
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கையை ஏற்று ஹோர்முஸ் நீரிணையை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த 28-ம் தேதி முதல் தாக்குதலைத் தொடங்கின. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் டிரோன், ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது அடுத்தடுத்த தாக்குதலை ஈரான் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் அடைத்தது. இதனால் பெட்ரோல், டீசல், எரிவாயு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கையை ஏற்று இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், ஈரான் அனுமதி தந்ததையடுத்து இந்திய எண்ணெய் கப்பல்களான புஷ்பக் மற்றும் பரிமல் ஆகியவை ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வருகின்றன. ஈரான் தற்போது அனுமதி வழங்கியதால் இந்தியாவில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



