
உலகத்தில் உயிர்கள் பிறக்கின்றன. சில காலம் கழித்து மரணிக்கின்றன. பிறந்த உயிர்கள் யாவும் நடுவில் வாழ்கின்றனவா? . வாழ்தல் என்பது இருப்பை மட்டும் குறிப்பதல்ல. பொருள்பட வாழ்தல் என்பது கூடுதல் அர்த்தம் தரக்கூடியது. பறவைகளும்,விலங்குகளும் தங்களுக்கென தனித்த நோக்கமற்று வாழ்ந்து மடிகின்றன. ஆனால், மனிதர்கள் பறவைகளைப் போல இயல்பாக தன் முன்னே நகரும் காலத்தை கடந்துவிடுவதில்லை. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. வாழ்நாள் முழுக்க இந்தக்குடும்பத்தின் அச்சாணி நான் எனும் பெருத்த நம்பிக்கையில் அவனோ அல்லது அவளோ ஓடி ஓடி உழைக்கிறார்கள். ஆஸ்தி, பாஸ்திகளினால் உருவான அந்தஸ்த்தின் நிழலில் கர்வம் கொள்கிறார்கள். பணம்,சொத்து இவற்றையெல்லாம் கடந்து சிலர் தங்களுடைய மொத்த வாழ்க்கையையும் தத்துவங்களுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்.
முதுமையைத் தொடும்போது நாம் சரியாக இந்த வாழ்க்கையை வாழவில்லையோ என மனம் பேதலித்துக் கிடக்கிறார்கள். வெகுசிலர் மற்றவர்களை விடுதலை செய்யும் கருவி என் கைவசம் இருக்கிறது என பிதற்றித் திரிகிறார்கள். இருப்பது ஒற்றை வாழ்க்கைதான்.முற்பிறவி, முன்னேழு பிறவிகள் எனும் வேதாந்த சிக்கலை விலக்கிவிட்டு பார்த்தால் பிறப்பது ஒருமுறை என்பது மட்டுமே நிஜம். அப்படியானால் இந்த ஒற்றை வாழ்வை மனிதர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்பதைக் குறித்த வியாக்கியானங்களின் தொகுப்பே இலக்கியமாகிறது. அதிலும் ஒரு கனநேர மனநிலையை வாழ்வின் ஒரு பளீர் மின்னல் வெட்டினை காட்சியாக்கி கடத்தும் சிறுகதைகளை வாழ்வினைப் புரிந்து கொள்வதற்கான கருவிகளில் ஒன்றெனத்தான் கொள்ள வேண்டும்.
பெண் வாழ்வின் பாடுகளை அதன் துக்க, மகிழ்நாட்களை பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பெண்களுக்கு மட்டுமேயான தனித்த வலிகளை அவர்கள் எழுத்தாக்கித் தருகிறபோது அது வாசகருக்கும் ஏன் அதனை எழுதிய எழுத்தாளருக்கும் தனித்த அனுபவத்தைத் தருகிற ஒன்றாகிப் போகிறது. அப்படியான தமிழ்ப் பெண் எழுத்தின் சுடர்ஒளி எழுத்தாளர் ஆர்.சூடாமணி. 1954-ல் தன்னுடைய முதல் கதையை எழுதியவர் அவர். மணிக்கொடி காலத்தில் இருந்து இன்றுவரையில் இருந்து வருகிற கொடும் புறக்கணிப்பிற்கு உள்ளானவர் சூடாமணி. சிற்றிதழ்கள் இலக்கியத்தரமானவை. வணிக ப்பத்திரிக்கையில் வெளியாகும் கதைகள் குறைபாடுடையவை எனும் பொதுப்புத்தி இன்றுவரையிலும் நீடித்திருக்கும் ஒரு குயுக்தி. இந்த விசித்திர குயுக்திக்கு பல நல்ல கதைகளை பலியாக தந்திருக்கிறது
தமிழ்க்கதையுலகம். ஆர் சூடாமணியின் கதைகளில் பெரும்பாலனவை கலைமகளிலும், கல்கியிலும்தான் வெளிவந்தன. மொத்தமாக 500 சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.அவருடைய உடல் குறைபாட்டின் காரணமாக வீட்டிற்குள்ளேயே தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழ்ந்தவர் எழுத்தாளர் ஆர் சூடாமணி. அவருக்கேயான உள விடுதலையின் கருவியாக அவர் அவருடைய கதைகளைக் கைக்கொண்டார். அவருடைய கதை உலகம் தன்னைப் போன்ற பெண்களின் பக்கம் நின்று பேசக்கூடியனவாகவே இருக்கின்றன. அவரின் கதைகள் எங்கும் சிறு குழந்தைகள், வயது முதிர்ந்த மனுஷிகள், திருமணத்திற்காக காத்திருக்கும் முதிர் கன்னிகள். வாழ்ந்த வாழ்க்கையின்மீது வெறுப்புற்று ஒவ்வாமையோடு வாழ்வினை நகற்றிடும் நடுவயதுப் பெண்கள் என முழுக்க முழுக்க அவரின் கதைப்பரப்பெங்கும் பெண்களே அலைந்து திரிகின்றனர்..

