதர் பாய் தந்து போன முகவரிக்கு கடிதம் போடுகிறார். டைகர் பைட் காதர் பாய்க்காக காத்திருந்தார்கள். அவர் வரவேயில்லை. அந்த முகவரியில் காதர் பாய் இப்போது இல்லை என கடிதம் மட்டும் திரும்பி வந்தது என கதை முடிகிறது. காதர் பாய்கள் தன் கலைமனதை சமாதானப் படுத்த முடியாமல் எந்தத் தெருவில் விலங்கு பொம்மைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.
ம.மணிமாறன் ( தொடரும்)

1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/

2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/

3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/

4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/

5)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/

6)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-6/

7)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-7/

8)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-8/

9)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-9/

10)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-10/

11)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-11/

12)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-12/

13)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-13/

14)https://maduraiseithi.in/a-series-on-short-stories-written-by-m-manimaran/

15)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-15/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *