
இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவரான கே.என்.பணிக்கர் என்ற கண்டியூர் நாராயண பணிக்கர் காலமானார். அவருக்கு வயது 89.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூரில் தைக்காட்டில் உள்ள கண்டியூரைச் சேர்ந்த கிருஷ்ணன் நாயர், இச்சுக்குட்டி அம்மாவின் மகனாக 1936-ம் ஆண்டு பிறந்த கே.என்.பணிக்கர் சாவக்காடு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியும், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் இளங்கலை படிப்பையும் முடிந்தார்.ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். பின்னர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராக பணியாற்றினார்.
கே.என்.பணிக்கர் காலடி ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்தார். பின்னர் 12 ஆண்டுகள் கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக ஆனார். உயர்கல்வி கவுன்சிலின் முதல் தலைவராக இருந்தார். அவர் பல வரலாற்று படைப்புகளை எழுதியுள்ளார். மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கோட்பாடுகளுக்கான தளராத கலகக்குரலாகச் செயல்பட்டவர் பணிக்கர். காலனித்துவ இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாச்சார வரலாறு குறித்த சிறப்பான பணிகளுக்காக இந்தியா முழுவதும் நன்கு அறியப்படுபவர் கே.என்.பணிக்கர்.
குறிப்பாக வரலாற்றை மதவாத அடிப்படையில் திரித்து, வகுப்புவாத அரசியலுக்குப் பயன்படுத்தும் போக்கிற்கு எதிராக இடைவிடாது, அறிவுத்தளத்தில் இயங்கிய பணிக்கர் எழுதிய நூல்கள் வகுப்புவாதத்திற்கு எதிராக போராடி வருபவர்களுக்கு போர்க்கருவிகளாக திகழ்கின்றன. இந்துத்துவா தேசியவாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்புவதற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்த பணிக்கர், நவீன இந்திய வரலாறு, இந்திய மார்க்சிய வரலாற்றை வளப்படுத்திய பெருமைக்குரிய தலைவராவார்.
இவரின் இந்திய வரலாற்றுப் பணிகளைப் பாராட்டும் வகையில், ‘கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்’ சார்பில் ஏப்ரல் மாதம் பணிக்கரின் 90-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.என்.பணிக்கர் சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 9) உயிரிழந்தார். அவரின் மறைவு வரலாற்றுத் துறைக்கு பேரிழப்பாக அமைந்துள்ளதாக அக்கவுன்சில் குழுவினர் தெரிவித்துள்ளனர்.



