
13 ஆண்டுகளாக சுயநினைவின்றி கோமா நிலையில் உள்ள 32 வயதான இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கல்லூரி மாணவர்
உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரீஷ் ராணா ( 32). இவர் 2013- ம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்
விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர் கோமா நிலைக்கு சென்றார்.
13 ஆண்டுகள் சிகிச்சை
இதையடுத்து அவரது பெற்றோர் ராணாவை பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சுமார் 13 ஆண்டுகளாக வீட்டிலேயே ஹரீஷ் ராணாவை வைத்து அவரது பெற்றோர் பராமரித்து வருகின்றனர். ஹரீஷ் ராணாவிற்கு உத்தரப்பிரதேச அரசு, மருத்துவர்கள், பிஸியோதெரபிஸ்ட்டுகளை வைத்து நாள்தோறும் அவரது வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில், தங்கள் மகனை இந்த சூழலில் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. அவர் மிகவும் அவதிப்படுகிறார். எனவே, அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ராணாவின் பெற்றோர், கடந்த 2025 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கருணைக் கொலை செய்ய மனு
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 13-ம் தேதி ஹரீஷின் குடும்பத்தினரை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேரில் அழைத்துப் பேசினர். அப்போது அவரது குடும்பத்தினர், ஹரீஷ் நாள்தோறும் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. அவர் படும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நீதிபதிகள் கண்ணீர்
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அமர்வு முன்பு இன்று (மார்ச் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்ணியமாக மரணமடைவதும் அடிப்படை உரிமை தான் என்று கூறி ஹரீஷ் ராணாவின் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது நீதிபதிகள் இருவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஏற்கெனவே, 2018, 2023-ம் ஆண்டுகளில் ஹரீஷை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. தற்போது மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை முதல் முறையாக வழங்கியுள்ளது. ஹரீஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை உடனடியாக நிறுத்தப்பட்டு அவர் இயற்கையாக மரணமடைய உள்ளார்.



