
சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே வெற்றி பெற்ற 2 தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளை அடையாளம் காண்பதில் நீடித்த நீண்ட நெடிய பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 28) முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், எங்களது கட்சி விரும்பிய 5 தொகுதிகள் கிடைத்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முறைப்படி அறிவிப்பார் என்றார். சென்னையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, அதை முதலமைச்சர் மாலை தெரிவிப்பார் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி கந்தவர்க்கோட்டை, கீழ்வேளூர், சிங்காநல்லூர், விளவங்கோடு, வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இதில் ஏற்கெனவே அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற கந்தர்வக்கோட்டை, கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



