
பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார்.
பிஹார் மாநில முதலமைச்சர் பதவியை மூன்று மாதங்களில் ராஜினாமா செய்யப்போவதாக நிதீஷ் குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக 89 தொகுதிகளிலும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இருப்பினும், நவம்பர் 20-ம் தேதி பத்தாவது முறையாக நிதீஷ் குமார் பிஹாரின் முதலமைச்சராக பதவியேற்றார். மேலும், பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், “இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பிஹார் மக்கள் என் மீது நம்பிக்கையும், ஆதரவையும் அளித்து வருகிறீர்கள். நீங்கள் வைத்த நம்பிக்கையால் தான் பிஹார் மாநிலத்துக்கு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய முடிந்தது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை எனது மனதில் இருந்து கொண்டே வருகிறது. இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நான் பிஹார் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். எனவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். பிஹார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். பிஹாரில் புதிதாக அமையும் அரசுக்கு எனது முழு ஆதரவும், வழிகாட்டுதலும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.