ஆர்.சூடாமணி.
நட்சத்திரம் பொய்க்குமா?, டாக்டரம்மா அறை, ஒரு மாலைப்பொழுதில், இரு தோழிகள் போன்ற அபூர்வமான கதைகளை எழுதியவர் அவர். அவருடைய கதைகளில் சாகாவரம் பெற்ற கதையான நான்காம் ஆசிரமம் கதையைக் குறித்து பேசுவதற்கு ஒருநூறு விஷயங்கள் இருக்கின்றன. கிளாசிக்கல் தன்மையிலான நான்காம் ஆசிரமம் குறித்தான கவனம் அந்த கதை வெளிவந்த எழுபதுகளில் ஏற்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை.
பெண்ணியம் குறித்த உரையாடல் தீவிரமாக நடந்த காலமான இரண்டாயிரத்திற்குப் பிறகான நாட்களில்தான் இந்தக்கதை தீவிர வாசகர்களின் கவனத்திற்கு வந்தது. நான்காம் ஆசிரமம் கதையை தனியாள் நாடகமாகவும் நவீன நாடகக் கலைஞர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப்புள்ளியில் இருந்து நான்காம் ஆசிரமம் கதையின் தனித்தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும். நான்காம் ஆசிரமம் கதை மனித வாழ்க்கைக்கு இந்தியத் தத்துவஞான மரபுகள் முன் வைக்கும் நான்கு நிலைகளைக் குறித்த தத்துவ வியாக்கியானமாகவும் விரிகிறது.

கதை துவங்குவது ஒரு மழைநாளில். மழை தூறியும்,தூறாமலும் இருக்கிற குளிர்ப்பொழுதில் தன்னுடன் வாழ்ந்த பெண்ணொருத்தியின் சடலத்துக்கு எரியூட்டிய ஒரு ஆடவனின் பார்வையில் விரிகிறது கதை. “சங்கரி இறந்து விட்டாள். என்னுடைய மனைவி சங்கரி இறந்துவிட்டாள். அவளுக்கு மகன் இருக்கிறபோதும் அவளுடைய சிதைக்கு நான்தான் எரியூட்டினேன். கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது. தள்ளாடுகிறேன் நான். என்னுடைய பலத்தையெல்லாம் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டிலேயே அவளுடன் வைத்து எரித்து விட்டேனா” எனத் தடுமாறுகிறார் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் புரபெஸரான சங்கரியின் கணவர். தனக்குள் தள்ளாடி சங்கரியோடு வாழ்ந்த வாழ்வின் நாட்களுக்குள் நகர்ந்து போகிறார் அவர். அப்போது அவருடைய முதுகைத்தொட்டு “புரபெஸர் சார் இப்பிடி ஆயிருச்சே. சங்கரி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டாள் எனும் செய்தி கேட்டு என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
நான் உடனடியாக சங்கரியின் உடலைப் பார்த்து துக்கத்தில் இருக்கும் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்துக் கிளாம்பினேன். ஆனாலும், என்னால் வீட்டிற்கு வரமுடியவில்லை. ஏதோ ஒரு மனத்தடை எனக்கு இருந்தது. அதனால்தான் கூட்டத்தோடு கூட்டமாக சுடுகாட்டில் வைத்து அந்த உடலையும், மரணத்திற்குப் பிறகும்கூட முகமெல்லாம் நிறைந்திருந்த அறிவின் முதிர்ச்சியையும் கண்டேன் நீங்கள் சிதைக்கு எரியூட்டினீர்கள். சங்கரியின் உடலுக்கு நீத்தார் சடங்கினைச் செய்ய வேண்டிய அவளுடைய மகன் எவ்வளவு சொல்லியும் வரவில்லை. அவள் மீதான அவளுடைய கோபம் இன்றுவரையிலும் தீரவேயில்லை.” இப்படி சங்கரியின் துர்மரணத்திற்காக கண்ணீர்விடும் அந்த குடும்பத் தலைவன் யார் தெரியுமா? அவன் பெயர் மூர்த்தி. அவன் சங்கரியின் முன்னாள் கணவன். சங்கரிக்கும், மூர்த்திக்கும் பிறந்த குழந்தைகள் மூர்த்தியுடன் இருக்கின்றன. அவர்கள் தங்களை விட்டுச்சென்ற தாயை சந்திக்க கடைசிவரையிலும் விரும்பவேயில்லை.

