
தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக 75,064 வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 152 தொகுதிகளில் முதற்கட்டமாக 44 ஆயிரத்து 376 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 23-ம் தேதியன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது இதில் தமிழ்நாட்டில் 85 சதவீதத்திற்கு அதிகமாகவும், மேற்கு வங்காளத்தில் 92 சதவீதத்திற்கு அதிகமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
வாக்குப்பதிவன்று பல்வேறு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.அத்துடன் பல இடங்களில் முறைகேடுகள், கள்ள ஓட்டுகள், இயந்திர கோளாறுகள், வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனால் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், தமிழ்நாட்டின் ஒரு பூத்தில் கூட மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், அங்கிருந்தும் மறுவாக்குப்பதிவுக்கான எந்த பரிந்துரையும் வரவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.



