
வெளிப்படையாக நான் சொன்னால் மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என்று சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இன்று (மார்ச் 10) அவர் வெளியிட்டுள்ள கருத்து பாஜகவினரை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் பதவியேற்றுள்ள பிரதமர் மோடி, ஏன் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பார்த்து பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்க நண்பர்களிடம் பேசிய போது மோடி சமரசம் செய்து கொண்டதாக சொல்கின்றனர். அது எதனால்? யாரால்? என்பதை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது.
அப்படி சொன்னால் மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிடும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் உலக நாடுகளை உலுக்கிய அமெரிக்காவின் எப்ஸ்டீன் கோப்புகளின் சில இடங்களில் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக கூட்டணி அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இன்றைய எக்ஸ் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



