
செங்கோட்டையன்
விஜய் பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது என்று தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழக வெற்றி கழகம் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நல்லாட்சி தருவதற்கும், தூய்மையான ஆட்சியை கொடுப்பதற்கும் தவெகவால் மட்டுமே முடியும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும் அரசாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசாக தவெக அரசு இருக்கும் என்பதை விஜய்யின் ஒவ்வொரு பேச்சும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்பவர்கள், ஆட்சி செய்தவர்கள் ஆகியோரை தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆட்சி வேண்டும் என்பதே மக்களின் கனவாக உள்ளது. எனவே, வருகின்ற 2026-ல் விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மக்கள் சக்தி அவருக்கு பின்னால் இருக்கிறது. கோபிச்செட்டிப்பாளையத்தில் 8 முறை , சத்தியமங்கலத்தில் ஒரு முறை என ஒன்பது முறை வெற்றி பெற்றவன் நான். இப்போது தவெக சார்பில் கோபியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. அதிமுக இயக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டவன் நான். கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என வரலாற்றில் இல்லாத அளவிற்கு தூக்கி எறியப்பட்டேன். அதனால்தான், தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.



