
மெட்டா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வரும் 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக மெட்டா நிறுவனத்தில் சுமார் 78,865 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் அதிகம் ஊதியம் பெறும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களை பணியமர்த்துவதால் ஏற்படும் கூடுதல் செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை அதாவது 8 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் இன்று (ஏப்ரல் 24) அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஏ.ஐ. கட்டமைப்பை மேம்படுத்த மெட்டா நிறுவனம் சுமார் 135 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியாக திகழும் ஆரக்கிள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆரக்கிள் நிறுவனம், கடந்த மாதம் உலக அளவில் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
இதில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 12,000 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அமெரிக்காவில் பணியாற்றி வரும் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு தாமாக முன்வந்து பணியில் இருந்து விலகும் (லே ஆப்) வாய்ப்பை வழங்கியுள்ளது. மென்பொருள் நிறுவனங்களின் தொடர் பணிநீக்க நடவடிக்கையால் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