ஆர்.சூடாமணி.
நான்காம் ஆசிரமம் கதையே சங்கரியின் முன்னாள் கணவரான மூர்த்தியும், இந்நாள் கணவரான் புரபெஸரும் அவளுடைய தனித்த பண்புகளையும், கூர்திறனையும் விதந்து பேசுகின்றனர் .கதையை வாசிக்க வாசிக்க மரணித்துப்போன சங்கரியின் ஆகிருதி விஸ்வரூபம் எடுத்து வாசகர்கள் மனதை நிறைக்கும். தன்னுடைய முப்பத்தி நான்காவது வயதில் தனக்கு பாடம் கற்பித்துக்கொடுக்கிற ஆசிரியரை திருமணம் செய்ய முடிவு செய்கிறாள். அதிலும் அவருக்கு இவளைக்காட்டிலும் இருபது வயது அதிகம். அப்படியானால் அவளை ஈர்த்தது அவருடைய அறிவு மேன்மையின் பக்கங்களே. தத்துவ தர்க்கங்களை துளி துளியாக விளக்கிடும் புரபெஸரின் மீது அவளுக்குள் நிகழ்ந்தது காமம் சார்ந்த உணர்வு அல்ல, அறிவுப்பித்தின் வெளிப்பாடு அது. எப்போது எங்கு எந்தப் புள்ளியில் மனிதர்கள் தங்களுடைய இணையை தேர்வு செய்கிறார்கள். எது பரஸ்பரம் அவர்களுக்குள் ஈர்ப்பை உருவாக்குகிறது என்பதெல்லாம் உளவியல் ஆராய்ச்சி கருவிகளுக்குகூட சிக்காத நூதனமாக இன்றுவரையிலும் இருந்தே வருகிறது.
புரபெஸர் கதைக்குள் வரும் வரியில் சொல்கிறார்.” எங்களுடைய படுக்கையில்கூட அவளும் நானும் புத்தகங்கள், தத்துவ விசாரணைகள், பெரிய பெரிய விஷயங்களின் மீதான விவாத லயிப்புகள், ரசனை பரிமாற்றங்கள் போன்றவற்றில் திளைத்திருப்போம். இந்த தருணங்களுக்காகத்தான் அவள் என்னுடன் இருந்ததாள்”என்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மூர்த்தி சொல்கிறார். ” எனக்கு நிச்சயமாகத் தெரியும் சார் அவளும். நானும் சந்தோசமாக இருந்த நாட்களின் சாட்சிகள் இரண்டு குழந்தைகள். நாட்கள் நகர நகர அவளுக்கு என்னிடம் சில போதாமைகள் இருந்ததை உணர முடிந்தது. அதனால்தான் அவள் என்னிடம் விவாகரத்து கேட்ட போது முதலில் அதிர்ச்சியுற்றாலும் அவளுடைய அறிவு மேதமைக்கு பொருத்தமில்லை நான் எனப் புரிந்து கொண்டேன். நிச்சயமாக சங்கரி தேடியடைந்த விருப்பமிகு நாட்கள் உங்களுடன் இருந்ததுதான் என்கிறார் மூர்த்தி.
கதையின் அடுத்த வரியில் அடுத்த வெடிகுண்டை வைக்கிறார் எழுத்தாளர் .சங்கரியின் கதையைப் பேசிக்கொண்டிருக்கும் மூர்த்தியிடம் சொல்கிறார் புரபெஸர். “நிஜத்தில் என்னைவிட எல்லா விதத்திலும் உயர்ந்தவர் நீங்கள்தான். நீங்கள் ஒரு விதவையை துணிச்சலுடன் திருமணம் செய்தீர்கள்.” இதைக்கடக்க முடியாமல் தடுமாறுகிறோம் நாம். இப்போது பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு முன்பாகவே சங்கரிக்கு முதல் திருமணம் அவளுடைய பதினாறு வயதில் நடந்திருக்கிறது. ஆனால், அவளுடைய கணவன் இறந்து போகிறான். அதன்பிறகே அவளுக்கும் மூர்த்திக்கும் திருமணம் நடக்கிறது. இரண்டு குழந்தைகளும் பிறக்கின்றன. அறிவுத் தேடலுக்கு தடையாக இருக்கும் நித்திய வாழ்வின் தளைகளை அறுத்து வெளியேறி புரபெஸருடன் சேர்ந்து வாழத் துவங்குகிறாள் சங்கரி. கதையின் இந்த அதீத கனத்தையே வாசித்துக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது வாசக மனம். அடுத்த புள்ளி அதனினும் கூடுதலான அதிர்ச்சி பக்கங்களைத் திறக்கிறது.

“அவள் கேட்டவுடன் நீங்கள் அவளுக்காக உங்களின் வாழ்க்கையை விட்டுக்கொடுத்தீர்கள். அவளுக்கு விவாகரத்தும் தந்தீர்கள்.ஆனால், உங்களைப் போல பெருந்தன்மை மனம் கொண்டவனில்லை நான். மிகுந்த சுயநலம் கொண்டவன். உங்களுக்கு மட்டுமல்ல,யாருக்கும் தெரியாது அவள் என்னிடமிருந்தும் விடுதலை கேட்டாள். ஆனால், நான் விவாகரத்து தரவிரும்பவில்லை. மறுத்தேன். எந்த தர்க்க நியாமும் இல்லாத போலி அறிவின் துனை கொண்டு என்னுடைய பக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டேயிருந்தேன். அவளுக்கு என்னை முற்றாக புரிந்துவிட்டது. மரணத்தில் தனக்கான விடுதலையைத் தேடிக்கொண்டாள்.” என்கிறார் புரபெஸர். மூர்த்தியுடன் சேர்ந்து கதை வாசித்துக்கொண்டிருக்கும் நாமும் தடுமாறுகிறோம். அதன்பிறகும் சங்கரியையும் அவளுடைய ஆளுமையின் மேன்மையைப் பற்றியும் இருவரும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை நான்காம் ஆசிரமம் கதையை வாசிக்கிறபோதும் கதையின் கடைசிப்பக்களில் வரும் வரிகளை வாசிக்க முடியாமல் தடுமாறுவேன். அதனையே இந்தக் கட்டுரையின் கடைசி வரிகளாக்கித் தருகிறேன்…
“ஓவ்வொரு மனித உயிரும் நிஜத்தில் தனிதான் மூர்த்தி. எத்தனை தொடர்புகள் வந்தாலும் அதிலெல்லாம் தன்னை உருவாக்கிக்கொண்டு,வளர்ந்து முதிர்ச்சியடைந்து,ஆனால் அவைகளில் இருந்து விலகிவந்து கடைசியில் தனிமையில்தான், தானாக மட்டும் இருப்பதில்தான் உண்மையிலேயே வாழ்க்கை இருக்கிறது போல”. கதை முழுக்க வாழ்க்கை குறித்த தத்துவ விவாதங்களால் நிறைந்திருக்கும் அபூர்வமான செவ்வியல் தன்மையில் அமைந்த கதை நான்காம் ஆசிரமம். கதையை வாசித்து முடித்து பல காலம் ஆனாலும் என் மனதைவிட்டு விலகாத பேராச்சிர்யம். இந்தக் கதையில் பேசிக்கொண்டிருக்கும் இரண்டு ஆண்களும் தன்னுடைய மனைவியைக் குறித்து ஒற்றைக் குறைபாடுடைய வார்த்தைகளையும் பிரயோகிக்காமல் இருந்ததுதான்.
.ம.மணிமாறன் (தொடரும்)
- https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-6/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-7/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-8/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-9/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-10/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-11/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-12/
- https://maduraiseithi.in/manimarans-oru-kathai-13/
- https://maduraiseithi.in/a-series-on-short-stories-written-by-m-manimaran/




கச்சிதமான உளவியல் பார்வை
ஒருவருக்கு ஒருவர் தான் என்ற நம்பிக்கையை சிதைத்து யதார்த்தமான புரிதலை உருவாக்கும் படைப்பு…