
மத்திய வெளியுறவு அமைச்சகம்.
வளைகுடாவில் நடைபெற்று வரும் போருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய மோதல் குறித்து நாங்கள் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தோம். அந்த நேரத்தில் கூட, பதற்றத்தைத் தவிர்த்து, நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் இந்தியா அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியது. துரதிர்ஷ்டவசமாக, புனித ரமலான் மாதத்தில், பிராந்தியத்தில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்துள்ளது.-
1கோடி இந்தியர்கள்
சமீப நாட்களில், மோதல் தீவிரமடைவது மட்டுமின்றி, அது மற்ற நாடுகளுக்கும் பரவுகிறது. இயல்பு வாழ்க்கையம், பொருளாதார நடவடிக்கைகளும் ஸ்தம்பித்திருந்தாலும், அழிவுகளும் இறப்புகளும் அதிகரித்துள்ளன. பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் முக்கிய பங்கு கொண்ட ஒரு நெருங்கிய அண்டை நாடாக, இவை மிகுந்த கவலையை அளிக்கிறது. வளைகுடா பிராந்தியத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்திய குடிமக்கள் வசித்து வருவதுடன், அங்கு பணி புரிந்தும் வருகிறார்கள். அவர்களது பாதுகாப்பும், நல்வாழ்வும் மிகுந்த முன்னுரிமை வாய்ந்ததாகும். அவர்களிடையே எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செயல்பாட்டிலும் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது. நமது வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலிகளும் இந்த புவிசார் பகுதியைக் கடந்து செல்கின்றன.
முற்றுப்புள்ளி
எந்தவொரு பெரிய இடையூறும், இந்தியப் பொருளாதாரத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உலகளாவிய பணியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கும் ஒரு நாடாக, வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. ஏற்கனவே, கடந்த சில நாட்களில் இதுபோன்ற தாக்குதல்களின் விளைவாக சில இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். இத்தகைய பின்னணியில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமான தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. மோதலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஏற்கெனவே, பல உயிர்களை நாம் இழந்திருக்கிறோம், அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலந்துரையாடல்
பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், இந்திய குடிமக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதுடன், தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன. மோதலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் தூதரக அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இந்த மோதலின் பல்வேறு தூதரக அம்சங்களை நிவர்த்தி செய்வதில் அவை தொடர்ந்து முனைப்புடன் செயல்படும்.
இந்தப் பிராந்தியங்களின் அரசுகளுடனும், பிற முக்கிய நட்பு நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் தொடர்புடைய நாடுகளின் பிரதமர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். மத்திய அரசு சூழ்நிலையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேச நலனைக் கருத்தில் கொண்டு உரிய முடிவுகளை எடுக்கும்” என்று கூறியுள்ளது.



