
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல பிஹாரில் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைக்க ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் பயண்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுதாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, “டெல்லி மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சக் கூடிய லத்திகள், கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பெல்லட் குண்டு மூலம் சுட்டதால் ஒரு சிறுவன் பார்வை இழந்து இருக்கிறார்” என்று தெரிவித்தனர், அத்துடன் இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பித்தனர்.
அத்துடன் “குவிக்கப் பட்டிருந்த போலீஸாரின் சீருடை யிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. மேலும் போலீஸார் அல்லாத பலர் மாணவர்கள் போராட்டத்தை அடக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர்” என்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ நீட் எதிர்ப்புக்கு போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது என்ன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
மேலும் மாணவர் போராட்டம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டும். போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அதற்கு தடை விதிக்கப்படுகிறது. கிரிமினல், குற்றப்பின்னணி இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



