
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி) நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த 28-ம் தேதி முதல் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதி அரேபியா, ஈராக், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, ஈரான் மற்றும் ஓமன் இடையிலான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களில் செல்கிறது. உலக கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம் அந்த வழியாக செல்கிறது.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு
ஆனால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. அதனால் அந்த வழியாக கப்பல்கள் செல்வது இல்லை. அந்நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் எரிபொ ருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.மேலும், இந்த போர், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளையும் சூழ்ந்து விட்டதால், உற்பத்தி குறைந்து விட்டது.
இஸ்ரேல் தாக்குதல்
ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கச்சா எண் ணெய் ஏற்றுமதி செய்ய முடியாதநிலையில், சேமிப்பு கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. எனவே, கச்சா எண்ணெய் உற்பத்தியை அந்நாடுகள் குறைத்து விட்டன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. அதனால் ஈரானில் இருந்து நாள்தோறும் 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் உலகின் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைது விட்டது. அதனால் நேற்று கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் வரும் 16-ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு 2 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அலுவலகங்கள் நான்கு நாட்கள் தான் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்பி நிறுவனம் விளக்கம்
இந்த நிலையில் இந்தியா முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் குறுஞ்செய்தி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில்,” இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம். நாட்டில் தேவைக்கு அதிகமாக எரிபொருள் கையிருப்பில் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.



