
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜய், சீமான் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்காக செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எஸ்.சாந்தியிடம் வேட்பு மனுவில் கையெழுத்திட்டு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய என்னை அமோகமாக வெற்றி பெற வைப்பார்கள். எல்லா தொகுதிகளிலும் எப்போதும் போல எங்கள் பிரசாரம் வலுவாக இருக்கும். எத்தனை கூட்டணி வந்தாலும் திமுக கூட்டணிக்குதான் வெற்றி சாதகமாக இருக்கிறது. திமுக கூட்டணி 200- க்கும் அதிகமான தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.
வேட்புமனு தாக்கல் செய்த கையோடு திறந்த வேனில் நின்றவாறு மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதிக்குச் சென்று திமுகவின் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்து வைத்தார்.

விஜய் மனு தாக்கல்
இந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக நடிகர் விஜய்யின் தவெக போட்டியிடுகிறது. திருச்சி, கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். அவர் பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் கீதாவிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்ட விஜய், வாக்குகேட்டு பேசினார். அவரை காண ஏராளமானோர் பெரம்பூரில் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சீமான் மனு தாக்கல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் அலுவலரிடம் இன்று மனுதாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக சீமான் மனைவி கயல்விழி மனுதாக்கல் செய்தார்.



