திமுக கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பிரதமர் நரேந்திர மோடி

திமுக உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி குழுமத்தின் சார்பில் எழுச்சி பெறும் பாரதம் என்ற உச்சி மாநாடு நிகழ்சசியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,” ஒரு தேசத்தில் வலிமை திடீரென வெளிப்படுவதில்லை; அது தலைமுறை தலைமுறையாகக் கட்டமைக்கப்படுகிறது. அது அறிவு, பாரம்பரியம், கடின உழைப்பு மற்றும் அனுபவம் மூலம் உருவாக்கப்படுகிறது. நம் நம்பிக்கை தாழ்ந்து இருக்கும்போது, சாதனைகளும் மட்டுப்படும். வெளிநாட்டு தொழில்நுட்பங்களை காப்பி அடிப்பது, வெளிநாட்டு ஒப்புதலுக்காக காத்திருப்பது, அரசியல் அல்லது புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் நம்மை அடிமைப்படுத்திவிடும். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும், இந்தியாவால் இந்த அடிமைத்தன மனநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அதற்கான விலையை நாம் இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மேக் இன் இந்தியா
வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதற்கான பதில் இந்தியாவின் நம்பிக்கையில் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், நாட்டில் புதிய ஆற்றல் பாய்ந்துள்ளது. இழந்த வலிமையை மீண்டும் பெற இந்தியா இப்போது பாடுபடுகிறது.மேக் இன் இந்தியாவை வலியுறுத்தினோம், வங்கி முறையை வலுப்படுத்தினோம், இரட்டை இலக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினோம், இந்தியாவை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றினோம். இந்தியாவின் இந்த பலம்தான் வளர்ந்த நாடுகளே நம்முடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய முன்வர முக்கியமான காரணங்கள். ஒரு காலத்தில் இந்தியா புதிய தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தும் நாடாக இருந்தது.

இன்று, இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாகவும், புதிய தரங்களை நிர்ணயித்தும் வருகிறது. நமது சொந்த பலத்தை நாம் உணர்ந்ததால் இது நடந்துள்ளது. நாம் பெருமையுடன் முன்னேறும்போது, உலகம் நம்மை பார்க்கும் விதமும் மாறுகிறது. இன்று இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் உலக அளவில் பேசப்படுகின்றன. அண்மையில் நடந்த ஏஐ உச்சி மாநாடு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நேர்மையான நோக்கமே தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மிக முக்கியமான நிபந்தனை. காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும் இதில் தோல்வியடைந்தன. அவர்கள் ஒருபோதும் நேர்மையுடன் பணியாற்றவில்லை.

திமுக கூட்டணி
ஏழைகள் படும் கஷ்டங்கள் குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உதாரணமாக, வங்காளத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. நேர்மை இருந்திருந்தால், ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அவர்கள் தடுத்திருப்பார்களா?. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில், ஏழைக் குடும்பங்களுக்கு சுமார் 9.5 லட்சம் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இந்த வீடுகளைக் கட்டுவதில் திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. ஆக திமுக அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக உள்ளதை புரிந்துகொள்ள முடியும்” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *