மாபெரும் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி… குவியும் வாழ்த்துகள்!

டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய ரன் குவிப்பு
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர்கள் நியூசிலாந்து பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர். இதனால் ரன்ரேட் ஜெட் வேகத்தில் ஏறியது. குறிப்பாக சஞ்சு சாம்சன் நியூசிலாந்து வீரர்களின் பந்துகளை பதம் பார்த்தார். இதன் மூலம் அவர் 89 ரன்களையும், இஷான் கிஷன் 54 ரன்களையும், அபிஷேக் சர்மா 52 ரன்களையும் குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சுருண்ட நியூசிலாந்து
பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையையும் வென்றது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 பேரை பெவிலியனுக்கு அனுப்பிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார். மூன்றாவது முறையாகவும், தொடர்ந்து இரண்டு முறையும் கோப்பையை வென்ற அணி என்ற பெருமை பெற்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “சாம்பியன்கள், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்,. இந்த குறிப்பிடத்தக்க வெற்றி திறமைகள், உறுதிப்பாடு மற்றும் குழுப்பணியை பிரதிபலிக்கிறது. இத்தொடர் முழுவதும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பியுள்ளது. வாழ்த்துகள் டீம் இந்தியா” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில்,”மீண்டும் ஒருமுறை இந்தியா சாம்பியனானது. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள் சொந்த மண்ணில் கோப்பையை தக்கவைத்து, மக்கள் கொண்டாட மற்றொரு மறக்க முடியாத தருணத்தை வழங்கிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்தியஅணிக்கு வாழ்த்துக்கள். கடந்த மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன், அதிகாரத்துடனும், நிதானத்துடனும் பேட்டிங் செய்ததையும், மிக முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டதையும் பார்ப்பது உற்சாகமாக இருந்தது. தொடர் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை ஒரு மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்ற அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *