
கனிம மற்றும் மண் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று சட்டமன்ற வேட்பாளர்களுக்கு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அதன்படி, கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். தொல்லியல் முனைவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்0பத்த அறிக்கையை பல ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. அந்த அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். மதுரையில் உலகத் தரமான தொல்லியல் & அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை நிறுவ வேண்டும்.
மதுரையின் பண்டைய தொல்லியல் இடங்களைப் பார்ப்பதற்காக விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கும் அவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் இலவச போகுவரத்துடன் கூடிய தொல்லியல் சுற்றுலா ஏற்பாடு செய்ய வேண்டும். வைகை ஆற்றில் கழிவுநீர், குப்பை சேராமல் தடுக்க வேண்டும். மதுரையின் உள்ளே சென்று வெளியேறும் கிருதுமால் உள்ளிட்ட சுமார் ஏழு நீர்வழிக் கால்வாய்களை தூர்வாரி கழிவு நீர் கலக்காமல் பராமரிக்கப்படவேண்டும்
சிவரக்கோட்டை, மேலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கண்மாய்களில் இருந்து மண் எடுப்பதை நிறுத்த வேண்டும். சுயாதீன விசாரணை ஆணையத்தை அமைத்து, சட்டவிரோதச் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும். மாவட்ட சுற்றுச்சூழல் குழுவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களை இணைக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வீடு அளவில் திடக் கழிவுகளைப் பிரித்தல், மறுசுழற்சியை கட்டாயமாக்க வேண்டும். மதுரை புறநகர் பகுதிகளுக்கு போதுமான பேருந்து வசதி செய்து தரவேண்டும். குறிப்பாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் வழித்தடங்களுக்கென 100 புதிய மின்னியக்கப் பேருந்துகளை (electric buses) அறிமுகப்படுத்த வேண்டும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்களுக்கான இலவச சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.



