
காப்பீட்டு பணத்தை பெறுவதற்காக கணவரை ஆட்களை ஏவி மனைவி கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், எம்.வி. பாலம் அருகே கம்மம்-குரவி பிரதான சாலையில் அடையாளம் தெரியாத ஒரு உடல் கிடப்பதை உள்ளூர்வாசிகள் கவனித்தனர். அன்னம் அறக்கட்டளையின் தலைவர் அன்னம் ஸ்ரீனிவாச ராவ் தலைமையிலான உறுப்பினர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து விசாரணை நடத்தினர்.
அப்போது இறந்தவர் கம்மம் நகரின் காந்திநகரைச் சேர்ந்த ரவி(42) என்று அடையாளம் காணப்பட்டார். ஆட்டோ டிரைவரான ரவி விபத்தில் இறந்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், ரவி குடும்பத்தினர், அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில்,” ஆட்டோ டிரைவரான ரவிக்கும், பிரசாந்தி என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவி இறந்த பின் அவரது பிரசாந்தியும், உறவினரான ஸ்ரீனிவாஸ் என்பவரும் தலைமறைவாகினர்.இது தொடர்பாக விசாரித்த போது, ரவி மதுவுக்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், ரவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் விரைவில் இறந்து விடுவார் என கருதி அவரது பெயரில், அவரது மனைவி பிரசாந்தி காப்பீடு செய்தார். ஆனால், ரவி இறக்காததால் காப்பீட்டுப் பணத்தை பெற தனது கணவரை கொலை செய்ய பிரசாந்தி முடிவு செய்துள்ளார்.
அதன்படி ரவியின் உறவினரான சீனிவாஸ், அவரது நண்பர்களான ராஜ்குமார், வெங்கடேஷ், ராம்பாபு ஆகியோரை பிரசாந்தி அணுகினார். அவர்களும் ரவியை கொலை செய்ய ஒப்புக் கொண்டனர். அதன்படி மார்ச் 2-ம் தேதி இரவு ரவியை அவரது ஆட்டோவில் கம்மம் குரவி பிரதான சாலையில் உள்ள எம்.பி. பாலம் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து ரவியை மது குடிக்க வைத்தனர். மது போதை தலைக்கு ஏறிய ரவி சாலையில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்.
அப்போது ராஜ்குமார் தனக்குச் சொந்தமான காரை வேகமாக ஓட்டி வந்து ரவி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ரவியின் பிணத்தை சாலை ஓரத்தில் வீசிவிட்டு தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது” என்றார். இதையடுத்து போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து பிரசாந்தி, ஸ்ரீனிவாஸ், ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் கம்மம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



